நிரூபித்தால் பதவி விலகுவேன்!-சிறீதரன்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் தொலைபேசி உரையாடல் ஒன்றில் உரையாடியதாக வெளியாகிய ஒலி வடிவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் அதனை நிராகரிக்கும் வகையில் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்.

கிளிநொச்சி குணாவில் பகுதியில் நேற்று மலையக மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது சிவஞானம்சிறீதரனை கடுமையாக சாடிய மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வாழ்ந்துவருகின்ற மக்கள், வன்செயலால் அனைத்தையும் இழந்து தாம் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் குடியேறியதாகவும் இவ்வாறு தெரிவித்த சம்பவமானது வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை எனவும் தெரிவித்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினரின் எதிர்கால அரசியலுக்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர், தான் அவ்வாறுதெரிவித்தமையை நிரூபித்தால் உடனடியாகவே பதவி விலகத் தயார் என அந்த மக்கள் மத்தியில் தெரிவித்திருக்கின்றார்.

இதனிடையே கருத்துவெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த தொலைபேசி உரையாடல் இடைச்சொருகல் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த நிலையில் தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் செய்தியாளருடன் உரையாடிய உரையாடலின் முழுமையான (செய்தியாளரின் குரல் பதிவு உள்ளடங்கலாக) வெளியாகியுள்ளது.