முடியிழந்த மரங்கள் – பாலமுருகன் திருநாவுக்கரசு

புங்குடுதீவில் நடந்த கொடூரமும் தொடர்ந்து நடைபெற்ற நில சம்பவங்களும் எமக்கு பல செய்திகளை சொல்லி நிற்கிறது.

இங்கு நான் பதிவிடுவது , நானறிந்த நான்கைந்து சம்பவங்களினை மட்டுமே. இதன் தொகுப்பும் முடிவும் உங்களுடையது.

1) புங்குடுதீவு கொடூரத்தையும் அதை ஒத்த அண்மைய சமூகநெறிப்பிறழ்வு

நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட அநேகர் ( இளைஞர்கள்) போதைக்கு அடிமையானவர்களே என்பது நடக்கின்ற விசாரணைகளில் இருந்து தெரிகிறது.

2) யாழ்மாவட்டத்தில் போதை பொருள் விற்பனை செய்யும் இடங்கள் பற்றிய தகவல்கள் ( முக்கியாமய் பாடசாலைகளுக்கு அருகில் ) பலதடவை ஆதாரத்துடன் பொலிஸுக்கு கொடுக்கப்பட்டும் , எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் விரக்தியடைந்த யாழ் செயலக தரப்புகள் , அப்போதைப்பொருள் விற்பனையாளார்களை பகிரங்கமாக மக்களுக்கு வெளிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள்.

இது தவிர , பாடசாலைக்கு அண்மித்த பகுதிகளில் பாடசாலை மாணவர்களுக்கு, ( சில இடங்களில் இலவசமாக ) சீருடையில் இருப்பவர்கள் போதைப்பொருள் விநியோகம் செய்வது -சில அதிகாரிகளினால நேரடியாக சுட்டிக்காட்டப்பட , எடுக்கப்பட்ட நடவடிக்கை , விநியோகம் நடக்குமிடம் மாற்றப்பட்டது மட்டும் தான். ( இச்சம்பவம் வலிவடக்கில் ஒரு பாடசாலைக்கு அண்மையில் நடந்திருந்தது)

2) 2009 இன் பின்னர் இலங்கைத்தீவில் மதுபானப்பாவனையில் முதல் இடங்களில்
இருப்பது தமிழ் மாவட்டங்கள் இரண்டு தான்.

3) 2009 இன் பின்னர் A9 மீண்டும் திறக்கப்பட்டபோது வந்த முதல் வாகன அணியில் ஏறத்தாள பாதிக்கு அண்மையானவை மதுபான லொறிகளே.

4) நாங்கள் பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று. அது சமாதான பேச்சுவார்த்தை காலம். “பாதை திறந்து ” இருந்த பொழுது. தொடர்ச்சியான போரிலும் பொருளாதரத்தடையிலும் களைத்திருந்தாலும் , உறுதியாய் இருந்த சமூகம் ஒன்றை வசப்படுத்துவதற்காய் , பல கரங்கள் கவர்ச்சியான தோற்றததில் “திறந்திருந்த பாதையினூடு “வந்து கொண்டிருந்தன. கட்டுடைத்த வெள்ளம் போல பலவித “பதார்த்தங்களும்” அங்கிருந்து இங்கு வந்து கொண்டிருந்தது, “திறந்திருந்த பாதையினூடு ” வந்துகொண்டிருந்த கவர்ச்சியான வர்ண மைகள் அடிக்கப்பட்டு , எமது “சுயம்” எமக்குத்தெரியாமலேயே கரைய ஆரம்பித்திருந்த
காலம் அது.

