குறைந்த மின்சாரத்தில் குரல் ஆணை ‘சில்லு’

இனி, குரல் ஆணை மூலம் இயக்கப்படும் சாதனங்கள் அதிகரிக்கப் போகின்றன. இந்த தேவையை சமாளிக்க, அமெரிக்காவிலுள்ள, மாசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த சந்திரசேகரன் தலைமையிலான ஆராய்ச்சிக்குழு, ஒரு சிறப்பு சிலிக்கன் சில்லு ஒன்றை உருவாக்கியுள்ளது.

தற்போது ஆப்பிளின், ‘சிறி’, கூகுளின், ‘ஹோம்’, அமேசானின், ‘எக்கோ’ போன்ற குரல் ஆணை மூலம் இயங்கி, குரல் மூலமே தகவல் தரும் தொழில்நுட்பங்கள் செயற்கை நுண்ணறிவு மூலமே இயங்குகின்றன. இவை இயங்கும் போது, ஒரு வாட் அளவுக்கு மின் சாரத்தை செலவிடுகின்றன.

ஆனால், ஆனந்த சந்திரசேகரன் அணி உருவாக்கியுள்ள சில்லு, 10 மில்லிவாட் மின்சாரத்தையே செலவிடும். பொத்தான்கள், தொடுதிரை போன்ற உள்ளீட்டு முறைகளுக்கு பதில், குரல் ஆணை முறை முழுவதுமாக பரவும் நிலையில், அவற்றுக்கேற்ற சில்லு உருவாக்கப்படுவது தான், அடுத்த கட்ட வளர்ச்சியாக இருக்கும் என, ஆனந்த சந்திரசேகரன் கருதுகிறார்.

அண்மையில் அமெரிக்காவில் நடந்த, ‘சாலிட் ஸ்டேட் சர்க்யூட்ஸ் சொசைட்டி’ மாநாட்டில், தன் அணி உருவாக்கிய குரல் ஆணை சில்லு பற்றி சந்திரசேகரன் அறிவித்தார்.