பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா – அவுஸ்ரேலியா இன்று மோதல்

இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – அவுஸ்ரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

8 அணிகள் இடையிலான 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் ஆட்டங்கள் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் வாய்ப்பை இழந்து விட்டன. அரைஇறுதியின் 4 இடங்களுக்கு இங்கிலாந்து, அவுஸ்ரேலியா , இந்தியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில் பிரிஸ்டலில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் இங்கிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை அணிகளை தொடர்ச்சியாக தோற்கடித்தது. ஆனால் முந்தைய லீக் ஆட்டத்தில் 115 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் தீப்தி ஷர்மா, கோஸ்வாமி தவிர மற்ற வீராங்கனைகள் அனைவரும் பேட்டிங்கில் சொதப்பினார்கள். இதனால் இந்திய அணி 158 ரன்னில் சுருண்டு போனது.

இதே போல் நடப்பு சாம்பியனான அவுஸ்ரேலிய அணி தனது முதல் 4 லீக் ஆட்டங்களில் முறையே வெஸ்ட்இண்டீஸ், இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளை அடுத்தடுத்து வீழ்த்தியது. தனது கடைசி ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் நூலிழையில் தோல்வி கண்டது.

இந்த ஆட்டம் இரு அணிக்கும் முக்கியமானதாகும். தலா 8 புள்ளிகளுடன் இருக்கும் இரண்டு அணிகளில் வெற்றி பெறும் அணி அரைஇறுதி வாய்ப்பை உறுதி செய்து விடும் என்பதால் முந்தைய தோல்வியை மறந்து வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தியா – அவுஸ்ரேலிய அணிகள் இதுவரை 41 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இந்திய அணி 8 முறையே வென்று இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 33 தடவை வென்று முன்னிலை வகிக்கிறது. உலக கோப்பையில் இரு அணிகள் மோதிய 10 ஆட்டங்களில் 2-ல் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியினர் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் அசுர பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை அடக்குவது சாத்தியம் இல்லாமல் போய் விடும்.

போட்டி குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷிகா பாண்டே கருத்து தெரிவிக்கையில், ‘முந்தைய தோல்வியில் இருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்ப நாங்கள் முழு வேகத்தையும் வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் இன்னும் அதிகமான ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிக்காட்ட வேண்டும். மேலும் சிறப்பான திட்டத்தை வகுக்க வேண்டும். உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக, களத்தில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துவது என்றும், அடுத்த அணிகளை நம்பி இருக்கக்கூடாது என்றும் முடிவு செய்து அதன் அடிப்படையில் விளையாடி வருகிறோம்’ என்றார்.

ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லேனிங் கூறுகையில் ‘இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் எங்களது சிறந்த திறன் வெளியாகவில்லை. அதில் இருந்து விரைவில் பாடம் கற்றுக்கொண்டு இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக செயல்படுவோம்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இன்றைய போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:-

இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), எக்தா பிஷ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, மான்சி ஜோஷி, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மந்தனா, மோனா மேஷ்ரம், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், நுஷாத் பர்வீன், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, சுஷ்மா வர்மா.

ஆஸ்திரேலியா: மெக் லேனிங் (கேப்டன்), சாரா அலெய், கிறிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் பால்டன், ஆஷ்லிக் கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலே, ஜெஸ் ஜோனசென், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மெகன் ஸ்கப்ட், பெலின்டா வகரெவா, வில்லானி, அமந்தா ஜாட் வெலிங்டன்.