நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும்

சிங்களத் தலைமைகளை நம்பி அவர்களுடன் சேர்ந்திருந்து ஏமாற்றப்படுவதுதான் தேவையென்றால், நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புப் பத்திரிகை ஒன்றில் வெளியான கட்டுரையொன்றில் தெரிவிக்கப்பட்ட சில விடயங்கள் இன்னமும் என் தலையைக் குடைந்து கொண்டிருக்கிறது.

இது ஒரு சிறுகதையாக அல்லது குறுநாவலாக இருந்தால் இதனைக் கற்பனை கலந்தது என்று தள்ளிவிடலாம். ஆனால் இது ஓர் அரசியல் கட்டுரை. அறிய வருவது, தெரிய வருகிறது, கூறப்படுகிறது என்ற மாமூலான ஊடகச் சொல்லாடல்கள் எதுவும் இங்கு இடம்பெறவில்லை.

கட்டுரையில் எங்கும் கேள்விக்குறியோ, ஆச்சரியக்குறியோ போடப்பட்டு, சொல்ல வந்த விடயத்தை நம்பிக்கையீனமாக்கவில்லை.

இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் முடிந்த முடிவாகவே சொல்லப்பட்டிருந்தன. உள்வீட்டுக்குள் (கூட்டமைப்பு) வசிக்கும் ஒருவரே இக்கட்டுரையின் மூலவராக இருக்கலாமென்ற சந்தேகம் எனக்கு நிரம்பவேயுண்டு.

ஆனால் இதனை நிச்சயப்படுத்த எனக்கு வழியேதும் இல்லாததால், அதனை வைத்தே இக்கட்டுரையை எழுத விழைகின்றேன்.

நான் கூறும் அந்தப் பத்திரிகைக் கட்டுரையின் சாராம்சம் இதுதான்:  “அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்கு தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவை நியமிக்க முடிவாகியுள்ளது.

அதேசமயம், இப்போதைய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தேசிய அரசியலுக்குள் இறக்கி, தமிழ்த் தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை அவரிடம் ஒப்படைக்க ஏற்பாடாகியுள்ளது.

இவ்விரு முடிவுகளையும் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் எடுத்துள்ளார். அடுத்த தேர்தலுக்கு முன்னர் அல்லது பின்னராக அரசியலிலிருந்து ஓய்வு பெறவும் சம்பந்தன் முடிவெடுத்துள்ளார்” இப்படித்தான் அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

இரா.சம்பந்தன் 1933ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5ம் திகதி பிறந்தவர். அடுத்த வாரம் 84வது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார்.
முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் 1939ம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் திகதி பிறந்தவர். இந்த வருடத்தின் இறுதியில் இவரது 78வது பிறந்தநாள் வரவுள்ளது.

மாவை சேனாதிராஜா 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ம் திகதி பிறந்தவர். இவ்வருடம் அக்டோபரில் இவரது பவள விழாவை மலர் வெளியீட்டுடன் நடத்த ஏற்பாடாகி வருகிறது.

வயதின் அடிப்படையில் பார்க்கையில் சம்பந்தன் ஓய்வு பெறும் காலத்துக்கு வந்துவிட்டார் எனலாம். அவரே அந்த முடிவுக்கு வந்துவிட்டாரென்றால் அதனை நல்ல முடிவாகவே பெரும்பான்மையான தமிழர்கள் ஏற்றுக் கொள்வரென்பது நிச்சயம்.

மைத்திரி – ரணில் இரட்டையருடன் கனவான்கள் ஒப்பந்தம் (எழுதாத ஒப்பந்தம்) செய்து எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்ததையடுத்து, 2016 முடிவுக்குள் ஒரு தீர்வு கிடைக்குமென நம்பிக்கை வெளியிட்டு ஏமாந்து போயிருப்பவர் சம்பந்தன்.

மீண்டு ஒரு குருட்டு நம்பிக்கையில் 2017 தீபாவளிக்கு முன்னர் ஒரு தீர்வு வரலாமென்று நம்புவதாக இவர் சொன்னாலும், இது அரசியல் இருக்கைக்கான ஓர் ஒய்யார வார்த்தை என்பதை விசயம் தெரிந்த தமிழர்கள் புரிந்து கொள்வர்.

