மீண்டும் வந்த கூகுள் ‘கிளாஸ்!’

கண்ணாடி போல அணிந்துகொள்ளும் சக்திவாய்ந்த, ‘கிளாஸ்’ கணினியை நுகர்வோருக்கான கருவியாக சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது கூகுள். ஆனால், அது படு தோல்வியடைந்தது. ஆனால், கிளாசை இந்த முறை தொழில் துறையினருக்கான அணி கணினியாக மறு அறிமுகம் செய்திருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த முறை, எட்டு மெகா பிக்செல் கமராவுடன் வந்துள்ள, ‘கிளாஸ்’ வலுவான, ‘வை பை’ திறனையும், அதிக தகவல் அலசும் திறனையும் கொண்டுள்ளது. நேரலை காணொலியை பயன்படுத்தா விட்டால், இதன் மின்கலன், 8 மணி நேரம் தாக்குப் பிடிக்கிறது. மேலும், ஏற்கனவே கண் கண்ணாடி அணியும் வழக்கமுள்ளவர்கள், கூகுள் கிளாஸை தங்கள் கண்ணாடி மீது பொருத்திக்கொள்ள முடியும்!

கணினித் திறனையும், திரையையும் கண்ணுக்கு அருகே கொண்டு வந்து தரும், ‘கிளாஸ்’ இணையத்தில் தகவலைத் தேடவும், அலுவலக கணினி வலைப் பின்னலுடன் இணைந்திருக்கவும் உதவும் திறன் கொண்டது.

குரல் உத்தரவுகள் மூலம் கிளாசை வேலை வாங்க முடியும். எனவே, வாகனத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் போன்ற பல துறைகளில் கிளாஸ் அணி கணினி மிகவும் பயன்படும் என்கிறது கூகுள்.