தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்? – சம்பந்தன்

சிறீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று (23)  சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன், எதிர்வரும் வெள்ளியன்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவையும் சந்திக்கவுள்ளார்.

இதேவேளை ஜே.வி.பி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியனவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுவிக்கப்படவேண்டும் என நேற்று சபையில் வலியுறுத்தியுள்ளன.

நாடாளுமன்றத்தில் நேற்று(23) தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அவர்களின் கடும்பத்தினர், தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க்கட்சியினர் விரக்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்து 7 வருடங்கள் முடிவடைந்துள்ளபோதும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல தடவைகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களையும், முன்னெடுத்திருந்தனர்.

அவர்கள் பாரபட்சமான முறையில் நடத்தப்படுவதுடன் அவர்களுக்கான நீதியும் மறுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், இது அரசின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சாதகமாக அமையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.