அமெரிக்க தேர்தலில் 2 தமிழர்கள் வெற்றி

அமெரிக்க பிரதிநிதிகள்சபை தேர்தலில் தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். செனட் சபைக்கு இந்திய வம்சாவளி பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் செனட் சபை, பிரதிநிதிகள் சபை ஆகியவை உள்ளன. இதில், செனட் சபை உறுப்பினர்கள்  மேல்-சபை எம்.பி. போலவும், பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மக்களவை எம்.பி. போலவும் செயல்படுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன் ஒரு சில செனட்சபை, பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த 5 பேர் போட்டியிட்டனர்.

செனட் சபைக்கு கமலா ஹாரிசும், பிரதிநிதிகள் சபைக்கு ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோகன்னா, அமிபேரா, பிரமிளா ஜெயபால் ஆகியோரும் போட்டியிட்டனர்.

இதில், செனட் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட வக்கீல் கமலா ஹாரிஸ் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

இவர், சென்னையை சேர்ந்தவர். இவரது தாயார் வைத்தியர்  சியாமளா கோபாலன். புற்றுநோய் நிபுணர் ஆவார். 1960-ம் ஆண்டு வாக்கில் அமெரிக்கா சென்ற அவர், அங்கு ஜமைக்காவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர் மூலம் பிறந்தவர் தான் கமலா ஹாரிஸ்.

அதேபோல் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து ராஜா கிருஷ்ணமூர்த்தி பிரதிநிதிகள் சபைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார். அவர், குடும்பத்தினர் முதலில் டெல்லியில் வசித்து வந்தனர். ராஜா கிருஷ்ண மூர்த்திக்கு 3 வயது இருக்கும் போது, அமெரிக்காவுக்கு சென்றனர். அங்கு சட்டப்படிப்பு, என்ஜினீயரிங் படிப்பு ஆகியவற்றை படித்துள்ள அவர், தொழில் அதிபராகவும் இருந்து வந்தார். அரசியலில் ஈடுபட்டு இப்போது பிரதிநிதிகள் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.