{அப்படி வான்பாய்ந்து வந்தவைகளில் மதுவும் ஒன்று.
பல்கலைக்கழகத்தின் 1 கி.மீ சூழலில் மட்டும் 2000த்தின் இறுதிப்பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் அற்ற 18 இற்கு மேற்பட்ட மதுபான விற்பனை நிலையங்கள் ” ஆசீர்வாதத்துடன்” பகிரங்கமாக இயங்கின.{ வேறொரு செயற்திட்டத்திற்காக இத்தரவுகள் அப்போது சேகரிக்க்பட்டிருந்தது}

அந்த அந்த காலப்பகுதியில் மிகவும் எமது உளநல மருத்துவ பேராசிரியருடன் , வகுப்பினூடே ஒரு உரையாடல் நடந்தது.

அதில் அவர் சொனார், ” போர் எமக்குத்தந்த அழிவுகளில் , உயிர் உடமை இழப்புகளை விட , ஊரை அழித்தது தான் எமக்கு மிகப்பெரிய அழிவு. நீண்ட காலத்தில் அது தான் எம்மை{சுயத்தை } அழிக்கும்” என்றார்.

அவர் அன்று “ஊர்” என குறிப்பிட்டிருந்தது , போரினால் சிதைந்து போயிருந்த எமது ஊரின் வீடுகளையோ நாம் இடபெயர்ந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் விட்டு வந்திருந்த எமது ஊர்களையோ அல்ல. ” ஊரின் “பெளதீக ரீதியிலான வரையறையையும் அவர் குறிப்பிடவில்லை.

ஊரின் சமூகக்கட்டுமானத்தை , எமக்கிருந்த உறவுகளின் பிணைப்பை , அந்த மக்களிடையேயான அந்த ஒரு ஆத்மார்த்த்மான பிணைப்பைத்தான் அவர் ” ஊர் ” என அடையாளப்படுத்தியிருந்தார். எமது சுயத்தின் முக்கிய பங்கு இந்த ” ஊர்”களில் இருந்தது.

தொடர்ச்சியான இடப்பெயர்வுகள், உறவிழப்புகள் , உயிர் தப்புவதற்கான எத்தனங்கள் , அந்த ” ஊர்” என்கிற பிணைப்பை, அந்த சமூகக்கட்டுமானத்தை அறுத்து விட்டிருந்தது.

எறிகனைகளும் குண்டுகளும் வீசி எம்மை இடம்பெயர வைத்த களத்தில் நின்ற ஆக்கிரமிப்பாளனுக்கு “ஊர்” “சமூகம்” எம்ன்பவற்றின் முக்கியத்துவம் புரிந்திருக்குமோ என்னவோ, பல தசாப்தங்களாக எம்மினத்தை ஒடுக்குவத்ற்கு கொழும்பிலிருந்து திட்டமிடல்களை செய்து கொண்டிருக்கும் “மாஸ்ரர் மைன்ட்களுக்கும் இன்ரலெச்சுவல்களுக்கும் “ஊரை” அழிப்பதன் தார்பரியம் நிச்சயம் புரிந்திருக்கும்.

” ஊர் ” இருந்தால், அதற்கு ஒரு சமூக ஒழுக்கம் இருக்கும், அது சட்டப்புத்தகங்களை விட வலிமையானது. ஒருவன் நெறிதவறிப்போவது சுலபமானது அல்ல. சிறு உதாரணம் மது அருந்துவது என்பது மிகப்பெரிய பாவச்செயலாக பார்க்கப்படிருக்கும் . ஊரில் யாருக்காவது அது தெரிந்துவிடலாம் என்கிற பயம் அவர்களை பலநெறிப்பிறழ்வுகளில் இருந்து தள்ளி வைத்திருந்திருக்கும். எழுதப்படாத ஒழுக்க நெறிமுறை ஒன்று பேணப்பட்டிருக்கும்” என்று அந்த
பேராசிரியர் தொடர்ந்தார்.

உண்மைதான், இப்போது புதிது புதிததாய் கட்டத்தொகுதிகளும் வீடுகளும் எழும்புகின்றான, ஆனால் “ஊர் ” அழிந்து போய் விட்டது. அதன் விளைவுகள் தெளிவாகதெரியத்தொடங்கி விட்டது.

