குமார் குணரத்னத்தின் குடியுரிமையை ரத்து காத்திருக்கும் அவுஸ்திரேலியா

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னவிற்கு இலங்கை குடியுரிமை வழங்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்குமாயின் அவரின் அவுஸ்திரேலிய குடியுரிமையை ரத்து செய்யலாம் என அவுஸ்திரேலியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னைய ஆட்சி காலத்தின் போது தங்கள் தலைவர் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள போதும் இலங்கை குடியுரிமையை மாற்றித்தருமாறு தான் கூறியிருந்ததாக முன்னிலை சோசலிச கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி முன்னிலை சோஷலிசக் கட்சி எனும் பெயரில் புதிய கட்சியொன்றை நிறுவியதால் அவருக்கு விடுக்கப்பட்டு வந்த உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்ததாகவும் ஜாகொட குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கைக்கு வந்து, வீசா காலமும் முடிவடைந்தும், குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தொடர்ந்தும் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கடந்த வருடம் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி குணரத்னம் கைது செய்யப்பட்டு தற்போதும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.