யூடியூபிற்கு போட்டியாக புதிய களத்தில் கால்பதிக்கும் பேஸ்புக்

வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் பயனாளர்களுக்கு வருமானமும் கிடைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த சமூக வலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலகின் முன்னணி வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் ‘யூடியூப்’ நிறுவனம் வீடியோக்களின் இடையே விளம்பரங்களையும் காட்சிப்படுத்தி வருகின்றது. இந்த விளம்பரங்கள் மூலம் வீடியோக்களை அப்லோடு செய்பவர்களும் வருமானத்தைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்றதொரு வசதியினை பேஸ்புக் நிறுவனம் விரைவில் வழங்கவுள்ளது. இதன்படி, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடியதாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களின் இடையில் மட்டும் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும். (வழக்கமாக யூடியூப் வீடியோக்களில் ஆரம்பத்திலேயே விளம்பரங்கள் தடைக்கல்லாக வந்து நிற்பது குறிப்பிடத்தக்கது)

மேற்படி விளம்பரங்கள் அனைத்தும் பாரம்பரிய தொலைக்காட்சிகளில் வெளியாகும் விளம்பரங்களைப் போன்றே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் விளம்பரம் மூலமாக மட்டும் சுமார் 700 கோடி டாலர்(96 சதவீதம்) அளவுக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வருவாய் வளர்ச்சியின் பெரும்பகுதி, கைபேசி மூலமாக வரும் விளம்பர வருவாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நிலவரத்தின்படி, நாளொன்றுக்கு 5 கோடி மக்கள் பேஸ்புக்கில் வீடியோக்களை காண்கின்றனர். அவர்கள் அனைவரும் வீடியோக்களை பார்க்கும் நேரம் அன்றாடம் சராசரியாக 10 கோடி மணிநேரமாக உள்ளது. இந்த பயன்பாட்டை சாதகப்படுத்திக் கொள்வதுடன் வருமானமாக்கும் முயற்சியில் பேஸ்புக் தற்போது களமிறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.