மனிதர்களைத் தாங்கும் விண்கலத்தை விண்வெளியில் செலுத்திய சீனா

சீனா, அதிக காலம் மனிதர்களைத் தாங்கியிருக்கக்கூடிய விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. விண்கலம் நேற்று ( காலை, கோபி (Gobi) பாலைவனத்தின் ஜிசுவான் (Ji-chuan) செயற்கைக்கோள் நிலையத்திலிருந்து இரு வீரர்களுடன் விண்ணை நோக்கிப் பாய்ந்தது.

ஜிங் ஹைபெங்(Jing Haipeng ), சென் டோங். (Chen Dong)மனிதர்களோடு பாய்ச்சப்படும் தனது ஆறாவது விண்கலத்துக்குச் சீனா தேர்ந்தெடுத்த விண்வெளி வீரர்கள் இவர்கள். தமது 50ஆவது பிறந்தநாளை விண்வெளியில் கொண்டாடவிருக்கும் ஜிங்கிற்கு இது மூன்றாவது விண்வெளி அனுபவம். 38 வயது சென்னுக்கு முதன்முறை.

ஷென்ஸோ (Shenzhou) 11 என்ற பெயர் கொண்ட விண்கலம், சீனாவுக்குச் சொந்தமான தியங்கோங் 2 (Tiangong Two) விண்வெளி ஆய்வுக்கூடத்துடன் சேர்ந்து கொள்ளும். வீரர்கள் அதில் ஒரு மாத காலம் தங்கி ஆய்வு நடத்துவர்.

ஷென்ஸோ 11 வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டுவிட்டதாகச் சொன்னார் விண்கலத்தின் தலைமை அதிகாரி ஜெனரல் ஸாங். அது திட்டமிட்ட பாதைக்குச் சரியாகச் சென்றுவிட்டதையும், விண்வெளி வீரர்கள் நல்ல நிலையில் இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சீனா ஒரு விண்வெளிச் சக்தியாக உருவெடுக்கவேண்டும் என்பது அதிபர் ஸீ ஜின்பிங்கின் அவா.

ராணுவம், விஞ்ஞானம், வர்த்தகம் என்று பல்வேறு துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சீனா முயற்சி செய்துவருகிறது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணி வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளை எட்டிப்பிடிக்கவேண்டும் என்பதே அதன் இலக்கு. அதே சமயம், பிரச்சினைகளைத் தூண்டுவது தனது நோக்கமல்ல என்பதையும் சீனா வலியுறுத்திவருகிறது.