ஜல்லிக்கட்டு போராட்டம்: கமல் பகிர்ந்த 10 கருத்துகள்

நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள் என்று கமல் உறுதிப்பட தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு ஆதரவாக மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் தமிழகமெங்கும் முடிவுக்கு வந்துள்ளது. இதற்கு தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்து வந்தார்கள். மேலும், சென்னையில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் கலவரக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினார்கள். இது குறித்த வீடியோ பதிவுகள் சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டன.

ஜல்லிக்கட்டு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம், கலவரம், போலீஸ் தடியடி உள்ளிட்ட விஷயங்களை முன்வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் கமல்ஹாசன். அப்போது அவர் பேசியது..

* முதல்வர் அலங்காநல்லூர் செல்லும் போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்று பயமாக இருந்தது. நமது முதல்வரை யாரும் தவறாக பேசிவிடக் கூடாது அல்லவா. அவருடன் சென்றவர்களோடு பேசிக் கொண்டே இருந்தேன். அவர் அங்கிருந்து திரும்பியவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன். சட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்து போராட்டக்காரர்களைப் பார்ப்பதாக சொன்னார். எனக்கும் அது நியாயமாகப் பட்டது. அதற்குள் இப்படி நடந்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிவிட்டு நிறைய கோரிக்கைகள் கேட்கிறார்கள் என்றார்கள். உள்ளே இருக்கும் குமுறல்களின் பட்டியல்தான் அது. கேட்க வேண்டியது கடமை.

* அரசியலுக்கு வந்துவிட்டு போக வேண்டுமே தவிர, அங்கேயே இருந்துவிடக் கூடாது. எங்களுக்கு எல்லாம் வேறு வேலை இருக்கிறது. தெரியாதை வேலையை நான் ஏன் செய்து கொண்டு இருக்க வேண்டும்.

* ஜல்லிக்கட்டு விஷயத்தில் அரசாங்கத்தால் என்ன முடியுமோ அதெல்லாம் செய்துள்ளனர். ஆனால், அதோட வரிசை முறை மாறிவிட்டது என நான் நினைக்கிறேன். அது சரிதானா என்று சொல்வதற்கு எனக்கு அனுபவம் கிடையாது. அரசியலை வெளியே இருந்து பாமரனாக பார்த்தவன், ஆகையால் எனக்கு அந்த தகுதி கிடையாது. தற்போது நான் சொல்வது என் அனுபவம்.

* ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டுமல்ல, அனைத்து பிரச்சினையுமே தமிழக அரசியலில் எதிரொலிக்கும். பத்திரிகையாளர்கள் ஒன்றை உணர வேண்டும். நீங்கள் எழுதிக் கொண்டிருப்பது செய்தி என நினைக்காதீர்கள், சரித்திரம்.

* ‘விருமாண்டி’ படத்துக்காக அலங்காநல்லூரில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. ஆகையால், சென்னையில் அலங்காநல்லூரை உருவாக்கி படப்பிடிப்பு நடத்தினோம். நிஜமாகவே ஏறுதழுவியன் நான்.

* உண்மையில் நான் நடிகர் சங்கத்துக்கு ஆலோசகர் கிடையாது. ஒரு உறுப்பினராக என்னுடைய கருத்துகளைச் சொல்வேன். என்னிடம் ஆலோசனை கேட்குமளவுக்கு நாசர், விஷால் மற்றும் கார்த்தி கிடையாது. அவர்களே முடிவுகளை நல்லபடியாக எடுப்பார்கள். ஆகையால் தான் பொறுப்புகளை அவர்களிடம் கொடுத்துவிட்டு நிம்மதியாக உட்கார்ந்துள்ளோம்.

* மாணவர்கள் என்பதால் அவர்கள் பாடம் படிப்பவர்கள். இப்போராட்டத்தை அவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும். யாரும் தலைவனாக இருக்க வேண்டியதில்லை ஆனால் ஒன்றுபட்ட குரல், ஒன்றுபட்ட கோரிக்கைகள் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இந்தப் போராட்டத்தின் மூலம் புரிந்து கொண்டிருப்பார்கள்.

* மாணவர்களை தேச விரோதிகள் மற்றும் சமூக விரோதிகள் என ஒதுக்க வேண்டாம். நான் பார்த்த வீடியோக்கள் எல்லாம் நிஜமாக இருக்கக் கூடாது என்ற சிறிய பதற்றம் எனக்கு இருக்கிறது. மாணவர்களிடையே எப்படி தீயவர்கள் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்களோ, அதே போல் காவல்துறையிலும் சில தீயவர்கள் இருப்பார்கள். அனைத்து துறையிலும் தீயவர்கள் இருப்பார்கள். காவல்துறையில் மிகவும் குறைவு என நம்புவோம்.

* குளிர்பான விளம்பரங்களில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் என பல கருத்துகள் உலவுகின்றன. நான் கூடத் தான் சாமி கும்பிட வேண்டாம் என்று சொல்வேன். ஆனால், நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டுமே. அது என்னுடைய நம்பிக்கை, அதை நான் உங்களிடம் வலியுறுத்த முடியாது. அதே போல் நீங்களும் என்னை வலியுறுத்த முடியாது.

* நியாயமான போராட்டத்துக்கு மீண்டும் மாணவர்கள் கண்டிப்பாக வருவார்கள். விவசாயிகளை பாதுகாப்பது தமிழகத்தின் பொறுப்பல்ல, உலகத்தின் பொறுப்பு. விவசாயிகளை காப்பாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள்” என்று பேசினார் கமல்ஹாசன்.