Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / தென்னமரவடி மக்களின் மீள்குடியேற்றம்? – திருமலை நவம்
image3

தென்னமரவடி மக்களின் மீள்குடியேற்றம்? – திருமலை நவம்

1984 ஆம் ஆண்டு தென்னமரவடி மக்கள் இனச்சங்காரத்தால் 10 உயிர்களை பறிகொடுத்தார்கள். குடியிருப்புக்கள் எரிக்கப்பட்டன. நூற்றாண்டு காலமாக பாரம்பரியமாக வாழ்ந்த அக்கிராம மக்கள் தமது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய அவலத்துக்கு ஆளாக்கப்பட்டனர்.

கால் நூற்றாண்டு கால இடப்பெயர்வுக்கு பிறகு அந்த மக்கள் சொந்த ஊருக்குத் திரும்பியபோது வீடுகளிருக்கவில்லை. வயல்களும், வரம்புகளும் அயல் கிராமத்தவர்களால் கபளீகரம் செய்யப்பட்டிருந்தன. கனவுகளோடு திரும்பியவர்களுக்கு எஞ்சியிருந்தது தென்னமரவடி என்னும் நாமம் மட்டுமே. இவர்கள் சகல வசதிகளுடனும் மீளக்குடியேற்றப்பட வேண்டுமென்பதே எமது நோக்கமாகும்.

இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி. 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி தென்னமரவடி கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து சென்று மீண்டும் 2011 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மீளக்குடியேற்றப்பட்ட தென்னமரவடி மக்கள் தற்போது படும் அவலங்கள், அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் சவால் கள் மற்றும் துன்பங்கள் பற்றி விளக்கும் போதே தண்டாயுதபாணி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர், தொடர்ந்து விளக்குகையில், திரு கோணமலை மாவட்டத்தையும் வடபுலத்தையும் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் கிராமம் தென்னமரவடி கிராமமாகும். தென்னவன் மரவடி என்ற இதன் இயற்பெயர் மருவி தென்னமரவடியென்றே பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்றது. வயலும் வயல் சார்ந்த மருதமும், கடலும் கடல் சார்ந்த நெய்தலும் சூழவுள்ள தென்னமரவடிக் கிராமத்தின் ஜீவனோபாயமாகக் காணப்படுவது விவசாயம், சிறிதளவில் மீன் பிடித்தொழிலும்.

1984 ஆம் ஆண்டுக்கு முன் சுமார் 212 குடும்பங்கள் வாழ்ந்திருக்கின்றன. சுமார் 550 ஏக்கர் நிலங்கள் இக்கிராமத்துக்கு சொந்தமான வயல் நிலங்களாகவும், இக்கிராமத்தின் சொத்துக்களாகவும் இருந்துள்ளன. 1983 ஆம் ஆண்டுக்குப் பின் ஏற்பட்ட வன்முறை கொடுமைகள் இக்கிராமத்தையும் விட்டு வைக்கவில்லை.

1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இக்கிராமத்தை சேர்ந்த அபிராமிப்பிள்ளை முருகப்பிள்ளை, சேதுபிள்ளை, கந்தையா, இரத்தினம் வேலாயுதம் மனைவி என்ற இக்கிராமவாசிகள் தமது மாடுகளைத் தேடி அயல் கிராமத்துக்கு சென்றவேளை கந்தையா இரத்தினம், வேலாயுதம் மனைவி ஆகிய இருவரைத் தவிர ஏனையவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இரவே இக்கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் இரவோடு இரவாக ஓடித்தப்ப முனைந்தார்கள்.அந்த குறித்த நாட்களில் 11 தென்னமரவடி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். சண்முகம் முருகப்பிள்ளை (42), முருகப்பிள்ளை அபிராமிப்பிள்ளை (40), முருகப்பிள்ளை பாலகிருஷ்ணன் (17), கந்தையா கெங்காதரன் (24), வினாசித்தம்பி கனகையா (45), கனகையா சேதுப்பிள்ளை (38), கணபதி வேலாயுதம் (48), சண்முகம் சதாசிவம் (35), சின்னையா (65), ஐங்கரப்பிள்ளை திருச்செல்வம் (23), நமசிவாயம் கலையரசு (17).

