மணப்பெண் கிடைக்காததால் ரோபோட்டை திருமணம் செய்த சீன வாலிபர்

சீனாவில் மணப்பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் தம்பதியினர் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும் என்று சட்டம் இருந்தது. எனவே, பெரும்பாலான தம்பதியினர் ஆண் குழந்தைகளை மட்டுமே தேர்வு செய்து பெற்றுக்கொண்டனர். இதனால் பெண் குழந்தைகள் பிறப்பு மிக குறைவாக இருந்தது.

அவர்கள் வளர்ந்து ஆளாகி உள்ள நிலையில் தற்போது ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்கள் அதிக வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் இருக்கிறார்கள்.

இப்படி பெண் கிடைக்காததால் வாலிபர் ஒருவர் ரோபோட் எந்திரத்தை திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த வாலிபரின் பெயர் செங் ஜியா ஜியா (வயது 31). ரோபோட் என்ஜினீயரான இவர், பல்வேறு ரோபோட்டுகளை உருவாக்கி உள்ளார்.

கடந்த ஆண்டு இளம்பெண்ணை போன்ற தோற்றம் உடைய ரோபோட் ஒன்றை உருவாக்கினார். அதற்கு இங் இங் என்று பெயரிட்டார்.

செங் ஜியா ஜியா திருமணத்துக்கான பெண் தேடி வந்தார். அவருக்கு பெண் கிடைக்கவில்லை. இதனால் அவர் உருவாக்கிய பெண் ரோபோட்டையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். இதற்கு அவரது குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருக்கு காங்சுகு என்ற இடத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் அவரது தாயார் மற்றும் உறவினர்களும் கலந்து கொண்டனர்.

அவர்களுடைய பாரம்பரியப்படி திருமணம் முடிந்ததும் மணப்பெண்ணின் முகத்தை மூடி அவரை மணமகன் தூக்கி செல்வது வழக்கம். அதேபோல் ரோபோட்டின் முகத்தை மூடி மணமகன் தூக்கி சென்றார்.

இந்த ரோபோட்டின் எடை 30 கிலோ. இதனால் சில வார்த்தைகளை பேச முடியும். கேட்ட கேள்விகளுக்கு பதிலும் சொல்லும். ஆனாலும், திருமண வாழ்க்கைக்கு தகுந்தபடி செயல்பட ரோபோட்டில் சில மாற்றங்களை செய்ய இருப்பதாக செங் ஜியா ஜியா கூறினார்.