80,000 ஆண்டு பழைய முதுமக்கள் தாழி… அவுஸ்ரேலியா கீழடியில் நடப்பது என்ன?

“கடக்… தடக்…டொம்… தம்…. பட்ட்…. டமார்…” இப்படி எந்த சத்தங்களும் அங்கு கேட்கவில்லை. மிக மெதுவாகவும், ஜாக்கிரதையாகவும் அந்த இடத்தைத் தோண்டிக்கொண்டிருந்தனர். ஓர் இனத்தின் மிகப் பெரிய வரலாற்றை ஆராய இருக்கிறோம் , அது மனித இனத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கலாம் என்ற ஆர்வம் இருந்தாலும், இது குறிப்பிட்ட இனத்தின் மண், அவர்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக இதைத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்கிற பொறுப்பு அவர்களின் ஒவ்வொருவரின் உளிச் சத்தத்திலும் கேட்கவே செய்தது. சிறு, சிறு கற்களைக் கூட அந்த மிருதுவான ப்ரெஷ் கொண்டு சுத்தப்படுத்தினர். காரணம், அங்கிருந்த ஒவ்வொரு கல்லும், மண்ணும் பல ஆயிரம் ஆண்டுகளின் வரலாறுகளைத் தனக்குள் பொதித்து வைத்திருக்கின்றன. இது சத்தியமாக கீழடி இல்லை. இது ஆஸ்திரேலியாவின் கக்காடு தேசியப் பூங்கா ( Kakadu National Park ).

 

ஒவ்வொரு நாளும் அந்த மண்ணிலிருந்து தாங்கள் கண்டெடுத்தை அந்த வெள்ளை நிறத்தோல் கொண்ட மனிதன், அந்தக் கருப்பு நிறத் தோல் கொண்ட மனிதனிடம் காட்டி விஷயங்களை விவரிக்கிறார். அந்தக் கருப்பு நிறத்தோல் கொண்ட மனிதனின் அனுமதி கிடைத்தால் தான் அடுத்த நாளுக்கான ஆராய்ச்சியை அந்த வெள்ளை நிறத்தோல் கொண்ட மனிதன் மேற்கொள்ளலாம்.

ஆஸ்திரேலிய அகழ்வாராய்ச்சியும், கீழடியும்

வெள்ளை தேசங்களின் அதே கருப்பு வரலாறுதான் ஆஸ்திரேலியாவிலும். ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகளான “அபாரிஜின்களை” ஒடுக்கிவிட்டு, நிலங்களை அபகரித்தனர் வெள்ளையர்கள். ஆனால், பல நூறு ஆண்டுகளைக் கடந்து இன்று,  பூர்வகுடிகளைத் தங்கள் மூதாதையர்கள் வஞ்சித்ததையும், கொடுமைப்படுத்தியதையும் நினைத்து வருந்துகிறது பெரும்பாலான இன்றைய ஆஸ்திரேலிய தலைமுறை.

1982ல் அபாரிஜின்களின் பூர்வீக இடமாகக் கருதப்படும் ” மட்ஜெட்பிப் ” ( Madjedbebe ) எனுமிடத்தில் ஒரு யுரேனிய சுரங்கத்தை அமைத்தது ஆஸ்திரேலிய அரசாங்கம். ஆனால், இந்தப் பகுதிகளில் தங்கள் பாட்டன், முப்பாட்டன்களின் மொத்த வரலாறும் இருக்கிறது. இந்தப் பகுதியை சீர்குலைக்காதீர்கள் என்று அவர்கள் அத்தனைச் சொல்லியும், அரசாங்கம் கேட்கவில்லை. பின்னர், தொடர் போராட்டங்களைத் முன்னெடுக்க, அரசாங்கம் ஒரு கட்டத்தில் அந்தச் சுரங்கங்களை மூடின. பின்னர், அங்கு மிகப் பெரிய வரலாற்றுப் பொக்கிஷங்கள் இருப்பதை உணர்ந்து அந்தப் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ள முடிவு செய்கிறது ஆஸ்திரேலிய அரசு.