இப்படுகொலைகளால் அதிர்ச்சியடைந்த தென்னமரவடி மக்கள் 1984 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதியுடன் அக்கிராமத்தை விட்டு வெளியேறி முல்லைத்தீவு கள்ளப்பாடு, முள்ளியவளை ஆகிய இடங்களில் தஞ்சம் கோரினார்கள்.

image3

நவம்பர் மாதம் 2 ஆம் திகதி இரவு புறப்பட்டு கொக்குத்தொடுவாய்க்கு போய்ச்சேர்ந்த இந்த மக்கள் கொக்குத்தொடுவாய் பள்ளிக்கூடத்தில் 20 நாட்கள் தங்கியிருந்தும் அங்கு இராணுவச் சுற்றிவளைப்பின் காரணமாக மேற்குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று தஞ்சம் கோரினார்கள்.

கடந்த 27 வருடங்களுக்குப் பிறகு அரச அழைப்பின் பேரில் 2011 ஆம் ஆண்டு இவர்கள் தமது சொந்த மண்ணுக்குத் திரும்பிய வேளை வயல்கள் இருக்கவில்லை, வீடுகள் இருந்த தடயங்கள் கூட தெரியவில்லை. யூஎன்.எச்.சி.ஆர். அனுசரணையுடன் ஒபர் சிலோன் நிறுவனம் (OFERR CEYLON) தற்காலிக கொட்டில்களை 100 குடும்பங்களுக்கு அமைத்துக் கொடுத்தது. இன்னும் சுமார் 112 குடும்பங்களுக்கு மேல் குடியேற்றப்பட வேண்டும். குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளான வீடுகளோ ஜீவனாம்சத்துக்கு வேண்டிய மூலாதாரங்களோ இல்லாத நிலையில் தற்பொழுது அங்கு குடியேறிய, குடியேற விரும்புகின்ற மக்களுக்கு புதிய நெருக்கடிகள் உருவாக்கப்படுகின்றன. தங்கள் சொந்த வயல் நிலங்களில் பயிர் செய்யமுடியாமல் அயல் கிராமமான பதவிஸ்ரீபுர (கொலனி) குடியேற்றவாசிகளால் பல துன்பங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

மீண்டும் தமது சொந்த மண்ணில் குடியேறப்போகிறோம் என்ற ஆவலுடன் 2011 ஆம் ஆண்டு குடியேற வந்தவர்களின் பூர்வீக நிலங்கள் அருகேயுள்ள பதவிஸ்ரீபுர பேரினச் சமூகத்தால் அத்து மீறி கையகப்படுத்தப்பட்டு, அவர்களால் விவசாயம் செய்யப்படுகின்றன. காணி உறுதி, அனுமதிப்பத்திரங்கள் தென்னமரவடி மக்களிடம் இருந்தும் கூட, அத்துமீறிய விவசாயிகள் அந்த வயல்களை விடுவதாகவும் இல்லை, விட்டுச் செல்வதாகவுமில்லை. இந்த அடாவடித்தனங்கள் பற்றி தென்னமரவடி மக்கள் குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார், கிழக்கு மாகாண காணியாளர் உட்பட பலருக்கு முறைப்பாடு செய்தும் கூட எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை.

இதனால் தமது வாழ்வாதாரத்தின் மூலாதாரமாகக் காணப்படும் விவசாயத்தை மேற்கொள்ளமுடியாத அவலங்களை எதிர்கொள்கின்றனர். 2011 ஆம் ஆண்டு தொட்டு 2014 ஆம் ஆண்டு இற்றைய நாள் வரை அவர்களின் முயற்சிகள் பலனற்றதாகவே இருந்துள்ளன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினராகிய தலைவர் இரா. சம்பந்தன், சி. தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்களாகிய பிரசன்ன இந்திரகுமார், ஜே. ஜனார்த்தனன் துரைராஜசிங்கம், கிருஷ்ணபிள்ளை, நடராஜா ராஜேஸ்வரன் ஆகியோர் தென்னமரவடிக் கிராமத்துக்குச் சென்று அம்மக்களின் குறைகளை கடந்த 01.10.2014 ஆம் திகதி கேட்டறிந்து கொண்டதன் காரணமாக அந்த மக்களின் குறைகளை கிழக்கு மாகாண சபை மூலம் தீர்வு காணும் நோக்குடன் தனிநபர் பிரேரணையொன்று என்னால் கொண்டுவரப்பட்டது. இது விவாதிக்கப்பட்ட போது ஆளும் தரப்பினர், எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் இம்மக்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என வாதாடினார்கள். இதையேற்றுக் கொண்டகல்வி மற்றும் காணி அமைச்சர் விமலவீர திசாநாயக்க, கிழக்கு மாகாண காணி ஆணையாளரை அழைத்து தென்னமரவடி மக்களின் காணிப் பிரச்சினைக்குதீர்வு காண கலந்துரையாடல் ஒன்றை விரைவில் நடத்துவோமென வாக்குறுதி நல்கினார். இதன் பிரகாம் கடந்த 3.11.2014 ஆம் திகதி கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஸ்ரீ மேர்வன் தர்மசேனா தலைமையில் நான், ஜே. ஜனார்த்தனன் மற்றும் உதவிக் காணி ஆணையாளர், நில அளவையாளர் ஆகியோர் கலந்துரையாடினோம்.

