அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படும்

2015-2016 காலப்பகுதியில் சுமார் 60,000 அவுஸ்ரேலிய விசாக்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் செனற் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளது.

விசா காலம் முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தமை, சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால் இவை ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இந்தவருட இறுதியில் அவுஸ்ரேலியாவுக்கான புதிய வகை சுற்றுலா விசாக்கள் நடைமுறைப்படுத்தப்படுமென குடிவரவுத் திணைக்களத்தின் செயலாளர் Michael Pezzullo செனற் விசாரணைக் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

அதில் முக்கியமாக பல தடவைகள் நாட்டுக்குள் வந்து போகும் வகையிலான 10 வருட சுற்றுலா விசாவும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசா மூலம் வருபவர்கள் ஒவ்வொரு தடவையும் அதிகபட்சம் 3 மாதங்கள் நாட்டில் தங்கியிருக்க முடியும்.

குறித்த சுற்றுலா விசா பரீட்சார்த்த அடிப்படையில் தற்போது சீன நாட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.