அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: கெர்பர் 4-வது சுற்றுக்கு தகுதி

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது.

5-ம் நாளான இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் (ஜெர்மனி)- பிளிஸ்கோவா (செக்குடியரசு) மோதினர்.

இதில் கெர்பர் 6-0, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார். அவர் 4-வது சுற்றில் அமெரிக்க வீராங்கனை வான்டேவங்ஹியை எதிர் கொள்கிறார்.

வான்டேவங்ஹி 3-வது சுற்றில் கனடாவின் பவுச் சர்ட்டை 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

3-வது சுற்றில் 11-ம் நிலை வீராங்கனையான எலினா சிவிடோலினா தோற்றார். அவரை ரஷியாவின் பவ்லயூ சென் கோவா 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார்.

செர்பியாவின் ஜான் கோவிச் 3-வது சுற்றில் தோற்றார். அவரை ரஷியாவின் 8-ம் நிலை வீராங்கனையான குஸ்னெட் சோவா 6-4, 5-7, 9-7 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார்.

நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான ரபேல் நடால் 6-3, 6-1, 6-3 என்ற நேர்செட் கணக்கில் பக்டேடிசை (சைப்ரஸ்) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.