Home / செய்திமுரசு / காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது!
download (3)

காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது!

புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும் காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்ற ரெலோவின் கடிதமானது, கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமேயானது என்பதையும் செயலளவில் எல்லாமே தமிழரசுக் கட்சிதான் என்பதையும் அர்த்தமாக்குகிறது. மழைவிட்டும் தூவானம் போகவில்லை என்றொரு பழமொழியுண்டு.

ஆனால், தமிழ் கூட்டமைப்பு சம்பந்தப்பட்ட வடமாகாண சபையின் பிரச்சனையைப் பொறுத்தளவில், மழையைவிட தூவானமே புயலாக வீசுவதைக் காணமுடிகிறது. கடந்த மாதம் 14ம் திகதி வடமாகாண சபை அமைச்சர்கள் நீக்கம் மற்றும் மாற்றம் தொடர்பாக ஆரம்பமான முறுகல், தென்னாலிராமன் கதை சொல்லும் ‘மூக்குள்ளவரை சளி இருக்கும்’ என்றவாறாக இழுபடுகிறது.

ரெலோவின் பிரதிநிதியாக மீன்பிடி அமைச்சர் பதவியை வகிக்கும் பி.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதென ரெலோவின் தலைமைப்பீடம் முடிவெடுத்துள்ளது.

இது தொடர்பான அதிகாரபூர்வ கடிதத்தை கட்சியின் தலைமைப்பீடம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கும் அனுப்பி வைத்துள்ளது.

அமைச்சர்கள் டெனிஸ்வரனையும் சத்தியலிங்கத்தையும் அப்பதவிகளிலிருந்து ஒரு மாதத்துக்கு விலக்கி வைக்க முதலமைச்சர் எடுத்த முடிவுக்கு கூட்டமைப்பு அப்போது எதிர்ப்புத் தெரிவித்தது.

சத்தியலிங்கம் தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பதால் தனித்து அவருக்காகக் குரல் கொடுக்க முடியாத சூழலில், டெனிஸ்வரனையும் பக்கத்துணைக்கு இழுத்துக் கொண்டு போனது தமிழரசுக் கட்சி.

இப்போது டெனிஸ்வரன் தனித்துப் பாதிக்கப்படுவதால், அவருக்காக தமிழரசுத் தலைமை குரல் கொடுக்க முன்வருமா என்பது கேள்விக்குறி இது, ரெலோவின் உட்கட்சிப் பிரச்சனை என்று கூறி தப்பித்துக் கொள்ளவும் பார்க்கலாம்.

இல்லையேல், டெனிஸ்வரனை தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக்கி அவருக்குப் பாதுகாப்பு கொடுத்து இரட்சிக்கவும் எத்தனிக்கலாம். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இது விடயத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார்?

ஏற்கனவே ஓரங்கட்ட நினைத்தவரை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நீக்குவாரா? அல்லது முன்னர் அறிவித்தது போன்று விசாரணையை நடத்தி குற்றவாளியென அறிவிக்கப்பட்டபின் அப்புறப்படுத்துவாரா?

ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனை சர்வாதிகாரி என்று விளித்து பகிரங்கக் குற்றம் சாட்டியுள்ளார்.

பதினாறு வருடங்களாக இந்தச் சர்வாதிகாரியின் ஆட்சியிலேயே கூட்டமைப்புக்குள் தாங்கள் வாழ்ந்து வருவதாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இதனைக் கேட்க பொறுக்காத வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கம், சிவசக்தி ஆனந்தனுக்குப் பதிலளிக்கும் தோரணையில், இந்திய இராணுவ காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்திய தர்பாரை விலாவாரியாக விளாசித் தள்ளியுள்ளார்.

1987 யூன் பிற்பகுதியில் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய இராணுவம், 1990 மார்ச் இறுதி நாளன்று வெளியேறி – 27 ஆண்டுகளாகி விட்ட நிலையில், அந்த நாள் அட்டூழியங்கள் இப்போது சத்தியலிங்கத்துக்கு ஞாபகம் வந்திருப்பது வினோதமானது.

