காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம்! -சம்மந்தன்

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சிக்கு இன்று புதன்கிழமை விஜயம் செய்த அவர், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் போனவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவு சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கள், ஒரு முடிவு தருகின்றோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.

காணாமல் போனோர் விடயம், குடியேற்றம் விடயம், மக்களின் ஏனைய பிரச்சினைகள் எல்லாம் தீர வேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஷ ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சில கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அதில் தாமதங்கள் இருக்கின்றன, பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும். எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.

நாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன்.

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை. முயற்சி எடுக்கின்றோம். ஆனால் இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும் இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம்.

முறையான விசாரணை நடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் விடயத்தில் என்ன நடந்தது என அறியப்பட்டு அவர்களின் உறவினர்களுக்கு பரிகாரம் அளிக்கபட்டு, அவர்களின் வாழக்கையில் அமைதி, நிம்மதி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்கு ஒரு திட்டம் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இந்த கருமத்தை நாங்கள் அரசுடன் தொடர்ந்து பேசியிருகிறோம். இதற்கு பிறகு மிகவும் கடுமையாக நாங்கள் நிற்போம்.

இச்சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன், வட மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஆகியோரும் கலந்துகொண்டனர்.