பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளர் ஆனார்

பிரபல பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். தனது தனித்துவமான குரல் வளத்தை கொண்டு இசை பிரியர்களின் உள்ளங்களை தன் பாடல்களால் வென்று இருப்பவர் அனுராதா ஸ்ரீராம். ‘இனி அச்சம் அச்சம் இல்லை’… ‘அன்பென்ற மழையிலே’… ‘கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு’ என பல பாடல்களுக்கு அனுராதா ஸ்ரீராமின் குரல் உயிர் மூச்சாக இருந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் தற்போது இசையமைப்பாளராக மாறியிருக்கிறார். ‘மனசு’, ‘விருப்பம்’ என இரண்டு பாடல்களையும் எழுதி, அவரே இசையமைத்து, அதை மதன் கார்க்கியின் ‘டூப்பாடூ’ இசைத் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த பாடல்கள் குறித்து அனுராதா ஸ்ரீராம் கூறும்போது, ‘எல்லோருடைய வாழ்க்கையிலும் பல தருணங்கள் இருக்கும். ஆனால் ஒரு சில தருணங்களில், நம்மை அறியாமலேயே நம்முடைய மனம் வழுக்கி விழுந்து விடும். இந்த கருத்தை மையமாக கொண்டு நான் உருவாக்கிய பாடல் தான்  ‘மனசு எதை பார்த்து வழுக்கி விழுந்துச்சு’. நான் எழுதி இசையமைத்த இந்த பாடலில் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார் பிரவீன்.

‘விருப்பம்’ – என்னுடைய இரண்டாவது பாடல். சிலருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு கையேந்தி பவனில் சாப்பிட வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு நடந்து செல்ல வேண்டும் என்ற ஆசை. சிலருக்கு காரில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை. இப்படி எல்லோருக்கும் ஒருவித ஆசைகளும், விருப்பங்களும் இருக்கும். இதுபோன்ற விருப்பங்களை ஒன்றாக சேர்த்து உருவானதுதான் ‘விருப்பம்’ பாடல்.

தற்போது என்னுடைய இந்த இரண்டு பாடல்களும் இசை பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. Doopaadoo.com இணையத்தளத்தில் ‘மனசு’ மற்றும் ‘விருப்பம்’ பாடல்களை கேட்டு, தங்களின் கருத்தை பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்.” என்று உற்சாகமாக கூறுகிறார் இசையமைப்பாளர் – பாடகர் அனுராதா ஸ்ரீராம்.

விரைவில் மகாகவி பாரதியாரின் பாடல்களுக்கு புத்துயிர் அளித்து, அதனை புதுப்பொலிவுடன் அனுராதா ஸ்ரீராம் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.