Home / நுட்பமுரசு / இந்தியாவின் முதல் பெண் கார் மெக்கானிக்
PoonamSingh1

இந்தியாவின் முதல் பெண் கார் மெக்கானிக்

உத்திரபிரதேச மாநிலம், மீரட்டில் இருக்கும் டிம்மக்கியா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர், 24 வயதே நிரம்பியவர் பூனம் சிங். இவர் முக்காடு போட்டுக் கொண்டு செல்லும் வழக்கமான கிராமத்து பெண் அல்ல என்பதை, இவர் செய்யும் வேலையை வைத்தே சொல்லிவிடலாம். ஆம், ஆண்களுக்கான பணியாக அறியப்படும் கார் மெக்கானிக் வேலையை, இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸூகி நிறுவனத்தின் மீரட்டைச் சேர்ந்த டீலர்ஷிப்பின் சர்வீஸ் சென்டரில் (Mann Service Center) இவர் செய்து வருகிறார்!
ஆட்டோமொபைல் மெக்கானிக்கிற்கான பட்டப் படிப்பை அதிகாரப்பூர்வமாக முடித்திருக்கும் இவர், அரசாங்கத்துக்குச் சொந்தமான Industrial Training Institute (ITI)-யிலும் தொழிற்பயிற்சிக்கான படிப்பைக் கற்றுத் தேர்ந்துள்ளார். ஆக இந்தியாவின் முதல் தகுதிமிக்க கார் மெக்கானிக்காக நிமிர்ந்து நிற்கும் பூனம் சிங், இதற்காக இந்தியாவின் உயரிய ஜனாதிபதி விருதினைப் பெற்றிருக்கிறார். மேலும் பூனம் சிங்கின் குடும்பத்திலேயே, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் முதல் நபர் அவர்தான்!
இத்தகைய சாதனைகளுக்குச் சொந்தக்காரரான பூனம் சிங், ஒரு மாதத்துக்கு 12 ஆயிரம் ரூபாயை சம்பளமாகப் பெறுகிறார். இதனுடன், செயல்பாட்டுக்கு ஏற்றபடியான ஊக்கத் தொகையும் அவரது சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. மிகவும் பின்தங்கிய கிராமமான டிம்மக்கியாவில், முறையான வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. இதில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பற்றி, நாம் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.
ஏனெனில் கிராமங்களில் பெரும்பாலும் ஆரம்ப நிலை கல்விக்கே பெண்கள் திண்டாடும் நிலை நீடிப்பதுடன், அவர்களது வருங்காலமும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இல்லாத நிலையே இருந்துவருகிறது. எனவே டிம்மக்கியாவில் இருக்கும் பெண்களின் முன்மாதிரியாகவும், நம்பிக்கை நட்சத்திரமாகவும் இருக்கக்கூடிய பூனம் சிங், மீரட்டில் இருக்கும் மாருதி டீலரின் சர்வீஸ் பிரிவில் (Mann Service Center), சூப்பர்வைசராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவரின் அன்றாடப் பணி, சர்வீஸுக்கு வரும் ஒவ்வொரு காரையும் சுயமதிப்பீடு செய்து, அது ஒழுக்காக சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டு,  அதன் உரிமையாளர் சொன்ன குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதா என்பதை உறுதி செய்வது ஆகும்.
தான் செய்யும் வேலையில் மிகுந்த மனநிறைவு இருப்பதாகவும், லேட்டஸ்ட்டான வாகனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த இயந்திரத் தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆட்டோமொபைல் துறையில் மாற்றம் ஒன்றே மாறாதது; அந்த அளவுக்கு புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்படுவதுடன், அவை விரைவாகப் பயன்பாட்டுக்கும் வந்துவிடுகின்றன. எனவே இந்த தொழில்நுட்பங்கள் இடம்பெற்றிருக்கும் கார்களை சர்வீஸ் செய்பவர்களுக்கும், அதைப் பற்றிய தெளிவு இருப்பதும் அவசியமாகிறது. இதற்காகவே மாருதி சுஸூகி நிறுவனம், தனது கார்களைச் சர்வீஸ் செய்பவர்களுக்குப் பிரத்யேகமாக ஒரு தொழிற்பயிற்சி கூடத்தை நடத்தி வருகிறது.
இங்கே தான் பல விஷயங்களைச் சரியான முறையில் எளிதாகக் கற்றுத் தேர்ந்ததாகப் பெருமையுடன் சொல்கிறார் பூனம் சிங். இப்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களில் இருக்கும் இளைய தலைமுறையினருக்கு, ITI படிப்பு சிறந்த சாய்ஸாக இருக்கிறது. இவர்களுக்கு ஆட்டோமொபைல் ஆர்வம் இருந்தால் அது கூடுதல் போனஸ்! ஏனென்றால் கார்கள் மற்றும் அது சார்ந்த தொழில்நுட்பங்கள், ஃபேக்டரி விசிட், ஆட்டோமொபைல் துறையில் உயர்பதவிகளில் இருப்பவர்களுடன் நேரடித் தொடர்பு, அசத்தலான பாடத்திட்டம் என அவர்களை ஈர்க்கக்கூடிய அம்சங்கள் அதிகம்!
”ஆண்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கக்கூடிய துறையில், எனது பணி அமையும் என துளிகூட எதிர்பார்க்கவில்லை. நான் ITI படிப்பைச் சிறப்பாக முடித்ததாலேயே, எனக்கு சிறப்பான நிறுவனத்தில் இப்படிப்பட்ட வேலை கிடைத்ததாக எண்ணுகிறேன். தற்போது இதற்கான மேற்படிப்பை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். பெண்கள் செய்யத் தயங்கும் பல விஷயங்களை நான் துணிந்து செய்திருப்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
இயந்திரங்கள் என்னை பெரியளவில் ஈர்க்கின்றன என்பதுடன், ITI படிப்பு தந்த ஆர்வத்தினால், கார்கள் மற்றும் அதுசார்ந்த பாகங்கள் / தொழில்நுட்பங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளவே விரும்புகிறேன்” என தன்னடக்கத்துடன் பேசுகிறார் பூனம் சிங்.

About குமரன்

Check Also

Tamil_News_large_1882188_318_219

பலூன் மூலம் இணைய இணைப்பு!

இணைய வசதி இன்னும் எட்டாத பகுதிகளுக்கும், அந்த வசதியைத் தரும் நோக்கத்தில், கூகுளின் தாய் நிறுவனமான, ‘ஆல்பபெட்’ துவங்கியது தான், ...