ராவணனை வணங்கும் வினோத கிராமம்!

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை வணங்கும் வினோத கிராமம் ஒன்று உள்ளது. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

சீதையை கடத்திச் சென்று அசோகவனத்தில் சிறைவைத்த இலங்கை மன்னன் ராவணனை இந்து கடவுள் ராமன் வெற்றி கொண்டதை, நன்மை தீமையை வென்றதன் அடையாளமாக கருதி தசரா விழா இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.
ஆனால், மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிராம மக்கள் ராமனைப் போன்று ராவணனையும் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள சாமியார் ஒருவர் கூறுகையில்,  ‘தசரா விழாவை முன்னிட்டு நாடு முழுவதிலும் ராவணனின் உருவ பொம்மைகள் எரிக்கப்படும்.
ஆனால், இங்கு மட்டும் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதில்லை, ராவணனின் அறிவுத்திறன் மற்றும் நல்லொழுக்கம் காரணமாக அவர் வணங்கப்படுகிறார்.
சங்கோலாவில், 10 தலைகளும் 20 கைகளும் உடைய  கருப்பு நிற கற்களால் ஆன ராவணன் சிலை உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் உள்ளவர்கள் ராவணனை வணங்கி வருகின்றனர்’ என்றார்.
உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், ராவணன் ராமனின் மனைவியான சீதையை கடத்தினார். ஆனால், ராவணனின் காவலில் இருந்த போது சீதையின் கற்புக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. ராமனை நம்புவது போன்று ராவணனையும் நாங்கள் நம்புகிறோம்.
அதனால்தான் ராவணனின் உருவ பொம்மையை நாங்கள் எரிப்பதில்லை. தசரா விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவிலான மக்கள் சங்கோலா கிராமத்திற்கு வருகை தந்து ராவணனை வழிபட்டு செல்கின்றனர், என்றார்.