அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ரூ.4 கோடியில் தபால் தலை வாங்கினார்!

லண்டனில் மகாத்மா உருவம் பொறித்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தியின் உருவப்படம் பொறித்து, 1948-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்ட ரூ.10 முக மதிப்பிலான அஞ்சல் தலைகள் மிகவும் அரிதானவை. அவற்றில் 13 அஞ்சல் தலைகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன.

இந்த 13 அஞ்சல் தலைகள் வெளியீட்டுத்தாளில் இருந்து, கவர்னர் ஜெனரல் செயலகத்துக்கு வழங்கப்பட்டதாகும். இவைதான் அதிகாரப்பூர்வமானதாகும்.

அவற்றில் 4 அஞ்சல் தலைகள், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் ராயல் தபால் தலை சேகரிப்பு தொகுப்பில் உள்ளன. இந்த தொகுப்புதான் உலகின் மிகப்பெரிய அஞ்சல் தலை தொகுப்பு என கருதப்படுகிறது.

மீதி 9 அஞ்சல் தலைகளில் 4 அஞ்சல் தலைகள் ஒரே தாளாக சேர்ந்து உள்ளவை. இந்த 4 அஞ்சல் தலைகள் லண்டனில் ஸ்டான்லி கிப்பன்ஸ் என்ற வர்த்தகரால் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இவற்றை அவுஸ்ரேலியாவை சேர்ந்த தனியார் அஞ்சல் தலை சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் வாங்கி உள்ளார். அவரது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.

இந்த 4 அஞ்சல் தலைகள், 5 லட்சம் பவுண்டுகளுக்கு (சுமார் ரூ.4 கோடியே 15 லட்சம்) ஏலத்தில் விடப்பட்டுள்ளன.

இந்திய அஞ்சல் தலைகள் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை.