102 வயதிலும் பணிக்கு பயணிக்கும் அறிவியலாளர்

அவுஸ்ரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall – ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்.

 இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்தே அவர் வேலை செய்யலாம் எனவும் அந்த பல்கலைக்கழகம் கூறியுள்ளது. எனினும் இந்த விடயம் சுயமாக இயங்கும் தனது தந்தையை மனதளவில் பாதிக்கும் என அவரது மகள் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் எந்த வழியிலாவது பல்கலைக்கழகத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கவே விரும்புவதாக David Goodall தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார்.

சூழலியல் துறையில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் David Goodall 3 முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, அவுஸ்திரேலியாவின் உயரிய விருதான member of the Order of Australia விருதைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.