//புங்குடுதீவைச் சேர்ந்த கவிஞர் வில்வரத்தினம் கூறுவார் ‘சாவிலும் ஒரு வாழ்விருந்தது எமது கிராமங்களுக்கு’ என்று.//- திரு. நிலாந்தனின் இவார கட்டுரையிலிருந்து .

5} புங்குடுதீவில் அந்த மாணவிக்கு நடந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து மக்களிடம் இருந்து வெளிப்பட்ட அந்த தார்மீக கோபமும் உணர்ச்சியும், பல தரப்புகளால் அவரவரின் தேவைக்கேற்றபடி கையாளப்பட்டு , வேண்டத்தகாத சில நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த அந்த புதன் கிழமை மாலை { 20/05/15}, நடந்த வேறு ஒரு நிகழ்வில் , இது தொடர்பான ஒரு செயற்பாட்டிற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

Vithiyaஅதில் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன, எமது சமூகத்தின் மீதான சுயவிமர்சனமாக பலகருத்துகள் அங்கு வெளிப்பட்டிருந்தது.

இறுதியில் அங்கிருந்த ஒரு துறைசார் நிபுணர் ” இவ்வாறு நடக்கின்ற நெறிப்பிறழ்வுகளுக்கும் , மக்களின் உன்றவுகளை நெறிப்படுத்துவதற்கும் மிகப்பெரிய காரணம் எம்மிடம் ஒரு தலைமை இல்லை.எமது சமூகத்திற்கான எமது சமூகத்தில் ஒரு தலைமைத்துவ வெற்றிடம் ஒன்று உருவாகி உள்ளது” என்று
சொன்னார்.

{குறிப்பு: அவர் விடுதலைப்புலிகளின் அபிமானியாக தன்னை
வெளிப்படுத்திக்கொள்பவர் அல்ல. )

//காலம் எமக்கு பலவற்றை சொல்லித்தருகிறது!//

NGO க்களும் சில நிறுவனங்களும் கிராமியமட்டத்தில் சில கட்டமைப்புகளை வைத்திருக்கின்றனவே தவிர , எந்த ஒரு சமூகமைப்போ அல்லது தமிழ் அரசியற்கட்சிகளோ, கிராமியமட்டத்தில் கட்டமைப்புகளை வைத்திருக்கவில்லை. மக்களை ஒருங்கிணைக்க ஒரு வழிமுறையும் இல்லை என்று அவர் சொன்னார்.

சமூக தலைமைத்துவ வெற்றிடம் பற்றிய ஒருகருத்தையே அண்மையில் திரு நிலாந்தனின் புங்குடுதீவு கொடூரம் குறித்து எழுதிய தனது கட்டுரையில் முன்வைத்திருந்தார்.அவர் தனது கட்டுரையில் “உள்ளூர் அரசியல் தலைவர்கள் பிரமுகர்களாகச் செயற்படுவதற்குப் பதிலாக சமூகச்சிற்பிகளாக செயற்படத் தவறிவிட்டார்கள். தமிழ் மக்கள் அரசியல் தரிசனமற்ற, இலட்சியவேட்கை இழந்த ஒரு சமூகமாக தேங்கிப்போய் நிற்கிறார்கள்.

தமிழ் சமூகத்திற்கு ஓர் அரசியல் தரிசனத்தை, தெளிவான இறுதி இலட்சியத்தைக் காட்டும் ஒரு தலைமைத்துவத்துக்கே குறிப்பிட்ட அந்த அரசியல் தரிசனத்தை நோக்கி சமூகத்தை ஆற்றுப்படுத்துவதற்குரிய உள்ளூர் தலைமைத்துவங்களை கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவை ஏற்படும். அவ்வாறு அரசியல் தரிசனமுடைய இலட்சியப்பாங்கான அல்லது குறைந்தபட்சம் நீதிமான்களாகக் காணப்படும் ஊர் தலைவர்கள் இல்லாத ஒரு வெற்றிடத்திலேயே வித்தியா போன்றவர்கள் சிதைக்கப்படுகிறார்கள். கோஸ்டி மோதல்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.” என்று குறிப்பிட்டிருந்தார்.

