பண்ணையாரும் பத்மினியும்

14-pannaiyarum-padminiyum-11-6அண்மையில் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்த திரைப்படங்களுள் ஒன்றாக பண்ணையாரும் பத்மினியும் விளங்குகின்றது. புறக்கணிக்க முடியாத படங்களுள் ஒன்றாக மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறுவதற்கு அப்படத்துக்கான விளம்பரமும் ‘விஜய் சேதுபதி’ என்ற நடிகனின் பெயரும் முக்கிய காரணம்.
இப்போதெல்லாம் விஜய் சேதுபதியின் படங்களென்றால் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களாக பெரும்பாலான மக்கள் மத்தியில் பதிந்துவிட்டன. தனியே வெகுசனங்களின் இரசனையை மட்டுமன்றி தீவிரமான சினிமா நுகர்வோரையும் கவர்ந்திழுக்கும் படங்களாகவே விஜய் சேதுபதியின் படங்கள் அமைந்துவிடுகின்றன. தென்மேற்குப் பருவக்காற்று, நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சூது கவ்வும் என்று அவரது திரைப்பயணத்தின் மைற்கற்கள் பலரையும் வசியப்படுத்தியுள்ளன. அவ்வகையில் இப்போது விஜய் சேதுபதியின் பெயர் நம்பிக்கைக்குரிய முதலீடாகவே அமைந்துவிட்டது. அவ்வகையில் பண்ணையாரும் பத்மினியும்கூட அவரின் பெயரால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.

இக்கதை ஏற்கனவே இதே பெயரில் குறும்படமாக வந்தது தான். சில நிமிடக் குறும்படத்தை கிட்டத்தட்ட இரண்டரை மணிநேர முழுநீளப் படமாகக் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். இது அவ்வளவு இலகுவான காரியமன்று என்பது மட்டும் உண்மை. குறும்படத்தை அதிகளவு விரும்பியவர்கள் இது முழுநீளத் திரைப்படமாக வருவதை அறிந்து கவலை வெளியிட்டிருந்தார்கள் என்றபோதும்கூட துணிவாக தனது முயற்சியில் இறங்கி வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் என்றுதான் சொல்ல வேண்டும்.

வசதிகளேயற்ற ஒரு கிராமத்தில், பண்ணையாருக்கு வந்து சேரும் ஒரு காரும் அந்தக் காரோடு ஐக்கியமாகவிட்ட மனிதர்களும், கிராமமும் என்ற களத்தை மையமாக வைத்து முழுக்கதையும் நகர்கின்றது. படத்தின் மையப்பாத்திரம் அந்தக் கார்தான். கார் மீது மோகம் என்பதைத் தாண்டி அன்பைப் பொழிகிறார்கள் பண்ணையாரும் முருகேசனும். காருக்கு ஒன்று என்றால் உருகுகிறார்கள். தன் திருமண நாளுக்குள் காரை ஓட்டக் கற்றுக்கொண்டு மனைவியைக் கோயிலுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்பது பண்ணையாரின் ஆசை. கணவன் ஓட்டினால்தான் காரில் ஏறுவேன் என்பது மனைவியின் பிடிவாதம். கார் ஓட்டக் கற்றுக் கொடுத்தால், பண்ணையார் தன்னைக் காரிடமிருந்து பிரித்துவிடுவார் என்பது முருகேசனின் அச்சம். இந்த முக்கோணச் சிக்கலை நன்றாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். மூவரும் இதை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்கள்.

நாயகனுக்கு ஒரு நாயகி தேவை, அவர்களுக்கிடையில் ஒரு காதல் தேவை, இரண்டு பாட்டுக்களாவது அவர்களிடையில் இருக்க வேண்டும் என்ற தமிழ்ச்சினிமாவின் வரையறைக்குட்பட்டு இப்படத்தில் விஜய் சேதுபதிக்குக் காதலியும் காதலும் இருக்கிறார்கள், கூடவே பாட்டும். குறும்படத்தை நீளமாக்க இவை செருகப்படுவது தவிர்க்க முடியாததும்கூட. ஆனாலும் பூசி மெழுகிய ஆடம்பரமேதுமின்றி இயல்பாகவே கிராமத்துப் பெண்ணாகத் தோன்றும் நாயகி இரசிக்க வைக்கிறார்.

உண்மையில் காதல் சோடியென்றால் படத்தில் பண்ணையாரும் அவரது மனைவியும்தான். அவர்களிடையான ஊடலும் அன்பும் மெல்லிய தென்றலாக படம் முழுவதும் வியாபித்திருக்கின்றது. இருவருமே தேர்ந்த நடிகர்களாக இப்பாத்திரங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். படம் மிகமிக மெதுவாகவே நகர்வதால் செருகப்பட்ட பாடல்கள் உறுத்தவில்லை, இரசிக்க முடிகின்றது. முக்கியமாக பின்னணி இசை படத்தோடு இயல்பாகப் பயணிக்கின்றது.

குறும்படக் கதையை திறம்பட இரண்டரை மணித்தியாலத்துக்கு நீட்டியிருக்கும் புத்திசாலித்தனத்தைப் பாராட்டாமலிருக்க முடியாது என்றாலும் அரைமணி நேரமாவது குறைத்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. இடைவேளை விடும்போது ‘இன்னும் அரைப்படம் இருக்கா?’ என்ற ஆயாசம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. என்ன செய்ய? தமிழ்ச்சினிமாவென்றால் இரண்டரை மணித்தியாலங்கள் இருந்தே ஆகவேண்டுமென்ற சட்டகத்துள் நின்றுகொண்ட இயக்குநர் என்ன செய்வார் பாவம்?

வழமையான தமிழ்ப்படம் போல் அப்பா. அண்ணன் வில்லன்கள், காதலுக்கான பெற்றோர் எதிர்ப்பு, காதல் மட்டுமே படத்தின் மையம் என்ற தொனியிலில்லாமல் வித்தியாசமாகவும் இயல்பாகவும் படத்தை நகர்த்தியிருப்பதே பாராட்டுக்குப் போதுமான விடயம். இதற்காவே இப்படம் முக்கிய கவனத்தைப் பெறும் என்பதிலும் ஐயமில்லை.

(ஈழமுரசு பெப்ரவரி 2014)

Leave a Reply