அமெரிக்க அதிபர் தேர்தல்- கட்சிகளின் சின்னங்கள் உருவான பின்னணி

உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனல்ட் ட்ரம்ப் வென்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் தோல்வியைத் தழுவினார்.

குடியரசுக்கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயகக் கட்சியின் சின்னமாக கழுதையும் இருக்கிறது. இந்த தருணத்தில் இருபெரும் கட்சிகளின் சின்னங்களான யானை மற்றும் கழுதை உருவாகியதன் பின்னணி குறித்த சுவாரஸ்ய தகவல்களைக் காண்போம்.

கடந்த 1828ம் ஆண்டு அதிபர் தேர்தல் பரப்புரையின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆன்ட்ரூ ஜாக்சனை, அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் ‘கழுதை’ என விமர்சித்தார். இந்த விமர்சனத்தை வரவேற்கும் விதமாக ஜாக்சன் தன் சின்னமாக கழுதையை வைத்துகொண்டு, அதில் வெற்றியும் பெற்றார். பின் இந்த சின்னத்தை தாமஸ் நாஸ்ட் என்பவர் அமெரிக்க நாளிதழில் கார்ட்டூன் படமாக வரைந்து விளம்பரப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து, தாமஸ் நாஸ்ட் குடியரசு கட்சி சின்னமான யானையை, 1874- இல் ஹார்பெர்ஸ் வீக்லி நாளிதழில் கார்ட்டூன் வரைப்படம் மூலம் அறிமுகப்படுத்தினார். அதில் யானை, சிங்க தோல் போர்த்திய கழுதையை எடுத்தெறிவது போலவும், மற்ற விலங்குகள் இதை பயத்துடன் கண்டு மிரளுவது போலவும் காணப்பட்டது.

குறிப்பாக, அந்த வரைப்படத்தில் யானை மீது, ‘குடியரசு ஓட்டு’ என எழுத்தப்பட்டிருந்தது. கழுதையை தொடர்ந்து இந்த யானை சின்னமும் மக்களிடையே பிரபலமானது. அன்றிலிருந்து இன்று வரை குடியரசு கட்சியின் சின்னமாக யானையும், ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதையும் இருந்து வருகிறது.