குடிவரவு கொள்கையில்; என்னை விட நீங்கள் மோசமானவர் –டிரம்ப்

குடிவரவு கொள்கையை பொறுத்தவரை நீங்கள் என்னை விட மோசமானவர் என அமெரிக்க ஜனாதிபதி  டெனால்ட் டிரம்ப் அவுஸ்திரேலிய பிரதமரிற்கு தெரிவித்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது

கடந்த ஜனவரியில் இருவரிற்கும் இடையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் குறித்தே புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலை டிரம்ப் இடைநடுவில் துண்டித்துக்கொண்டார் என்பதும்  குறிப்பிடத்தக்கது

இந்த தொலைபேசி உரையாடல் குறித்த புதிய தகவல்களை வோசிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலின் போது மனஸ் மற்றும் நவ்று முகாம்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குற்றவாளிகள் என கருதிய டிரம்ப் அவுஸ்திரேலியா குற்றவாளிகளை அமெரிக்காவிற்கு அனுப்ப முயல்வதாக தெரிவித்துள்ளார்.

படகுகளில் வருபவர்கள் மீது ஏன் பாரபட்சம் காட்டுகின்றீர்கள் ஏன் அவர்களை உங்கள் சமூகத்தில் ஏற்பதில்லை என அவுஸ்திரேலியா பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ள டிரம்ப்   அகதிகளை தான் ஏற்கப்போவதில்லை என்றும்   தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் தெளிவு படுத்த முயன்றவேளை   நீங்கள் குடியேற்றவாசிகள் விடயத்தில் என்னை விட மோசமானவர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்