மெல்பேர்னில் வர்த்தக அங்காடியுடன் மோதியது விமானம்: ஐவர் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள அங்காடி ஒன்றின் மீது, இலகுரக விமானம் ஒன்று மோதி விபத்துள்ளானதில் அதில் பயணித்த ஐவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (செவ்வாய்கிழமை) உள்ளூர் நேரப்படி காலை 09.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. குறித்த இலகுரக விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே குறித்த விபத்திற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் உதவி ஆணையர் ஸ்டெபன் லியேன் (Stephen Leane), விபத்துக்குள்ளான விமானம் Essendon விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது எனவும் அதற்கு இயந்திரக் கோளாறே காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்து ஏற்பட்ட போது சம்பவத்துடன் தொடர்புபட்ட அங்காடி மூடப்பட்டிருந்தது எனவும் அதனால் பொதுமக்கள் எவரும் பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் இதுவரை பொலிஸாரால் வெளியிடப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த விக்டோரியா மாநிலத்தின் உயர் அதிகாரி ஒருவர், “இந்த விபத்து எம் அனைவரையும் மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. இது போன்ற சம்பவம் ஒன்றை நாம் எதிர்பார்க்கவில்லை. இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார்.

குறித்த விபத்தை நேரில் கண்ட பொதுமக்களில் ஒருவர் கருத்து தெரிவித்த போது, “நான் கடை ஒன்றுக்கு வெளியே அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டிருந்தேன். அப்போது இலகுரக விமானம் ஒன்று மிக வேகமாக வருவதை அவதானித்தேன். செய்வதறியாது உடனே அங்கிருந்து ஓடினேன். அப்போது பாரிய வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது. திரும்பிப் பார்த்தபோது குறித்த விமானம் அருகில் இருந்த அங்காடியொன்றில் மோதுண்டு கிடந்தது. சுற்றுப்புறம் எங்கும் புகை நிரம்பிக் காணப்பட்டது” என தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் அவுஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

external r0_0_620_348_w1200_h678_fmax