த ஏஜ் ஆஃப் ஷாடோ: போராளிகளின் கதை

தென்கொரியாவின் மீது 1920களில் ஜப்பான் ஆக்கிரமித்து ஆட்சி செய்தபோது, அதற்கு எதிராக போராடிய கொரிய புரட்சி குழுக்களின் கதையை சுவாரசியமாக, அதேநேரத்தில் அதன் அழுத்தமும் உண்மையும் குறையாமல் எடுத்திருக்கிறார் அந்நாட்டின் முக்கியமான இயக்குநரான கிம் ஜீ வூன்.

கடந்த செப்டம்பரில் தென்கொரியாவில் வெளியாகியுள்ள ‘த ஏஜ் ஆஃப் ஷாடோ’ அந்நாட்டின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுகிறது.

1920களில் தென்கொரியாவை ஆக்கிரமிப்பு செய்த ஜப்பான் தனது கடுமையான ஆட்சியை அதன் மீது செலுத்துகிறது. ஜப்பானியர்களுக்கு கொரியர்கள் அடிபணிந்து நடக்க வேண்டும்; இல்லையெனில், உயிரை விட வேண்டும். இந்நிலையில், தென்கொரியாவின் விடுதலைக்காகப் போராடும் புரட்சி குழுக்கள் தஙகள் குழுவினைச் சேர்ந்த ஆட்களை ஜப்பானிய போலிஸிலும் வைத்திருக்கிறது. புரட்சி குழுவின் முக்கிய நபரான கிம் வூ ஜீன் மற்றும் அவர்களது நணபர்களைப் பிடிக்க முயல்கிறார் லீ ஜீயோங் சூல்.

போலிஸில் முக்கிய அதிகாரியாக இருக்கும் லீ, ஏற்கெனவே கொரிய புரட்சி குழுவில் இருந்தவர். புரட்சி குழுவிற்கு உளவு பார்த்தல் புரட்சி குழுக்களின் செயல்பாடுகள் என காட்சிப்படுத்தியிருக்கிறார் கிம் ஜீ வூன்.

படத்தின் ஆரம்பக் காட்சியே புரட்சி குழுவின் முக்கிய நபரை பிடிக்கும் காட்சி, அந்தக் காட்சியை காட்சிப்படுத்திய விதத்திலேயே படத்தின் ஸ்டைலான மேக்கிங் நம்மை ஈர்க்கிறது. படம் முழுக்க முழுக்க கம்ர்ஷியலாக இருந்தாலும் எந்த இடத்திலும் அதிகப்படியான காட்சியமைப்புகள் இல்லை. கதையை விட்டு நகர விடாமல் செல்கிறது திரைக்கதை.

கதாபாத்திரங்கள் மூலமும், வசனங்கள் மூலமும் கொரிய புரட்சியைப் பற்றியும் ஜப்பானிய ஆட்சியைப் பற்றியும் பல தகவல்களை தருகின்றனர். புரட்சி குழுக்களைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டால் அவர்களது நிலை என்னவாகும் என்பதைக் காட்டும் காட்சிகள் நிலைகுலைய வைக்கின்றன. ஆனால், உண்மையான வரலாறு இதனை விட மோசமானதாகக் கூட இருக்கலாம். படம் முழுக்க கமர்ஷியலாக இருந்தாலும் கதாநாயகத்துவம் (ஹீரோயிசம்) என்பது துளியும் இல்லை.

கதைக்கு தேவையானதை கமர்ஷியலாக சொல்லியதில் கவனிக்க வைக்கிறார் இயக்குநர். 1920களின் காலகட்டத்தை அதிக பொருட்செலவோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பீரியட் படத்தை இவ்வளவு ஸ்டைலிஷாக எடுக்க முடியுமா என ஒவ்வொரு காட்சியும் வியக்க வைக்கிறது.

படம் முழுக்க உளவு பார்க்கிறார்கள், யார் யார் – யாருக்கு உளவு பார்க்கிறார்கள் என்ற பதற்றம் படம் முழுதுமே நீடித்துகொண்டே இருக்கிறது. படத்தின் திரைக்கதையின் ஓட்டமும் பல்வேறு திருப்பங்களை உடைத்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறது. ஆனால், கதையின் போக்குக்கு சுவாரசியமாக எது தேவைப்படுகிறதோ அதனை மட்டுமே திரைக்கதையில் அனுமதித்திருக்கிறார். கதாநாயகன் ஜெயிக்க வேண்டும் என்ற முடிவு சுத்தமாக இல்லை. கதை அதன் போக்கில் செல்கிறது. தென்கொரியாவை ஜப்பான் ஆக்கிரமித்தபோது நடந்த சம்பவங்களை உண்மையாகவும் கொஞ்சம் கமர்ஷியலும் கலந்தே தருகிறார்.

லீயின் நிலைப்பாடுதான் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்கிறது. லீ எடுக்கும் முடிவுகள் எதிர்ப்பாளர்களின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவமாக இருக்கிறது. கடைசியில் எதிர்ப்பாளர்கள் அனைவருமே கைது செய்யப்பட்டாலும் கொரியாவின் விடுதலைக்கான போரட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நாம் செய்ய வேண்டியதில் இல்லை முடிவு, முடிவு நோக்கிய பயணமே நம்மை செயல்பட வைக்கிறது என்ற அந்த வசனமே படத்தின் இறுதிக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது.

ஒரு கனமான கதைக்களத்தை எடுத்துகொண்டு இவ்வளவு ஸ்டைலிஷாக எடுத்ததில் ‘த ஏஜ் ஆஃப் ஷாடோ’ அருமையான அனுபவம். கமர்ஷியலாக ஒரு கனமான கதைக்களத்தை எடுத்திருக்கிறார். 1923-ல் தென்கொரியாவில் ஜப்பானிய காவல் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பினை மையமாக வைத்து கதையைப் புனைந்திருக்கிறார் கிம் ஜீ வூன்.

2017 நடைபெற இருக்கும் ஆஸ்கார் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி பிரிவில் தென்கொரியா சர்பாக போட்டியிடுகிறது இத்திரைப்படம். கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்படவிழாவின் இறுதி திரைப்படமாக திரையிட்டனர்.