தமது சகபாடியாகவிருந்த குருகுலராஜாவின் கல்வி அமைச்சர் பதவியை, ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வே~;வரன் பெற்றுள்ளதால் ஏற்பட்ட மனத்தாங்கல்தான் இதன் காரணமா?

அல்லது, தமது பதவியைத் தக்க வைக்க உதவிய சம்பந்தனுக்குச் செய்யும் பரோபகார கைமாறாக இதனைப் பார்க்கலாமா?
தமிழரசுக் கட்சியின் எந்தவொரு பிரமுகருக்கும் சிவசக்தி ஆனந்தன் மீது வராத கோபம், சத்தியலிங்கத்துக்கு மட்டும் வந்ததுக்கு என்ன காரணம்?
கூட்டமைப்பின் மற்றொரு தோழமைக் கட்சியான ரெலோ சமகாலப் பிரச்சனைகளைப் பற்றி நேரடியாக தமிழரசுக் கட்சியுடன் உரையாட காலமும் நேரமும் கேட்டுக் கடிதமெழுதியுள்ளது.

இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் சகல முக்கியஸ்தர்களும் சமுகமளிக்க வேண்டுமெனவும் ரெலோ கேட்டுள்ளது.
புதிய அரசியலமைப்பு முயற்சி தேக்க நிலையில் இருப்பதாலும், சமகால அரசியல் போக்கு தளம்பலாக இருப்பதாலும், காத்திரமான சில முடிவுகளை எட்ட தமிழரசு; கட்சியுடன் பேச வேண்டியுள்ளது என்ற ரெலோவின் கடிதமானது, கூட்டமைப்பு என்பது பெயரளவில் மட்டுமேயானது என்பதையும் செயலளவில் எல்லாமே தமிழரசுக் கட்சிதான் என்பதையும் அர்த்தமாக்குகிறது.

கடிதத்தில் கேட்கப்பட்டவாறு ஒரு கூட்டத்தை நடத்த தமிழரசுக் கட்சி முன்வருமா என்பது சந்தேகத்துக்கிடமானது.
கடந்த 11ம் திகதி நீர்வேலியில் தமிழரசுக் கட்சியினர் தனித்து ஒரு கூட்டத்தை நடத்தப் போவதாக ஊடகங்கள் ஊடாக அறியக் கொடுத்தனர். பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கூட்டமாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எம்,ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறிதரன் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கு கொண்டு மக்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பார்களென்ற அறிவிப்பை நம்பி கூட்டத்துக்குச் சென்றவர்கள் ஏமாற்றமடைந்தனர். இவர்களில் ஒருவர்கூட அங்கு தலைகாட்டவில்லை. வடமாகாண சபை அக்கிராசனர் சி.வி.கே.சிவஞானம் மட்டும் இங்கு சமுகமளித்திருந்தார்.

சந்தர்ப்பத்தை நழுவவிட விரும்பாத பொதுமக்கள் முதலமைச்சர்மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் சிவஞானத்தின் வகிபாகம் தொடர்பாக சரமாரியாகக் கேள்விகளைத் தொடுத்தனர்.

தம்மை ஓர் அப்பாவியாகச் சித்தரிக்கும் தோரணையில் இவரது பதில்கள் அமைந்திருந்தன. தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற வகையில் தமது பெயர் பிரேரணையில் முதலாவதாக இடம்பெற்றது என்றும், ஆளுனரைச் சந்திக்கச் சென்ற மாகாணசபை உறுப்பினர்களில் தாமே கடைசியாகச் சென்றவர் என்றும், பிரேரணையை ஓர் உறுப்பினர் தமது கையில் திணித்ததால் தாமே அதனை ஆணையாளரிடம் கையளித்ததாகவும், அந்த உறுப்பினர் யாரென்பது ஞாபகம் இல்லையென்றும்.

