மேஜை மேல் உலோக பட்டறை!

பிளாஸ்டிக் முதல் உயிரிப் பொருட்கள் வரை பலவற்றை மூலப் பொருட்களாகக் கொண்டு முப்பரிமாண அச்சு இயந்திரங்கள் மூலம் புதிய பொருட்களை வடிவமைக்க முடியும். ஆனால், உலோகங்களை வைத்து பொருட்களை முப்பரிமாண அச்சியந்திரம் மூலம் தயாரிப்பது அண்மையில்தான் சாத்தியமாகியுள்ளது.

இதில் முன்னணியில் இருப்பது, ‘டெஸ்க்டாப் மெட்டல்’ என்ற இயந்திரம் தான்.அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தில் ஆராய்ச்சியாளர்களாக இருந்த சிலர் சேர்ந்து, 2013ல் துவங்கிய டெஸ்க்டாப் மெட்டல், ஏற்கனவே, ‘ஸ்டூடியோ’ என்ற உலோக முப்பரிமாண அச்சியந்திரத்தால் அறிமுகப்படுத்தியது.

இதை பி.எம்.டபிள்யு., போன்ற வாகன நிறுவனங்கள் வாங்கிப் பயன்படுத்தி பாராட்டியுள்ளன.அடுத்து, ‘புரடக் ஷன்’ என்ற உலோக முப்பரிமாண அச்சியந்திரத்தை தொழிற்சாலைகளுக்கென்றே அறிமுகப்படுத்துகிறது டெஸ்க்டாப் மெட்டல். பெயருக்கேற்றபடி உலோகத்தில் புதிய மாதிரிப் பொருட்களை தயாரிக்க உதவும். மேசை மேல் பட்டறையாக இந்த இயந்திரம் செயல்படுகிறது.

லேத்துக்கள், வார்ப்பட ஆலைகளில் செய்ய முடியாத வடிவங்களில் இந்த இயந்திரம் அசத்தலாக அச்சிட்டுத் தருகிறது. மணிக்கு, 500 கன அங்குல உலோகப் பொருட்களை அச்சிடும் திறன் கொண்ட இதன் விலை, 32 லட்சம் ரூபாய். டெஸ்க்டாப் மெட்டலில் கூகுளும் முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.