தமிழறிஞர்களின் பார்வையில் கார்த்திகை தீபம்!

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி தமிழறிஞர்கள் எழுதிய பாடல்கள், கட்டுரைகளிலிருந்து சில பகுதிகளைப் பார்க்கலாம்.

நாள்தோறும் உழைத்துக் களைத்த மக்கள் தங்கள் உடலுக்கு ஓய்வு கொடுத்து இன்புற்று மகிழ்ந்திருக்க, ஒன்று கூடி விழாக்களை நடத்துவர். அவற்றில் சமயச் சார்பற்ற, சமயச் சார்புள்ள என இருவகை விழாக்கள் உண்டு. சமய விழாக்களில் கார்த்திகை தீபமும் ஒன்று.

கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை… “தொல் கார்த்திகை நாள்” என்னும் திருஞானசம்பந்தரது கூற்று மெய்ப்பிக்கின்றது. தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றிய செய்திகள் சில இடங்களில் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் “அழல்”, “எரி’ என்னும் சொற்கள் கார்த்திகையை குறிப்பதாக உள்ளது.

சிலப்பதிகாரம் கார்த்திகையை “அழல்” என்று கூறுகின்றது. பௌர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் கூடும் நாளில் தெருக்களில் விளக்குகளை ஏற்றி வைத்து, வீட்டின் வாசற்படிகளில் மாலைகளைத் தொங்கவிட்டு கார்த்திகை விழாவை கொண்டாடியதை அகநானூறு செய்யுளில் காணலாம்.

“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு வந்த மழை”.

என்னும் செய்யுள் அடிகள் பலவற்றில் கார்த்திகை தீபவிழாவைப் பற்றிய செய்திகள் அறியமுடிகிறது. இச்செய்யுளில் “தலை நாள் விளக்கின்” என்பதிலிருந்து இவ்விழா பலநாள் கொண்டாடப்படும் விழா எனத் தெளியலாம். இறுதிநாளில் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவே கார்த்திகை தீபவிழா எனக்கொள்ளலாம். அதுவே மகா கார்த்திகை எனவும் வழங்கப்படும்.

இதனையே சீவக சிந்தாமணியும்,
“குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன
கடிகமழ் குவளை பைந்தார்”, எனக் கூறுகிறது.

நீதி இலக்கியங்களில் ஒன்றான பழமொழி, குன்றின்மேலிட்ட விளக்கு” என்று கூறுவதும் இக்கார்த்திகை தீப விழாவையே. திருமால் கார்த்திகை மாதத்தில் கண் விழித்து எழுவதாக வைணவர்கள் குறிப்பர். இக்கார்த்திகை தீபவிழா கார்த்திகை மாதம் ஐந்து நாள்கள் நடக்கும் என்பர்.

இறுதிநாள் மகா கார்த்திகை அன்று வைணவர்கள் தானம் வழங்கியும் புனித பணி செய்தும் இறைவனை வழிபடுவர். இதனை நற்றிணை போன்ற சங்க இலக்கியங்களில் காணலாம். திருமால் பிரம்ம யாகத்தை அறிந்து தானே தீப்பிழம்பான விழாவே கார்த்திகை தீபவிழா என்பர். வைணவர்கள் காஞ்சியில் திருமாலை “விளக்கொளி பெருமாள்” என்றே போற்றுவர்.