அருமையான ஒரு கற்பனைச் சித்திரத்தை இக்கூட்டத்தில் அவர் வரைந்தார். ஆளுனருடன் சிரித்துக் கொண்டு நிற்கும் டிஜிட்டல் படத்துக்கும் சம்பந்தா சம்பந்தமில்லாது விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்படியாக வடக்கில் தனித்துவமான காட்சிகள் மேடையேறிக் கொண்டிருக்கையில், தெற்கின் அரசியல் மற்றொரு திசை நோக்கிப் பயணித்து கொண்டிருக்கிறது.

புதிய இராணுவத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற மகேஸ் சேனநாயக்க நன்றாக அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார். விக்கினேஸ்வரன் கூறுபவைகளையிட்டு எவரும் கவலைப்படத் தேவையில்லையென்று கடந்த வாரம் ஊடகங்களுக்குத் தெரிவித்த இவர், விக்கியின் தாளத்துக்கு ஆடமுடியாது என்று இந்த வாரம் கூறி ஊடகங்களின் படச் செய்தியாகியுள்ளார்.

அரசாங்கத்தின் தாளத்துக்கே ஆடிக் கொண்டிருக்கும் இராணுவத் தளபதிகளை, தமது தாளத்துக்கு ஆடுமாறு விக்கி ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டார்.

மகேஸ் சேனநாயக்க தாம் இப்போதும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக (முன்னர் வகித்த பதவி) இருப்பதாகவே நினைத்துக் கொண்டு பேசுகிறார் போலத் தெரிகிறது. ஆனால் ஒன்றுமட்டும் புரிகிறது. அது, முதலமைச்சர் விக்கியின் தாளம் என்னவென்பதை இவர் நன்கு தெரிந்து கொண்டுள்ளார். இப்போதைக்கு இதுவே போதும்!

பௌத்த பீடாதிபதிகள் என்று கூறப்படும் மகாசங்க தலைமைத் துறவிகளின் எச்சரிக்கையை அடுத்து புதிய அரசியலமைப்பு ஏற்பாடு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைத்தல் என்பன அடக்க நிலைக்குள் அமிழ்ந்துள்ளன.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைத் தொடர்ந்து கூட்டமைப்பினரும் தலைமைத் துறவிகளை சந்திப்பார்களென அறிவிக்கப்பட்ட போதிலும், அந்தத் துறவிகள் விரும்பாமலோ என்னவோ காரணம் கூறாமல் அது ரத்தாகிவிட்டது.
சில நாட்களுக்கு முன்னர் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் அங்கு உரையாற்றுகையில் மக்கள் ஆதரவு இல்லையெனில் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வராதென சொல்லியுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பின் முடிவே இதனைத் தீர்மானிக்கும் என்பதை பிரதமர் வேறு வடிவத்தில் கூறியுள்ளார். சிங்கள பௌத்த மகாஜனங்கள் இதனை எதிர்த்து வாக்களிக்க வேண்டுமென அவர் கூறுவது போலவும் இதன் கருத்து இருக்கலாம்.

இதன் இன்னொரு செயற்பாடாக, சில முடிவுகளை எடுப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையேயான சிறப்புக் கூட்டமொன்றை நடத்த ஏற்பாடாகி வருகிறது.

ஆளும் கட்சிகள் என்பது இப்போது மூன்றாக – அதாவது, ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரக் கட்சி மைத்திரி அணி, சுதந்திரக் கட்சி மகிந்த அணியென இயங்குகின்றன.

இந்த நிலையில் சிறப்புக் கூட்டமென்பது காத்திரமான எந்த முடிவையும் எடுக்க முடியாதென்பதை முற்கூட்டியே சொல்லிக் கொள்ளலாம்.

நல்லாட்சி என்பது இப்போது ரணில் குழு, மைத்திரி குழு இரு தனியாட்சிகளாக மாறிவருவதை இன்னொரு கட்டுரையில் விரைவில் விரிவாக நோக்குவோம்.

பனங்காட்டான்

About குமரன்

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...