தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம்: இறுதிவணக்க நிகழ்வு!

அவுஸ்திரேலியாவின் விக்ரோரியா மாநில முன்னாள் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர் தமிழ்த்தேசியபற்றாளர் திரு. சபேசன் சண்முகம் அவர்களின் புகழுடலுக்கான இறுதிவணக்க நிகழ்வு இன்று 01-06-2020 திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றுள்ளது.

அன்னாரின் தமிழ்த்தேசியப்பணிக்கு மதிப்பளிக்கும் முகமாக, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, அவரது புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டதுடன் இரங்கல் அறிக்கையும் வாசிக்கப்பட்டது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:

தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம்

தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை உளமார ஏற்று, தாயக மக்களுக்கான விடுதலைப்பணியில், தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டிருந்த தமிழ்த்தேசியபற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பு அனைவரையும் கவலைகொள்ளச் செய்கின்றது.

எமது மக்களின் விடுதலைக்கான வேலைத்திட்டங்களில் வழிகாட்டியாக பயணித்து, எமது விடுதலைப் போராட்டத்தின் தலைமை மீது அபாரமான பற்றுதலை வெளிப்படுத்தியதோடு மட்டுமன்றி, அத்தலைமையின் கருத்துக்களை தனது எழுத்துக்களாலும் பேச்சுக்களாலும் மக்கள் முன்கொண்டு செல்வதில் கடுமையாக உழைத்த இவர், தாயகம் சென்றிருந்த வேளையில் அங்கு நடைபெற்ற போராட்டத்தை விரிவுபடுத்தும் வேலைகளில் துடிப்போடு பங்குகொண்டு செயற்பட்டிருந்தார்.

தாயகத்தில் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட பெரும்போரில் பேரழிவை எமது மக்கள் எதிர்கொண்டபோது, சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்குடன் அனைத்து மக்களையும் ஒன்றுபடுத்தி, கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் , நீண்ட பயணங்களை மேற்கொண்டு, பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகளிலும் பங்குகொண்டு செயற்பட்டிருந்தார்.

விடுதலைப் போராட்டத்தின் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில், விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளராகவும் தென்துருவ நாடுகளின் பரப்புரைப் பொறுப்பாளராகவும் செயற்பட்டிருந்த இவர், தமிழ்க்குரல் (3CR) வானொலி ஊடாக 28 ஆண்டுகளுக்கு மேலாக, தனது தமிழ்த்தேசிய அரசியல் கருத்துக்களை அனைவரும் கவரும் விதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

தமிழர் மருத்துவ நிதியத்துடன் இணைந்து 15 ஆண்டுகளுக்கு மேலாகவும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் இணைந்து 25 ஆண்டுகளுக்கு மேலாகவும், வானொலி நிதிசேகரிப்பு (Radiothon) நிகழ்வை ஒழுங்குபடுத்திக்கொடுத்து, தாயக மக்களின் மேம்பாடுகளுக்காக பேருதவி புரிந்தவர். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாகவும் செயற்பட்டிருந்த இவர், தனது அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து வேறுபட்டிருந்தவர்களுடனும் இனிமையான புன்முறுவலுடன் பழகி தனது நிலைப்பாடுகளை உறுதியாக முன்வைப்பவராக விளங்கினார்.

தமிழ்த்தேசியத்தை நிலைப்படுத்துவது எனின் தமிழ்மொழியை வளர்த்து, தமிழ்ப் பண்பாட்டை பின்பற்றி வளரவேண்டும் என்பதிலும் கவனம் செலுத்தி, தமிழ்மொழி முறை திருமணங்களை நடத்துவதிலும், பல்வேறு தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவதிலும் ஆர்வமாக இருந்தவர். இளையோர் மத்தியில் தமிழ்மொழி மீதான பற்றுதலை ஏற்படுத்துவதிலும் தமிழ்த்தேசிய ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் மிகுந்த அக்கறையோடு செயற்பட்டவர். தமிழர் வாழ்வியலோடு தொடர்புபட்ட நிகழ்வுகள் பற்றி, ஆய்வுநோக்கில் தகவல்களை சேகரித்து அதனை முழுமையான தகவற்பெட்டகமாக மக்கள் முன்கொண்டுசெல்வதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டிருந்தார்.

முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டிருந்த பேரழிவின் பின்னரும் சோர்ந்துவிடாது, அதில் பாதிக்கப்பட்ட சிலரை பாதுகாப்பாக வெளியேற்றுவதில் தன்னால் முடிந்தவரை அதற்கான ஒழுங்கமைப்புகளை ஏற்படுத்துவதிலும் கனதியாக செயற்பட்டவர். ஆனாலும் எமது விடுதலைப் போராட்டத்தில் ஏற்பட்ட பெருத்த பின்னடைவின் பெருந்துயரில் இருந்து மீளமுடியாதவராக, அதன் பாதிப்புகளை சுமந்தவராக இவரது காலங்கள் கடந்து நின்றன.

எமது மக்களிற்கான விடுதலைப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டிருந்த தமிழ்த்தேசியப்பற்றாளர் சபேசன் சண்முகம் அவர்களின் இழப்பின் துயரால் வாடும் இவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்களோடு எமது கரங்களையும் இறுகப் பற்றிக்கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்