அவுஸ்ரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டம்

அவுஸ்ரேலியாவில் நடைபெற்று வந்த விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய வீரர் ஹரிந்தர் பால் சந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டிகள் அவுஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 11-ம் திகதி தொடங்கின. இப்போட்டியின் இறுதி ஆட்டம் 16-ம் திகதி நடைபெற்றது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் பால் சந்துவும் முதல்நிலை வீரரான அவுஸ்ரேலியாவின் ரெக்ஸ் ஹெட்ரிக்ஸ்சும் மோதினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் செட்டில் அவுஸ்ரேலிய வீரர் 14-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். இதன்பின் சுதாரித்து கொண்டு விளையாடிய ஹரிந்தர் இரண்டாவது செட்டை 11-3 என்ற புள்ளி கணக்கில் எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய ஹரிந்தர் அடுத்த இரண்டு செட்டுகளையும் வென்றார். இதன்மூலம் 12-14, 11-3, 11-4, 11-7 என்ற செட் கணக்கில் வென்ற ஹரிந்தர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இந்த ஆண்டு ஹரிந்தர் வெல்லும் நான்காவது சாம்பியன் பட்டம் இதுவாகும். கடந்த வாரம் அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற தெற்கு அவுஸ்ரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஹாங்காங்கின் லியு சூ லிங் சாம்பியன் பட்டம் வென்றார்.