அவுஸ்ரேலியா வீழ்த்தி, வங்கதேசத்தை அரைஇறுதிக்கு அழைத்து சென்றது இங்கிலாந்து

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்ரேலியாவை 40 ரன்கள் வித்தியாசத்தில் டக்வொர்த் லீவிஸ் முறையில் வீழ்த்தி இங்கிலாந்து அணி, வங்கதேசத்தையும் அரைஇறுதிக்கு அழைந்து சென்றது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து – அவுஸ்ரேலியா அணிகள் மோதின. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு அவுஸ்ரேலிய களம் இறங்கியது.

 இங்கிலாந்து அணி கப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 7.2 ஓவரில் 40 ரன்னாக இருக்கும்போது வார்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்தில் வெளியேறினார்.

2-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர். அணியின் ஸ்கோர் 22.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது பிஞ்ச் 64 பந்தில் 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 77 பந்தில் 56 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் டிராவிஸ் ஹெட்டை விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற அவுஸ்ரேலியா வின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. அடில் ரஷித் பந்தில் ஹென்றிக்ஸ் (17), வடே (2), மிட்செல் ஸ்டார்க் (0), கம்மின்ஸ் (4) ஆகியோர் வெளியேறினாலும், ஹெட் கடைசி வரை நின்று 64 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்தார். இதனால்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் நான்கு விக்கெட்டுக்களும், வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜாய் நான்கு ரன்களில் ஸ்டார்க் பந்தில் அவுட்டாக, இவருடன் களமிறங்கிய ஹேல்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய  ரூட் 15 ரன்களில் அவுட்டானார்.

இதன் பின் களமிறங்கிய மார்கன் மற்றும் ஸ்டோக்ஸ் நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், மார்கன் ரன் அவுட்டானார். பின் ஸ்டோக்ஸ்-உடன் ஜோடி சேர்ந்த பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்பட்டுத்தினார். பட்லர் 32 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். மறுமுனையில் ஸ்டோக்ஸ் 109 பந்துகளில் 102 ரன்களை குவித்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின் டக்வொர்த் லீவிஸ் முறையில் இங்கிலாந்து அணி 40 ரன்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவுஸ்ரேலிய அணி அரைஇறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. ‘பி’ பிரிவில் இரண்டு லீக் போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரின் முதல் அரை இறுதி போட்டி ஜூன் 14-ந்திகதி நடைபெற இருக்கிறது.