காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களை அமைக்க சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உதவி

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகங்களை கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் அமைப்பது குறித்து உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் உறுதியளித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு உதவிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடலொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரிடையே கொழும்பில் இடம்பெற்றது.

இதன்போதே சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள் கிழக்கு மாகாண முதமைச்சரிடம் இதனை தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த அலுவலகங்களினூடாக இலவச சட்ட ஆலோசனைகளை காணாமல்போனோரின் உறவுகளுக்கு வழங்குவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் அவர்கள் உறுதியளித்தனர்.

மேலும் காணாமல் போனோரின் உறவினர்களை உறுதிப்படுத்துவது தொடர்பான உறுதிப் பத்திரங்களை வழங்கவும் இதன்போது இணக்கம் எட்டப்பட்டது. முதற்கட்டமாக இந்தப் பணிகள் திருகோணமலை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இதனை துரிதப்படுத்துமாறும் கிழக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் 1500பேர் காணாமல் போயுள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 240​0 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 2000 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.