அரசியலிலிருந்து ஓய்வுபெற முன்னர் அல்லது இளைஞர்களால் ஓரங்கட்டப்பட முன்னர் வடமாகாண முதல்வர் கதிரையில் அமர வேண்டுமென மோகம் கொண்டவர் மாவையர். (தற்போது வடமாகாணசபை அமைச்சர்களாகவுள்ள நால்வரில் இருவர் அதே குதிரையில் ஏறிச் சவாரி செய்யும் நாட்டம் கொண்டு திரைக்குப் பின்னாலான நாடகங்களை ஆரம்பித்துள்ளனர் என்பது மற்றொரு தகவல்).

கடந்த மாகாணசபைத் தேர்தலின்போதே இப்பதவியில் இலக்கு வைத்து ஓடித்திரிந்து களைத்து விழுந்தவரே மாவையர்.

கூட்டமைப்பின் அண்மைக்கால நம்பகமற்ற செயற்பாடுகளால், யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் குழம்பிப் போயுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கமும், வடக்கிலும் கிழக்கிலும் பெயர் பொறிக்கும் எழுக தமிழ் எழுச்சியும், இதற்கு ஆதரவாக புலம்பெயர் உறவுகள் மேற்கொண்ட பேரெழுச்சிகளும் தமிழ் மக்களுக்கு மாற்று அரசியலின் அவசியத்தை எழுப்பிவிட்டுள்ளது. அந்த மாற்றத்துக்கான அரசியலின் தலைமைக்குரியவர் இன்றைய வடமாகாண முதல்வரே என்பது தாயகத்திலும் புலம்பெயர்ந்தும் வாழும் தமிழ் மக்களின் பொதுவான அபிப்பிராயம்.

கடந்த வாரம் இது தொடர்பாக தமிழுலகு அறிந்த அரசறிவியலாளர் மு. திருநாவுக்கரசு எழுதிய கட்டுரையொன்று கொழும்புத் தமிழ் ஊடகமொன்றில் வெளிவந்தது. இதன் முக்கியத்துவம் கருதி சில இணையங்கள் இதனை மீள்பிரசுரம் செய்திருந்தன.

“களத்தில் சம்பந்தன் தேசியத் தலைவரா? விக்கினேஸ்வரன் தேசியத் தலைவரா?” என்ற கேள்வியுடன் கட்டுரை முற்றுப் பெற்றுள்ளதாயினும், இரண்டாமவரே இத்தலைமைக்குப் பொருத்தமானவர் என்பதை கட்டுரையின் வரிகளுக்கிடையேயான இடைவெளிகள் தொட்டுக் காட்டி நிற்கின்றன.

கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் திரு. விக்கினேஸ்வரன் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று ஒரு சாதனையை நிலைநாட்டினார்.

கடந்த மூன்றரை வருடங்களில் தற்துணிவான அரசியல்ரீதியான ஒவ்வொரு செயற்பாட்டிலும் தனித்துவமான அரசியற் போராளி என்ற பெயரை இவர் தனதாக்கிக் கொண்டார்.

புகலிடத் தமிழர் மத்தியிலும் கட்சி பேதங்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் ஏகோபித்த நம்பிக்கைக்குரிய தலைவராகவும் இவர் மதிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த வருட இறுதியில் இங்கிலாந்துக்குச் சென்றபோதும், கடந்த மாத முற்பகுதியில் கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டபோதும் இங்கெல்லாம் வாழும் ஈழத்தமிழர்கள் அவரை தமிழரின் நம்பிக்கை நட்சத்திரமாக வெளிப்படுத்தி தங்கள் மனஉணர்வை எடுத்துக் காட்டினர்.

சரிந்துவரும் தங்கள் செல்வாக்கை ஓரளவுக்காவது தரையில்பட விடாது தாங்கி வைத்திருப்பவர் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என்பதை கூட்டமைப்பின் ஒவ்வொருவரும் நன்கறிவர்.

இதற்கு உதாரணமாக முதலமைச்சர் கனடாவில் தெரிவித்த மூன்று கருத்துகளை இங்கு முன்வைக்கலாம்.

1. “நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அக்கட்சியின் சார்பாகவே வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன்”.

