அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துச் செய்த பாடுமீன் சிறிகந்தராசா!

அவுஸ்ரேலிய குடியுரிமையை இரத்துசெய்துவிட்டு கிழக்கு மாகாண தேர்தலில் பங்குகொண்டு அரசியல் பணி செய்யவுள்ளதாக அந்நாட்டில் 26 வருடங்களாக வாழ்ந்துவரும் சட்டத்தரணி பாடுமீன் சிறிஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழரசுக்கட்சியில் வேட்பாளர் நியமனம் வழங்கும்படி மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தொகுதி மக்கள் கேட்டுள்ளதாகவும் ஆனால் அது ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை எனவும் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக சமூகவலை தளம் ஊடாக பகிர்ந்துகொண்ட பதிவு வருமாறு:

கடந்த 2014 இன் இறுதிப்பகுதியில் எனது சொந்த ஊரான களுவாஞ்சிகுடியில் உள்ள முக்கியமான பிரமுகர்கள் சிலர் என்னை அரசியல் மற்றும் சமூகத் தலைமையினை ஏற்பதற்காக ஊருக்கு வருமாறு அழைத்தார்கள். 37 வயதுவரை ஊரில் இருந்து நான் செய்த அரசியல், கலை மற்றும் சமுகப் பணிகளைப்பற்றியும், புலம்பெயர்ந்த பின்னரும் அவற்றில் எனக்குள்ள இடவிடாத ஈடுபாடுகள் பற்றியும் அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் அந்த அழைப்பை விடுத்தனர்.

பலருடன் தொடர்புகொண்டு இதுபற்றிக் கலந்துரையாடியபோது எல்லோருமே என்னை வருமாறு அன்போடு வற்புறுத்தியதினாலும், இயற்கையாகவே எனது மண்ணில் எனக்கு உள்ள பற்றின் காரணமாகவும் 2015 ஆம் ஆண்டு ஊருக்கு வந்தேன். அதற்கு முன்னரும் பல தடவைகள் வந்திருக்கிறேன் என்றாலும், அவையெல்லாம் தற்காலிக பயணங்களாகவே இருந்தன. இந்த வருகை அங்கே நான் இருந்து பணியாற்றும் எண்ணத்துடனானது. நான் ஊரில் நிற்கும்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. களுவாஞ்சிகுடியில் கிராமத் தலைவர் திரு. அ.கந்தவேள் அவர்கள் தலைமையில் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டது. அதில் முகாமை ஆலய பரிபாலன சபை, மற்றும் ஆலயங்களின் சபைகள், அமைப்புக்கள், சங்கங்கள், விளையாட்டுக்கழகங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், பொது மக்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

எல்லோரும் என்னை பட்டிருப்புத் தொகுதி பாராளுமன்ற வேட்பாளராக முன்மொழிந்து ஏகமனதாகத் தீர்மானித்தார்கள். களுவாஞ்சிகுடி மற்றும் பட்டிருப்புத் தொகுதி மட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல ஊர்களைச்சேந்தவர்களும் எனது வருகையை விரும்பினார்கள், விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் 15 வயதிலிருந்து நான் சார்ந்திருக்கும் தமிழரசுக்கட்சியின் சார்பில் என்னை வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுக்கட்சித் தலைமைக்கு விண்ணப்பங்களை அனுப்பினார்கள். பரிந்துரை செய்தார்கள். ஆனால், பழைய பாராளுமன்ற உறுப்பினர்களையே மீண்டும் வேட்பாளர்களாக நியமிக்கக் கட்சி முடிவெடுத்தமையால் எனக்கு வேட்பாளர் நியமனம் கிடைக்கவில்லை. பட்டிருப்புத் தொகுதியில் இருந்து பாராளுமன்றத்திற்கு யாரும் தெரிவுசெய்யப்படவுமில்லை.

இப்பொழுது, மட்டக்களப்பு மாகாணசபைக்கான தேர்தல் எதிநோக்கப்படுகின்ற தருணத்தில் என்னைப் போட்டியிடுமாறு பொதுமக்களும், பிரமுகர்களும் மீண்டும் வலியுறுத்துகின்றார்கள். நான் தமிழரசுக்கட்சியில் ஓர் ஆயுட்கால உறுப்பினர். தமிழரசுக்கட்சிக்கும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் எதிராக இயங்கியவர்கள், இப்பொழுவரை இயங்கிக்கொண்டிருப்பவர்கள் சிலரும்கூட த.தே.கூ. அமைப்பில் போட்டியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் அவ்வாறு முயற்சிசெய்வது முட்டாள்தனம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அப்படிப்பட்டவர்களையும் வேட்பாளர்களாக நியமித்துப் பதவியில் அமர்த்திய வரலாறு உள்ளது.

