போருக்குப் பின்னர் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன! பத்மினி சிதம்பரநாதன்

போருக்குப் பிந்திய காலத்தில் ஈழத்தமிழ்ப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் பல்வேறு ஒடுக்குமுறைக்குள் ஆட்பட்டதுடன் அவர்களுக்கெதிரான வன்முறைகளானது தற்போதுவரை பன்மடங்காக அதிகரித்துள்ளது. எனவே அத்தகைய வன்முறைகளை முற்றாக ஒழிக்க சமூக ஒத்துழைப்புடன் தனிநபர் ஒத்துழைப்பு என்பன மிகவும் அவசியமானதாகும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பெண்கள் விவகாரக் குழுத் தலைவியுமான திருமதி பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மனித உரிமை தினமாகிய இன்று பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பின் 16 ஆவது நாள் செயல்வாதத்தின் இறுதி நாள் முன்னெடுக்கப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்குறிப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எதிரான பால் நிலை அடிப்படையிலான வன்முறையின் பிரதான வடிவங்களாக உடல் ரீதியான வன்முறை, உணர்வு பூர்வமான அல்லது உளவியல் ரீதியான வன்முறை, பால் ரீதியான வன்முறை, வாய்மொழியிலான வன்முறை,பொருளாதார ரீதியாக அபகரிக்கும் வன்முறை, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் தொடர்பான வன்முறை அதாவது இன்டர்நெற், கையடக்கத் தொலைபேசி மற்றும் காரணிகள் உட்பட அடங்குகின்றன.இத்தகைய வன்முறைகள் சார் விடயங்களை இல்லாதொழிப்பதற்காக உலக அளவில் ஒன்றுபட்டு பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஐ.நா.பொதுச் சபை மார்கழி 17ஆம் திகதி கூடியபோது ஆண்டுதோறும் கார்த்திகை 25 ஆம் திகதியை பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐ.நா.சபையின் 54/134இலக்க பிரேரணையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகை 25 இல் இருந்து சர்வதேச மனித உரிமை தினமான மார்கழி 10வரை உலகெங்கும் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்புக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 16நாட்கள் தொடர்ச்சியான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஈழத்தமிழ்ப் பெண்களையும் பெண் பிள்ளைகளையும் பொறுத்தவரையில் பல்வேறு ஒடுக்குமுறைக்குள் ஆட்பட்டிருந்த பெண்களுக்கு போருக்குப் பிந்திய காலத்தில் அவர்களுக்கெதிரான வன்முறைகள் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

இவை பெண்களை கொலைக்கும் தற்கொலைக்கும் இட்டுச் செல்கின்றன. பாடசாலைப் பிள்ளைகள் படுகொலைக்கும் வன்முறைக்கும் ஆளாகி வருகின்றனர்.பாடசாலைகள்கூட சிறுவர்களுக்கு பாதுகாப்பற்ற இடங்களாக மாறி வருகின்றன.இதற்குச் சில பாடசாலைச் சம்பவங்கள் ஆதாரமாகின்றன.

இந்நிலையை மாற்றியமைக்கப் பெண்களை சக்திமிகுந்தவர்களாக வளர்த்தெடுக்கவேண்டும்.இதற்கென பெண்கள் மட்டத்திலும் ஆண்கள் மட்டத்திலும் சிவில் சமூக மட்டத்திலும் தொடர் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். அந்த வகையில் 16 நாள் செயல்வாதம் நன்கு பயன்படுத்தப்படவேண்டும்.

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வன்முறை ஒழிப்புத்தினம் தொடர்பான விழிப்புணர்வு இவ்வருடம் சற்று அதிகரித்திருப்பதை பல பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடகளினூடாகக் காணமுடிகின்றது.தொடர்பூடகங்களிலும் இது பற்றிய செய்திகளைக் காணமுடிகின்றது. எனினும் அதிகரித்து வரும் வன்முறைகளை ஒழிக்க காத்திரமான செயற்பாடுகள் மேலும் பன்மடங்காகப் பெருக வேண்டும். இதற்காக சமூக ஒத்துழைப்பும் செயல்முனைப்பும் அவசியம் என அச் செய்திக் குறிப்பில குறிப்பிடப்பட்டுள்ளது.