பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: சினேகா

நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் திரைத்துறையினரிடையே பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு சினிமா துறையை சேர்ந்த பலரும் கண்டங்களையும், எதிர்ப்புக்களையும் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகை சினேகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘என்னுடைய துறையில் பணியாற்றும் சக கலைஞர்களான பாவனா மற்றும் வரலட்சுமி ஆகியோருக்கு நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை அளித்து இருக்கிறது.

இந்த நேரத்தில் அவர்களுக்கு நான் எப்போதும் துணையாக இருப்பேன் என்பதனை உறுதிபடுத்திக்கொள்கிறேன்.  எந்தவித பயமின்றி நடந்ததை வெளிப்படையாக தெரிவித்த அவர்களின் தைரியத்தை பாராட்டுகிறேன்.

ஆண் தெய்வங்களுக்கு இணையாக பெண் தெய்வங்களை வணங்கும் நாட்டில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆனால் இப்போது பெண்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்த காலங்கள் அழிந்து விட்டது. இது நம் நாட்டுக்கு ஏற்பட்ட பெரிய அவமானம்.

அந்த நிலைமையை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. பெண்களுக்கு தங்களின் மரியாதையை பெற்றுத்தர நாம் குரல் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு அம்மாவாக என் மகனுக்கு பெண்களை மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் சொல்லித்தருவேன் என உறுதி மொழி எடுக்கிறேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.