நான் இப்பொழுது இந்தப் பதிவை இடுவதன் நோக்கம் என்ன?

சுருக்கமாகச் சொல்கிறேன். ஏனெனில் பின்னூட்டங்களுக்குப் பதில் கொடுக்க வேண்டிவரும்போது விபரங்களை வெளிப்படுத்தலாம் என நினைக்கின்றேன்.

1. எப்படியாவது ஏதாவது பதவியில் அமரவேண்டும் என்ற தேவையோ ஆசையோ எனக்கு இல்லை. 26 வருடங்களாக அவுஸ்திரேலியாவில் வாழும் நான், அவுஸ்திரேலிய குடியுரிமையினை இரத்துப்பண்ணிவிட்டு, பல்வேறு சிறப்புரிமைகளையும் இழந்து, வருமானத்தையும் புறக்கணித்துவிட்டு, ஊரில் வந்து வாழ நினைப்பது எனது இனதிற்கான சேவையினை எனது மண்ணில் தொடரவேண்டும் என்பதற்காகவே.

2. அங்குள்ள இன்றைய சூழ்நிலையில், தமிழ் பிரதேசங்களிலேகூட தமிழ்மக்களின் இருப்பு கேள்விக்குறியாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில் உரத்துக்குரல் கொடுக்க வேண்டியவர்கள் அதனைச் செய்யாமல் இருக்கிறார்கள், அதற்கான திறமை இல்லாமல் இருக்கிறார்கள்.

3.மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் முதல் இனத்திற்கான சம உரிமைகள் வரை அவற்றுக்காகத் துணிவுடனும், நேர்மையாகவும் செயற்பட என்னால் முடியும். அதற்கான கல்வியும், அறிவும், அனுபவமும், அரசியல் ஈடுபாடும் எனக்கு உள்ளது. அவற்றைப் பயன்படுத்தும் ஆற்றலும் உண்டு.

4. கட்சி அரசியலூடாகவும், கட்சியரசியலுக்கு அப்பாலும் பிரதேசத்தின் அபிவிருத்தி, மக்களின் மேம்பாடு, கல்வித்துறை, சுகாதாரத்துறை முதலியவற்றின் திருப்தியான செயற்பாடு என்பவற்றில் அரசியல்வாதிகளின் அக்கறைமிக்க செயற்பாடுகள் போதாது என்று மக்களுக்கு உள்ள அதிருப்தியைப் போக்கும் அளவுக்கும், திருப்தியான வகையில் பணிசெய்வதற்கும் என்னால் முடியும்.

5. பலரைப் போலப் பதவியொன்றுக்கு வரும்வரை தானுண்டு தனது வேலையுண்டு என்று சுயநலமாக வாழ்ந்தவனாகவோ, மக்களால் அறியப்படாதவனோ அல்லாமல், பிறந்த நாட்டிலும், புலம்பெயர்ந்த நாட்டிலும் இடைவிடாத பொதுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதினால் உலகளாவிய ரீதியில் நான் மக்களால் அறியப்பட்டவன்.

6. நான் ஊழல் செய்யமாட்டேன். மற்றவர்களையும் ஊழல்செய்ய அனுமதிக்கமாட்டேன். ஊழலுக்கு எதிராகக் கடுமையாகச் செயற்படுவேன்.

7. மக்களின் நலன் ஒன்றே எனது குறிக்கோளாக இருக்கும். நமது மண்ணின்மேலும், மக்கள்மேலும் உள்ள பற்றும் என்னை நெறிப்படுத்தும்.

அதனால் எனக்கு வாய்ப்புத் தாருங்கள் என்று நான் கோரிக்கை விடுக்கவில்லை. என்னை தெரிவுசெய்யவேண்டும் என்று மக்கள் விரும்பினால் அதற்கான முயற்சியில் அவர்கள் இறங்கவேண்டும். நான் பொருத்தமானவன் என்று கட்சி விரும்பினால் கட்சி என்னை நியமிக்கட்டும். இதுதான் என்னுடைய நிலைமை. ஆக்கபூர்வமான பின்னூட்டங்களை வரவேற்கின்றேன். கேலியான, கிண்டலான, அவதூறான, வார்த்தைகள் ஆரோக்கியமற்றவை.

paadumeen