மெல்பேணில் ”தமிழர் விளையாட்டு விழா 2016” பற்றிய செய்தி

மெல்பேணில் தமிழர் விளையாட்டு விழா நிகழ்வு, இவ்வாண்டும் சிறப்பான முறையில் நடாத்தப்பட்டுள்ளது. மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவுநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் இந்த தமிழர் விளையாட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை 10 – 01 – 2016 அன்று நடைபெற்றது

ஒஸ்ரேலியாவின் விக்டோறியா மாநிலத்தின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மெல்பேர்ண் நகரில் ஈஸ்ட் பேவுட் றிசேவ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.

காலை 9.00 மணிக்குத் தொடங்கிய இந்நிகழ்வில் ஒஸ்ரேலியத் தேசியக்கொடியை தமிழ்ச்செயற்பாட்டாளர் திரு. லிங்கேஸ்வரன் அவர்கள் ஏற்றிவைக்க தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விக்டோறியா மாநிலத்தின் உறுப்பினர் திருமதி உதயா சிங்கராஜா அவர்கள் ஏற்றிவைத்தார்.

மூத்ததளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்த்தேசியச் மூத்த செயற்பாட்டாளர் திரு உதயன் பத்மநாதன் அவர்கள் ஈகைச்சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினார். அகவணக்கத்தைத் தொடர்ந்து விளையாட்டுநிகழ்வுகள் இடம்பெற்றன.

சிறுவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் மற்றும் கழகங்களுக்கிடையிலான துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், கயிறிழுத்தல், சங்கீதக் கதிரை, கிளித்தட்டு என பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் – அனைத்துப் பார்வையாளர்களையும் இணைக்கும் வண்ணம் – மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன.

இவ்விளையாட்டு விழாவைப் பார்ப்பதற்கென பார்வையாளர்களாக பலநூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தாயகத்து உணவு வகைகளான தோசை, அப்பம், வடை, ஒடியற்கூழ், கொத்து ரொட்டி முதலான பலவிதமான உணவுவகைகள் விற்பனைசெய்யப்பட்டன.

போட்டிகளில் கலந்துகொண்ட விளையாட்டுவீரர்கள் அனைவரும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டனர். அன்றைய தினம் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, தமிழ் அமைப்புக்களின் செயற்பாட் டாளர்கள், தொண்டர்களினால் வெற்றிக் கோப்பைகளும், கேடயங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

உதைபந்தாட்டத்தில் “எல்லாளன்” விளையாட்டுக் கழகத்திற்கும் “யுனெற்ரெட் மில்லர் ஸ்ரார்” விளையாட்டுக் கழகத்திறகுமான இறுதி ஆட்டத்தில் “யுனெற்ரெட் மில்லர் ஸ்ரார்” விளையாட்டுக்கழகம் வெற்றியீட்டி தமிழர் விளையாட்டுவிழா 2016 இற்கான வெற்றிக்கேடயத்தினைத் தட்டிக்கொண்டது.

கரப்பந்தாட்டப்போட்டி (செற்றப் முறையில்) Udappu Boys என்ற அணியும் கரப்பந்தாட்டப்போட்டி (ஓவர்கேம் முறையில்) “இணைந்த கைகள்” என்ற அணியும் தமது வெற்றிக்கேடயத்தை சுவீகரித்துக்கொண்டனர். இவ்விரு போட்டிகளிலும் முறையே எல்லாளன் அணியும் டெனிஸ் அணியும் இரண்டாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

துடுப்பாட்டபோட்டியில் Cavaliers என்ற அணி வெற்றிக்கேடயத்தையும் Boom Boom Straikers என்ற அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள சிட்னியிலிருந்தும் போட்டி அணிகள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

உதைபந்தாட்டத்தில் கலந்துகொண்ட பல அணிகளும் தமிழீழத் தேசிய அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் விளையாட்டு உடைகளை வடிவமைத்து அணிந்துவந்தமை இன்னொரு முக்கியமான விடயமாகும்.

இரவு 9.00 மணியளவில் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு, “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்தலைத் தொடர்ந்து “2016 தமிழர் விளையாட்டு விழா“ இனிதே நிறைவேறியது.