இக்கிராம மக்களின் வயல்கள் கொல்லன்வெளி (பெருமாள்பிலவு) துவரமுறிப்பு, பணிச்சவயல், நல்ல தண்ணீர் ஊற்றுப்பிலவு, ஆவடியான் தோட்டம் ஆகிய வயல் கண்டங்களில் அமைந்திருக்கும் காணிகளின் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்து பிரச்சினையை தீர்க்கச் சென்ற கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஸ்ரீ மேர்வன் தர்மசேனா, காணிக்கு உரித்துடைய தென்னமரவடி தமிழ் மக்களையும் அத்துமீறி விவசாயம் செய்து வரம் சிங்கள மக்களை அழைத்து தீர்வொன்றைக் கொடுத்துள்ளார்.

அது எவ்வாறு எனில் அத்துமீறி அடாத்தாக பிடித்துள்ளவர்கள் பாதிவயல்களை செய்யட்டும். சொந்தக்காணிக்காரர்கள் பாதிவயல்களை செய்யட்டுமென அநீதியான தீர்ப்பொன்றை வழங்கியிருந்தார். பயந்து போயிருந்த அந்த மக்கள் அந்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டதாகப் பாவனை செய்துள்ளார்கள்.

இச்சம்பவம் நடைபெற்ற மறுநாளே (01.10.2014) நாம் தென்னமரவடிக்கு விஜயம் செய்திருந்தோம். காணி ஆணையாளர் தீவிரமாக செயற்படும் முறையில் மீண் டும் நல்லத்தண்ணீர் பிலவுக்கு சென்று இதே தீர்ப்பை வழங்கியிருந்தார். ஆனால், இந்தத் தீர்ப்பை நல்லத்தண்ணீர் பிலவு வயலுக்குச் சொந்தமான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை சகித்துக் கொள்ளாத கிழக்குமாகாண காணி ஆணையாளர் கடுமையான உத்தரவொன்றை பிறப்பித்து விட்டு வந்தார். நாங்கள் தீர்ப்பு வழங்கும் வரை வயல்களுக்குள் இறங்கக்கூடாது என கட்டளையைப் பிறப்பித்து விட்டு வந்ததன் காரணமாக பீதியடைந்த மக்கள் தங்கள் வயல் நிலங்களுக்கு செல்லாத முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாகவே என்னால் தனிநபர் பிரேரணையொன்று மாகாண சபையில் கொண்டுவரப்பட்டு, மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டுமென்ற நியாயத்தை எடுத்துக் கூறி அமைச்சர்களாக இருக்கலாம் அதிகாரிகளாக இருக்கலாம் அல்லது அரசியல்வாதிகளாக இருக்கலாம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உழைக்க வேண்டும், முன்வர வேண்டும். அவ்வாறு சேவை செய்ய முடியாவிட்டால் நாம் இருப்பதில் பயனில்லை. மாகாண காணி ஆணையாளர் தென்னமரவடி மக்களுக்கு வழங்கிய தீர்ப்பு அநீதியானது எனச் சுட்டிக்காட்டியிருந்தேன்.

