ஆட்சிக் கவிழ்ப்புக்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது! – சம்­பந்­தன்

ஆட்­சி­யைக் கவிழ்க்­கத் துடிக்­கும் மகிந்த அணி­யின் முயற்­சிக்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒரு­போ­தும் ஒத்­து­ழைப்பு வழங்­காது என நேற்­றுச் சபை­யில் திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா. சம்­பந்­தன்.

தன்­னை­யும், எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யை­யும் கடு­மை­யாக விமர்­சித்த மகிந்த அணி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­த­ன­வுக்கு சம்­பந்­தன் உட­ன­டி­யா­கவே பதி­லடி கொடுத்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற அத்­தி­யா­வ­சிய பொதுச் சே­வை­கள் சட்­டத்­தின்­கீழ், எரி­பொ­ருள் வழங்­கல் மற்­றும் விநி­யோ­கம் ஆகி­ய­வற்றை அத்­தி­யா­வ­சிய சேவை­யாக அறி­விக்­கும் பிர­க­ட­னம் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சம்­பந்­தன் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

அரசு உட­ன­டி­யா­கத் தேர்­தலை நடத்­த­வேண்­டு­மென எனக்கு முன்­னர் உரை­யாற்­றிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன வலி­யு­றுத்­தி­னார். உள்­ளூ­ராட்­சிச் சபைத் தேர்­த­லையோ அல்­லது மாகாண சபைத் தேர்­த­லையோ அவர் கோர­வில்லை. நாடா­ளு­மன்­றத் தேர்­த­லையே மகிந்த அணி­யி­னர் குறி­வைத்­துள்­ள­னர். அதையே அவர் கோரி­னார்.

அரசை முடக்­க­வேண்­டும்; ஆட்­சி­யைக் குழப்­ப­வேண்­டும்; ஆட்­சி­யைக் கவிழ்க்­க­வேண்­டும் என்­பதே மகிந்த அணி­யின் தொடர்ச்­சி­யான நோக்­க­மாக – அழுத்­த­மாக இருக்­கின்­றது. இது மக்­கள் ஆணைக்­குப் புறம்­பான செய­லா­கும்.

அரச தலை­வர் தேர்­த­லில் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் போட்­டி­யிட்­டார். அதில் அவர் தோல்வி அடைந்­தார். தலைமை அமைச்­சர் பத­விக்­கா­க­வும் அவர் கள­மி­றங்­கி­னார். அதற்கு மக்­கள் ஆணை வழங்­க­வில்லை. மாற்­றுத் தரப்­புக்கே மக்­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கு­ரிய ஆணையை வழங்­கி­னர்.

எனவே, தேர்­தல் ஊடாக ஆட்­சி­யைக் கவிழ்ப்­பதை விடுத்து, உரிய காலத்­துக்கு முன்­னர் அதைச் செய்ய முற்­ப­டு­வது மக்­கள் தீர்ப்­புக்கு எதி­ரான செய­லா­கும்.

குறிப்­பிட்ட காலத்­துக்கு முன்­னர் ஆட்­சி­யைக் கவிழ்க்க வேண்­டு­மா­னால் நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்­டு­வந்து அதை அர­ச­மைப்­புக்கு உட்­பட்ட ரீதி­யில் செய்­ய­லாம். இப்­படி எதை­யும் செய்­யாது – மக்­கள் ஆணைக்கு எதி­ரா­கச் செயற்­ப­டும் மகிந்த அணி உறுப்­பி­னர் தினேஷ் குண­வர்­தன என்­னி­ட­மி­ருந்து எத்­த­கைய ஆத­ரவை எதிர்­பார்க்­கின்­றார்?

ஜன­நா­ய­கக் கட்­ட­மைப்பு வலுப்­பெ­ற­வேண்­டு­மா­னால் தொழிற்­சங்க கட்­ட­மைப்பு அவ­சி­யம். அவற்­றின் கோரிக்­கை­க­ளுக்கு செவி­ம­டுக்­க­வேண்­டும்.

எனி­னும், அர­சி­யல் நோக்­கங்­க­ளோடு முறை­யற்ற விதத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­களை முடக்­கும் வகை­யில் தொழிற்­சங்­கப் போராட்­டங்­களை நடத்தி அர­சைக் கவிழ்ப்­ப­தற்­கான முயற்­சி­களை ஏற்க முடி­யாது.

இத­னைத் தடுப்­ப­தற்கு அரசு தைரி­ய­மான முடி­வு­களை எடுத்து அவற்றைத் தைரி­ய­மாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்­டும்-­­என்­றார்.