2. “தமிழ் மக்கள் பேரவையின் தலைமைப் பதவியை ஏற்குமாறு சமூகப் பிரமுகர்கள் என்னிடம் கேட்டபோது, இப்பேரவை ஒருபோதும் அரசியற் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிடாது என எழுத்தில் தந்தால் உடன்படுவேன் என்றேன். அப்படியே எழுத்தில் தந்தனர். நானும் உடன்பட்டேன்”.

3. “கடந்த தேர்தலில் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைத்த கோரிக்கைகளை வலியுறுத்தியே எழுக தமிழ் பேரணி நடத்தப்படுகிறது. இது கூட்டமைப்புக்கு எதிரானது அல்ல”.

இம்மூன்று அம்சங்களையும் கனடாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இதனையிட்டு கூட்டமைப்பின் தலைமை அவர்மீது நம்பிக்கையையும் மதிப்பையும் அதிகரித்துள்ளது என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே மாவையர் மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் பற்றிய ஒரு முடிவுக்கு சம்பந்தன் சுயமாகவே வந்திருக்கக்கூடும்.

இதன் வெளிப்பாடாகவும் இதனை மக்களிடம் நாடிபிடித்துப் பார்க்கும் முகமாகவும் அந்தப் பத்திரிகையின் கட்டுரைக்கு விடயதானம் வழங்கப்பட்டிருக்கலாம். இவ்வாறு எழுதப்பட்டமைக்கு இன்னொரு பக்கப்பார்வையும் உண்டு.

முதலமைச்சர் அவர்களுக்கு அதிகரித்துவரும் மக்கள் செல்வாக்கை முடக்க நிலைக்குக் கொண்டுவரும் எண்ணம் இதன் பின்னணியில் இருக்கலாமென சிலர் சொல்கின்றனர்.

தேசிய அரசியல் தலைமையைக் காட்டி வடமாகாண முதல்வர் பதவியை இலாவகமாகப் பறித்து அப்படியே அவரை வீட்டுக்கு அனுப்பலாமெனவும் கூட்டமைப்பில் சிலர் எதிர்பார்க்கின்றனராம்.

முதலமைச்சரை எழுப்புவதுபோல் எழுப்பி அரசியலில் ஓரங்கட்ட புனையப்பட்ட ஒரு கட்டுரையாக சம்பந்தன் அணியைச் சார்ந்தவர்கள் இதனை எழுதி வெளியிட்டிருக்கலாமெனவும் எண்ண இடமுண்டு.

கனடாவில் நின்றபோது முதலமைச்சரிடம், அடுத்த வடமாகாணசபைத் தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்றொரு கேள்வியும் எழுப்பப்பட்டது.

“2013 ஆகஸ்டில் நான் கனடா வர விண்ணப்பித்த விசா நிராகரிக்கப்பட்டது. செப்டம்பர் மாதத் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னரே எனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று நான் தேர்தலில் போட்டியிட்டேன். கனடா விசா மறுக்கப்பட்டதால்தான் இப்பதவிக்கு நான் செல்ல நேர்ந்தது. அடுத்த தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போமே” என்று பிடிபடாத பதிலை வழங்கினார் முதலமைச்சர்.
தமிழ் அரசியலில் பேரம் பேசுவதற்கும் அங்காடி வியாபாரத்துக்கும் நம்பிக்கையற்ற வெற்றுச் சிந்தனைகளை பரவ விடக்கூடாது. வன்னித் தலைமை 2000ம் ஆண்டில் உருவாக்கிய ஆரம்பகால கூட்டமைப்பு இன்றைய நிலைமாறுகால அரசியல் பயணத்துக்கு அவசியமெனில் தமிழரின் இரு தலைமைகளும் இணைந்தே ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இதனைவிட்டு, சிங்களத் தலைமைகளை நம்பி அவர்களுடன் சேர்ந்திருந்து ஏமாற்றப்படுவதுதான் தேவையென்றால் நாயுடன் படுத்தால் உண்ணிதான் மிஞ்சும் என்ற பழமொழி கூறும் உண்மையே தமிழருக்குக் கிடைக்கும் தீர்வாகும்.

பனங்காட்டான்