ஆஸ்திரேலிய அகழ்வாராய்ச்சியும், கீழடியும்

ஆட்சி அதிகாரம் இருப்பதால் யாரையும் நொறுக்கலாம் என்ற துண்டுச் சீட்டு விநியோகத்தவரைக் கூட குண்டர் சட்டத்தில் போடலாம் என்பதெல்லாம் வளர்ந்த எந்த நாகரித்திலும் நடப்பதில்லை. ஆஸ்திரேலியர்கள் வளர்ந்த நாகரிகத்தைச் சேர்ந்தவர்களாக சில விஷயங்களில் மாறிவிட்டதால், அந்த நிலத்தின் பூர்வகுடிகளான “மிரார்” ( Mirarr ) இன மக்களிடம், அந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள அனுமதி கோருகிறார்கள். சில விதிமுறைகளைக் கூறி, ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகிறது அந்தப் பூர்வகுடி. அதாவது,

1. அந்த இடத்தை மிக பத்திரமாக கையாள வேண்டும்,

2. ஒவ்வொரு நாளும் கிடைக்கும் பொருள்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்களைத் தொடர்ந்து தெரியப்படுத்த வேண்டும்,

3. அங்கு எடுக்கும் எந்தப் பொருளையும், அரசாங்கம் எடுத்துக்கொண்டு போகக் கூடாது. அது அந்தப் பூர்வகுடிகளின் அருங்காட்சியகத்திற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கும்,

4. எந்தவித ஆராய்ச்சிக்கும் பொருள்களை வேறு நாட்டிற்கோ, பிற ஊர்களுக்கோ கொண்டு செல்லக்கூடாது.

இப்படியாக சில நிபந்தனைகளோடு அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஆஸ்திரேலிய அபாரிஜின் அகழ்வாராய்ச்சியும், கீழடியும்

கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த ஆராய்ச்சியில் இதுவரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான முதுமக்கள் தாழிகளைக் கண்டெடுத்துள்ளனர்.  இதை ஒரு இருட்டறையில், சில ஒளிகளைப் பாய்ச்சி ” ஆப்டிக்கலி ஸ்டிமியூலேடட் லுமினெசென்ஸ் ” (Optically Stimulated Luminescence ) எனும் தொழில்நுட்பத்தைக் கொண்டு அதன் காலகட்டத்தை வரையறுக்கின்றனர். இந்த ஆராய்ச்சி அபாரிஜின்கள் குறித்து இதுவரை வெள்ளையர்களால் சொல்லப்பட்ட பல விஷயங்களையும் பொய் என்று நிரூபணமாக்கியுள்ளது.

முதலில் அபாரிஜின் இனத்தின் வரலாறு 40 ஆயிரம் ஆண்டுகளிற்குள்ளாகத் தானிருக்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இந்த முதுமக்கள் தாழிகளோ 80 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாக  இருக்கின்றன.  அதேபோல், ஒரு காலத்தில் ” மெகா ஃபெளனா ” ( Mega Fauna ) என்ற மிருக இனங்கள் இருந்ததாக சொல்லப்படும். அதாவது, யானைகளே மிகப் பெரியளவிலிருக்கும் மாமோத் போன்ற பெரிய, பெரிய மிருகங்கள் உலகில் இருந்ததாக சொல்லப்படும். அது போன்ற பெரிய மிருகங்களை முற்றிலுமாக அழித்ததில் அபாரிஜின்களுக்குப் பெரிய பங்கு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்த அகழ்வாராய்ச்சி அது பொய் என்று சுட்டிக் காட்டியுள்ளது. அபாரிஜின்களும், மெகாஃபெளனாக்களும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஆண்டுகள் வரை ஒன்றாக இருந்திருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தங்கள் இனத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் அபாரிஜின் மக்கள்.

கீழடியும், ஆஸ்திரேலிய அகழ்வாராய்ச்சியும்

” நாங்கள் எப்போதும் இங்கேயே இருக்க விரும்புகிறோம். நாங்கள் இங்கேயே புதைக்கப்பட்டிருக்கிறோம். எங்கள் நிலத்திலேயே வாழ்ந்து, மடிய விரும்புகிறோம். எங்கள் குழந்தைகளுக்கும் இதையே கற்றுக்கொடுக்க விரும்புகிறோம். இதன் மூலம் எங்கள் மூதாதையர்களின் கதைகள் தலைமுறைகளுக்குக் கடத்தப்படும். ”

இது அந்த இனத்தின் மிகப் பிரபலமான ஒரு பழமொழி. தாங்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்த ஓர் இனத்தோடு, இன்று இணக்கமாக இருக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆஸ்திரேலிய வெள்ளையர்கள். ஆனால், இங்கு ?… இந்தக் கட்டுரையை கீழடி நிகழ்வுகளோடு நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தால், அதற்கு நான் பொறுப்பல்ல…