இதன்பின்பே காணி ஆணையாளருக்கும் எங்களுக்குமிடையிலான கலந்துரையாடல் (3.11.2014) இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, மாகாண காணியாளர் கூறுகையில் தென்னமரவடிக் கிராமம் 1975ஆம் ஆண்டு அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த வேளை 129 பேருக்கு வயல் காணிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இது தொடர்பில் எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை. ஆனால் 2013ஆம் ஆண்டு தென்னமரவடி மக்கள் 31 பேருக்கு வழங்கப்பட்ட பத்திரங்கள் தொடர்பில் தான் பிரச்சினை தோன்றியுள்ளது. இந்த காணி பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். வழங்கப்பட்ட முறையில் தவறுகள் இருக்கின்றன என எடுத்துக் கூறினார்.

ஏலவே வழங்கப்பட்ட 129, பத்திரங்களுக்குரியவர்களுக்கு விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டதையும், அவர்கள் வயல்கள் செய்வதற்கு தடையேற்படின் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதையும் ஏற்றுக் கொண்ட காணி அமைச்சர் விமல வீர திசாநாயக்க மேற்படி 31 பத்திரங்களும் இரத்துச் செய்யப்படத் தான் வேண்டுமென வலியுறுத்தினார்.

image1

அதுமட்டுமன்றி 31 பத்திரங்களும் இரத்துச் செய்யப்பட்டு தகுதியுடைய புதியவர்களுக்கு காணி கச்சேரி மூலம் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டுமென்ற முடிவை காணி அமைச்சரும் மாகாண காணி ஆணையாளரும் எடுத்தனர். இந்த முடிவை நானும் மாகாண சபை உறுப்பினர் ஜனார்த்தனனும் வன்மையாக எதிர்த்தோம். எங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொள்ளும்படியும் வேண்டினோம்.

இந்த விடயத்தில் நாம் குறிப்பிடக்கூடிய விடயம் என்னவெனில் 1975ஆம் ஆண்டு இக்கிராமம் அனுராதபுர மாவட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்த காலத்தில் தென்னமரவடி வாசிகள் 60 பேர் மேலும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். இந்த தெரிவை பதவி ஸ்ரீபுர உதவி அரசாங்க அதிபர் காரியாலயமே மேற்கொண்டிருந்தது. அந்த ஆவணங்கள் தற்பொழுதும் அம்மக்களிடம் கைவசம் உள்ளன. நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக தெரிவு செய்யப்பட்ட குறித்த 60 பேருக்கும் காணிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை. இந்த மக்கள் 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.

2011ஆம் ஆண்டு மீண்டும் மீள் குடியேற்றப்பட்டதன் பின்பு தாங்கள் 1984ஆம் ஆண்டுக்கு முன் விவசாயம் செய்த காணிகளை குச்சவெளி பிரதேச செயலாளருக்கு அடையாளம் காட்டியதன் அடிப்படையில் தற்பொழுது தென்னமரவடி கிராமம் மீண்டும் திருகோணமலை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.

மாகாண காணி ஆணையாளரின் சிபாரிசுக்கு அமைவாகவும் ஏலவே தெரிவு செய்யப்பட்ட 60 பேரில் இருந்தே மேற்படி 31 நபர்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கே 2013ஆம் ஆண்டு காணிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இவர்கள் அனைவரும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களாகவே காணப்படுகிறார்கள். புதிய தலைமுறை யாருக்குமே வழங்கப்படவில்லை. இவ்வாறு உண்மையிருக்கும் நிலையில் தவறான முறையில் புதியவர்களுக்கு காணிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கூறுவதில் உண்மையுமில்லை நியாயமுமில்லை. எனவே, அரசாங்க அதிபர் அலுவலகம், பிரதேச செயலாளர், மாகாண காணி ஆணையாளர் அலுவலகம் இணைந்த உயர் அரச அலுவலர்களால் நிர்வாக முறையினூடாக வழங்கப்பட்டிருக்கும் 31 தென்னமரவாடி விவசாயிகளுக்கான அனுமதிப் பத்திரங்களை உடனடியாக இரத்து செய்ய வேண்டுமென எடுத்திருக்கும் முடிவானது பிழையான முடிவு எனவும் வழங்கப்பட்ட பத்திரங்கள் தவறானது எனில் அது கவனமாக ஆராயப்பட்டு நியாயமானதும் நீதியானதுமான முடிவு எடுக்கப்பட வேண்டுமென்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம்.

