சாம்சங் S7 போன்றே காட்சியளிக்கும் கேலக்ஸி A5

தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போன் ஆனது பார்க்க கேலக்ஸி S7 போன்றே காட்சியளிக்கும்படி வடிவமைக்கப்பட இருக்கிறது.

2017-ம் ஆண்டு வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போனின் வை-பை சான்றிற்கான சோதனை நடைபெற்றது. இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போனாக அறியப்படும் கேலக்ஸி A5 2016 பதிப்பு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனும் ஜனவரி மாதத்திலேயே வெளியாகும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போனில் கிளாஸ் வடிவமைப்பு, கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம். சமீபத்தில் இது குறித்து வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி A5 வளைந்த ஓரங்கள் கொண்டிருக்கும் என்றும் நான்கு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. முந்தைய கேலக்ஸி A5 (2016) ஸ்மார்ட்போனும் நான்கு நிறங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடுத்த ஆண்டு வெளியிடப்பட இருக்கும் சாம்சங் கேலக்ஸி A5 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை பொருத்தவரை 5.2 இன்ச் திரை 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 7880 சிப்செட் மற்றும் 3 GB ரேம் கொண்டிருக்கும். இத்துடன் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா மற்றும் புகைப்படங்களை அழகானதாக மாற்ற உதவும் கேமரா அம்சங்களும் வழங்கப்படலாம்.

இத்துடன் வைபை, ப்ளூடூத், 3G, 4G, GPS(A-GPS) + GLONASS, உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. இத்தனை சிறப்பம்சங்களுக்கு ஏற்றதாக 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் கேலக்ஸி A5 (2017) சக்தியூட்டப்படலாம். விலையை பொருத்த வரை புதிய சாம்சங் கேலக்ஸி A5 (2017) ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ.29,000/- வரை நிர்ணயம் செய்யப்படலாம்.