6)} புங்குடு தீவு கொடூரத்தைற்கு ஏறத்தாழ ஒரு மாதத்திற்கு முன்னர் , தமிழ் பகுதியெங்கும் பரவலாக நடந்தேறிவரும் சமூக நெறிபிறழ்வுகள் மற்றும் அது குறித்து மக்களிடம் எற்பட வேண்டிய விழிப்புணர்வு தொடர்பில் தமிழ் சிவில் சமுக அமையம் ஏப்ரல் நடுப்பகுதியில் ஒரு பகிரங்க கலந்துரையாடலை நடாத்தியிருந்தது. ” போருக்கு பின் அதிகரிக்கும் சமுக நெறிப்பிறழ்வுகள் — சுயத்தை இழக்கிறதா எமது இனம்?? என்கிற தலைப்பில் வடமராட்சியில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் திரு நிலாந்தன் பிரதம பேச்சாளாரகாக கல்ந்துகொண்டு தனது கருத்துகளை முன்வைத்திருந்தார்.

அக்கலந்துரையாடலில் மக்களிடம் எழுந்த கருத்துகளும் , எம்மிடம் இருக்கும் “வழிகாட்டல் வெற்றிடத்தை சுட்டிக்காடியது.

” துலாம்பரமாக அதிகரிக்கும் சமுக நெறிப்பிறழ்வுகளுக்கு வெறுமனே இளையவர்களை குறைசொல்வதில் பலனில்லை என்றும் , இதன் பொறுப்பை முழுச்சமூகமும் ஏற்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டபடது. “ஊர் அழிந்ததன் ” விளைவும் அக்கலந்துரையாடலில் இயல்பாகவே வெளிப்பட்டிருந்தது.

தூங்கு நிலைக்கு சென்றிருக்கும் சனசமூக நிலையங்களும்
விளையாட்டுக்கழகங்களும் மீண்டும் புத்துயிர்ப்பு அடைவதன் மூலம் இளைஞர்களின் சக்தியை ஆக்க பூர்வமான முறையில் திருப்பலாம் என்கிற கருத்தும் முன்வைக்கபட்டிருந்தது.

உண்மைதான். அநேகமான விளையாட்டுகழகங்கள் சனசமூக நிலையங்கள் என்பன இப்போது செயற்படு நிலையில் இல்லை.

அவற்றின் செயற்பாடுகளின் மீளுருவாக்கம் நிச்சயம் பல நன்மைகளை எமது சமூகத்திற்கு தரும். இயல்பாகவே சமூக நெறிப்பிறழ்வுகள் குறைந்து போகும் .

எம்முன்னே உள்ள இலகுவானதும் உறுதியானதுமான ஒரு ஆக்கபூர்வமான பாதுகாப்பு பொறிமுறை இதுதான்.

(( எம்மிடையே நடக்கின்ற எல்லா சமூக நெறிப்பிறழ்வுகளுக்கும் நாம் வெறுமனே அரசாங்கத்தை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு , எமது சமூகப் பொறுப்புணர்விலிருந்து, வசதியாக எம்மை விடுவிப்பதாக அமையும்.ஆனால், அதேவேளை எமது பொறுப்பை மறந்து ,வெறுமனே அரசாங்கத்தை மட்டும்சுட்டிக்காட்டுவது எவ்வளவு அபத்தமோ அதைவிட அபத்தமும் ஆபத்தும் இச்சமூகசீர்குலைவுகளின் ஆழமான பின்னணியைக் கருத்தில் கொள்ளாமல் விடுவது தான் .

அது பிரச்சினைகளை பிழையாகப்பரிமாணப்படுத்துவதோடு, அந்த ‘பின்னணி செயற்திட்டங்கள்’ தொடரவும் வாய்ப்பளிக்கும்.))

 

Global Tamil News