ஆனால், காணி ஆணையாளரோ நாம் கலந்துரையாடல் நடத்திய அன்றைய தினத் திகதியிட்டு கலந்துரையாடல் கூட்டறிக்கையை எனக்கும் மற்றும் குச்சவெளி பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண முதலமைச்சர், காணி அமைச்சர், பிரதி பொருளாதார அமைச்சர் சுகந்த புஞ்சி நிலமே, மாவட்ட அரசாங்க அதிபர், கொழும்பு காணி ஆணையாளர் நாயகம், கிழக்குப் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர், புல்மூட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி, பதவி ஸ்ரீபுர பிரதேச செயலாளர் ஆகியோருக்கு பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

மேற்படி அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்த கூட்டறிக்கையில் நாம் உடன்படாத எதிர்ப்பு தெரிவித்த விடயத்தை கூட்டமைப்பினராகிய அதாவது மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரின் உடன்பாட்டுடனேயே இத்தீர்மானம் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது என்ற பிழையான தோற்றத்தை உருவாக்கும் வகையில் அறிக்கையை தயாரித்திருந்தார்.

image5

இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 3ஆவது 5ஆவது தீர்மானங்கள் எங்களால் இணக்கம் காணப்பட்டவையென்ற பொய்யான தகவல்களைக் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த அறிக்கையின் 3ஆவது பந்தி குறிப்பிடுவது என்னவெனில் 2013ஆம் ஆண்டு வயல் நிலங்களுக்கு புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்கியவர்களின் உரிமங்களை இரத்துச் செய்தல், பயிர் செய்கைக்கு தடை விதித்தல் 5ஆவது பந்தியில் குறிப்பிட்டிருப்பதாவது 2013ஆம் ஆண்டு 31 பேருக்கும் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் தவறான முறையில் வழங்கப்பட்ட காரணத்தினால் அதனை இரத்துச் செய்து புதிய காணிக்கச்சேரி மூலம் தகுதியானவர்களை தெரிவு செய்து காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் 3ஆம், 5ஆம் பந்தி தீர்மானங்கள் நாங்கள் உடன்படாதவை. கடுமையாக எதிர்த்த தீர்மானங்களாகும். அவ்வாறு இருக்கும் போது கிழக்கு மாகாண காணி ஆணையாளர் எங்கள் மீது மக்கள் ஒரு பிழையான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தயாரித்து அனுப்பியுள்ள கூட்டறிக்கையை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் இது பற்றிய ஆட்சேபனையை மாகாண ஆணையாளருக்கும் அவரால் பெயர் சுட்டி அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கும் அனுப்புவதென நாம் முடிவு செய்துள்ளோம்.

அது மட்டுமன்றி தீர்மானம் என்பது கலந்துரையாடலின் போது சம்பந்தப்பட்ட தரப்பினர் யாவரும் இணங்கி ஏற்றுக் கொள்ளப்படுவதாகும். ஆகவே, எங்கள் தரப்பால் ஏற்றுக் கொள்ளாத ஒரு விடயத்தை ஏற்றுக் கொண்டதாக குறிப்பிட்டும் இந்த தீர்மானங்களை எதிர்த்தோம் என்ற உண்மையைக் கூறாமலும் கலந்துரையாடலில் இடம்பெற்ற விடயங்களைக் குறிப்பிட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் நவம்பர் மாதம் 4ஆம் திகதி (4.11.2014) கொழும்பு காணி ஆணையாளர் நாயகத்துக்கு குறிப்பிட்ட 31 அனுமதிப்பத்திரங்களையும் இரத்துச் செய்ய தனக்கு ஆலோசனை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள் ளார். இது ஒரு அபத்தமானதும் அநீதியானதும் என் பதை எடுத்துக் காட்டும் வகையில் எனது விளக் கத்தை காணி ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.

திருமலை நவம்

இக்கட்டுரை 16-11-2014 அன்றும் 23-11-2014 அன்றும் தொடராக வீரகேசரியில் வெளிவந்தது.

About emurasu

Check Also

x31-1509438708-warner-wife.jpg.pagespeed.ic.3xEu8LyKyq

பென் ஸ்டோக்ஸ் மீது டேவிட் வார்னர் மனைவி கோபம்!

இங்கிலாந்து ஆல்ரவுண்டர், பென் ஸ்டோக்ஸ் நடவடிக்கை வெறுக்கத்தக்கதாக உள்ளது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் மனைவி கூறியுள்ளது ...

Leave a Reply