8 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன

பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் இன்று காலை அனுப்பப்பட்ட இந்தியாவின் ஸ்கேட்சாட்-1 உள்பட 8 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

தொடர்ந்து கடல்சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு விதமான செயற்கைகோள்களை இஸ்ரோ வடிவமைத்து அவற்றை வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தியும் வருகிறது.

அந்த வகையில் கடல் மற்றும் வானிலையை துல்லியமாக கண்டறிவதற்கும், முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வுகள், சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், சுற்றுச்சூழலை அறிவது, காற்றின் திசையை அறிந்து கொள்வது உள்பட பூமியை கண்காணிப்பதற்காக 377 கிலோ எடைகொண்ட ‘ஸ்கேட்சாட்-1’ என்ற செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துது.

இந்த செயற்கைகோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் இன்று காலை 9.12 மணிக்கு விண்ணில் ஏவுவதற்கான 48 1/2 மணி நேர கவுண்ட் நேற்று முன்தினம் தொடங்கியது.

ஸ்கேட்சாட்-1 செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது. இதனுடைய ஆயுட்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

இந்த ராக்கெட்டுடன் பி1-சாட், பிரதாம், பாத்பைண்டர்-1, அல்சாட்-1பி, அல்சாட்-2பி, அல்சாட்-1என், கேன்எக்ஸ்-7 ஆகிய 7 செயற்கைகோள்களும் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன. இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 செயற்கைகோள்களும், அல்ஜீரியா, கனடா மற்றும் அமெரிக்காவின் செயற்கைகோள்களும் இவற்றில் அடங்கும்.

மேற்கண்ட 8 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் இன்று(26) காலை சரியாக 9.12 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

பிரதான செயற்கைகோளை (ஸ்கேட்சாட்-1) திட்டமிட்டபடி அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்ததாக இன்று அனுப்பப்பட்ட மேலும் 7 செயற்கை கோள்களும் அடுத்தடுத்து விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.