சிறு வயதிலேயே காய்ச்சலும் சில வைரஸ்கள் தாக்குவதும் நல்லது… ஏன்?

உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர்.

1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்த வாலிபர்களை அதிகம் அது பலிகொண்டது. குழந்தைகளையும் முதியவர்களையும் அது கொன்றது என்றாலும், மிகவும் மூத்தவர்கள் அதிசயமாக அதிகம் இறக்கவில்லை. இதற்கான காரணத்தை ஆராய்ந்தனர் சில அறிவியலாளர்கள். 1918 காய்ச்சலில் இறந்தவர்களின் திசு மாதிரிகளை 1990-களில் அறிவியலுக்கான தேசிய அகாடமி மீட்டது.

முன்னதாக இந்தக் காய்ச்சலானது பறவைகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றிய வைரஸ்களால் ஏற்பட்டது என்றே தீர்மானித்திருந்தனர். ஆனால், அகாடமி அறிவியலாளர்கள் திசுக்களிலிருந்து பெற்ற வைரஸ்களை சுண்டெலிகளுக்கும் குரங்குகளுக்கும் செலுத்தியபோது அவையிரண்டும் மிகவும் அச்சமூட்டும் வகையில் அதிக அளவிலான நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றன. அப்படியென்றால் அன்றைய நாட்களில் மக்களுடைய உடலில் ஏற்பட்ட மிகையான நோயெதிர்ப்பு சக்தியால்தான் அவர்கள் இறந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். உடலில் அதிக நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு ஆபத்து என்றும் கருதினர். அரிசோனா பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் ஒரோபி இந்த விளக்கம் மிகவும் வலுவற்றது என்று கருதினார். அவருடைய குழுவினர் 1918-ல் தாக்கிய வைரஸை இதர வைரஸ்களுடன் ஒப்பிட்டனர்.

1918 வைரஸ் அதற்கும் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பே வலு குறைந்த நிலையில் மனிதர்களைத் தொற்றியிருக்கிறது. மேலும் சில ஆண்டுகளுக்கு அது மனிதர்களிடம் அங்குமிங்கும் சுற்றிப் பரவிக்கொண்டிருந்தது. ‘இன்புளுயன்சா’ என்று அழைக்கப்படும் குளிர்க் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ்கள் இன்னொரு வகை வைரஸ்களுடன் சேர்ந்து கலப்பினத்தை ஏற்படுத்தும். இரண்டு வைரஸ்கள் ஒரே மனித செல்லில் நுழைய, அதிக வீரியமுள்ள புதிய வைரஸ் தோன்றுகிறது. இந்த செல்கள் புதிய வைரஸ்களை உருவாக்கும்போது அவற்றின் மரபணுக்களும் கலந்துவிடுகின்றன. 1918 வைரஸ் தனது மரபணுவைப் பறவைகளைத் தொற்றிய ஃப்ளூ வைரஸுடன் கலந்தது. இந்தக் கூட்டு விளைவே 1918-ல் உலகில் கோடிக்கணக்கானவர்களைப் பலிவாங்கிய கொடிய வைரஸின் உருவாக்கம். இருபத்தைந்து வயதுக்கும் குறைவானவர்களை இந்த வைரஸ் தாக்குவதற்கு முன்னதாக இதைவிட வலு குறைந்த வைரஸ் அவர்களைத் தாக்கி நோயெதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கியிருந்தது. எனவே, இருபத்தைந்து வயதுக்குக் குறைந்தவர்கள் காய்ச்சலை சமாளித்தனர்.

இருபதுகளின் பிற்பகுதியில் இருந்தவர்களை முன்னர் வைரஸ் எதுவும் தாக்காமல் விட்டதால் 1918 வைரஸ் மிகத் தீவிரமாகத் தாக்கியபோது எதிர்க்க முடியாமல் இறந்தனர். முதியவர்களில் மிக மூத்தவர்களும் இந்த வைரஸ்களின் முந்தைய தலைமுறையின் தாக்குதலால் நோயெதிர்ப்பு சக்தியைப் பெற்றிருந்ததால் அவர்களும் அதிசயிக்கத்தக்க வகையில் அப்போது காய்ச்சலில் விழுந்தாலும் உயிர் பிழைத்தனர். ஃப்ளூ காய்ச்சல் முதலில் ஒருவரைத் தாக்கும்போது அவருடைய உடலே அதற்கு எதிர்ப்பான நோயெதிர்ப்பு ஆற்றலை உருவாக்கிவிடுகிறது. அடுத்த முறை காய்ச்சல் வரும்போது அவர்களால் எதிர்த்து நிற்க முடிகிறது. சிறு குழந்தைகளுக்குக் காய்ச்சல் வருவது நல்லது என்று அனுபவம் உள்ளவர்கள் கூறுவது இதையொட்டித்தான். சிறு வயதில் வலு குறைந்த வைரஸ்களால் காய்ச்சல் வந்தால் பிறகு வரும் காய்ச்சலை உடல் நன்றாகத் தாங்கிக்கொள்ளும்.

ஒரோபி குழுவினரின் மேற்கண்ட ஆய்வு முக்கியமானது என்று அறிவியல் உலகம் கொண்டாடுகிறது; அது போதாது என்று கருதும் அறிவியலாளர்களும் உண்டு.