“நீர்த்திரை” நூல் வெளியீட்டு விழா

ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான சௌந்தரி கணேசன் எழுதிய கவிதைத் தொகுதி “நீர்த்திரையும்” ஆசி கந்தராஜா எழுதிய “கறுத்தக் கொழும்பான்”, “கீதையடி நீயெனக்கு” ஆகிய நூல்களின் அறிமுகமும் நேற்றுஞாயிற்றுக் கிழமை மாலை கோம்புஸ் ஆரம்பப் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்பலரும்கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பாக்கினர்.

தொகுப்பாளினி சோனா பிறின்ஸ் அகவணக்கத்துடன் அரங்கத்தில் உள்ளவர்களை வரவேற்றார். அதைத்தொடர்ந்து நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் மங்கல விளக்கேற்ற அபர்ணா ஹரன் தமிழ்த்தாய் வாழ்த்திசைக்க செல்வி விஐயாள் விஜே அவுஸ்திரேலிய தேசியகீதம் பாடி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார்கள்.

திரு திருநந்தகுமார் தனது தலைமை உரையில் சௌந்தரி கணேசன்அவர்களுடன் தனது நீண்டகால பழக்கத்தையும் இலக்கிய உலகில் நூல் ஆசிரியர்களோடு தனது நட்பின் சிறப்பையும் கூறி நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார்.

குறித்த நிகழ்வில் வானொலிமாமா நா மகேசன் ஐயா சௌந்தரி கணேசன் அவர்களை வாழ்த்தி ஓர் கவிதையையும் ஆசி கந்தராஜாவிற்கு ஆசியையும் தெரிவித்து உரைகளை ஆரம்பித்து வைத்தார்.

neerthirai (14)தொடர்ந்து திரு மாத்தனள சோமு அவர்கள் தனது வாழ்த்துரையில் அதே மண்டபத்தில் 23 வருடங்களுக்கு முன்பாக தனது முதலாவது நூலை சிட்னியில் வெளியிட்டதாகவும் எழுத்துலகத்தில் இதைப்போல் அதிகமான நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் வாழ்த்துக் கூறினார்.

முன்னைநாள் சக்தி FM அதிபரும் தற்போது அவுஸ்திரேலியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் தாயகம் வானொலியின் பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான எழில்வேந்தன் சின்னத்துரை அவர்கள் தனது நூல் அறிமுக உரையில் சௌந்தரி தனது கவிதைகளில் சிலாகித்துக் கூறியிருக்கும் தாய்நிலமான கரவெட்டிக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும் கூறி இனிவரும் நூல்களில் சௌந்தரி மரபுக்கவிதைகளையும் எழுதுவதற்கு முன்வரவேண்டும் என்று கூறியிருந்தார்.

செல்வி விஜயாள் விஜே மற்றும் செல்வி சனோஜா லோகேந்திரன் இருவரும் ஆசி காந்தராஜாவின் நூல்களை தமது தமிழ்கல்வியில் ஆய்வுநூலாக எடுத்துக்கொண்டதாகவும் அவைபற்றிய கருத்துக்களையும் கூறியிருந்தார்கள்.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு கானா பிரபா மற்றும் பாலர்மலர் தமிழ்க்கல்வி நிலையத்தின் அதிபர் திரு அன்பு ஜெயா இருவரும் ஆசி கந்தராஜா அவர்களது கறுத்தக்கொழும்பான், கீதையடி நீயெனக்கு போன்ற நூல்களை ஆய்வுரை செய்தார்கள்.

சௌந்தரியின் கவிதைத்தொகுதி நீர்த்திரையை ஆய்வு செய்த பாமதி சோமசேகரம் பல செறிவான கவிதைகளை சிறுவயதிலிருந்து எழுதி வருபவர். முதலாவது கவிதை நூலை வெளியிடுவது என்பது மிகவும் கடினம் அந்த முயற்சியை எடுத்த சௌந்தரிக்கு தான் வாழ்த்து தெரிவிப்பதாக கூறினார். கவிதைகள் வெளிப்படுத்துகின்ற உணர்வு எப்படி வாசகனை சென்றடையவேண்டும் என்பதையும்கூறி நீர்த்திரையிலிருந்து சில கவிதைவரிகளை உதாரணமாகக்காட்டி ஒரு வித்தியாசமான முறையில் தனது ஆய்வுரையை நிறைவு செய்தார்.

தாயகம் வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் கவிதை எழுதுவதில் ஆர்வம் உள்ளவருமான ஞானா அசோகன் தனது உரையில் சௌந்தரியை கவிதையில் வாழ்த்தி பின் நீர்த்திரையில் உள்ள கவிதைகளை விரிவாக ஆராய்ந்து ஓர் நிறைவான ஆய்வை செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து நீர்த்திரை கவிதைநூல் வெளியிடப்பட்டது. முதலாவது பிரதியை சௌந்தரியின் பெரியம்மா ஓய்வுபெற்ற கணித ஆசிரியை கமலேஸ்வரி தர்மராஜாவும் இரண்டாவது பிரதியை சௌந்தரியின் மாமா ஓய்வுபெற்ற பிரபல சட்டத்தரணி சிவசம்பு சுந்தரலிங்மும் பெற்றுக்கொண்டனர்

சுந்தரலிங்கம் அவர்கள் தனதுரையில் சௌந்தரியின் தந்தை பண்டிதர் பொன் கணேசனின் சிறப்பையும் அவர் ஆற்றிய தொண்டுகளையும் விரிவாகக்கூறி கரவெட்டியில் தடக்கி விழுந்தாலும் பண்டிதரும் வித்துவானும் வசிக்கும் படலையில்தான் விழவேண்டி வரும் என்று நகைச்சுவையாக் கூறி கரவெட்டி கல்வியறிவில் நிறைந்த ஓர் கிராமம் என்பதை எடுத்துக் காட்டினார்.

இவற்றைத் தொடர்ந்து சௌந்தரி தனது ஏற்புரையில் தான் நேசித்த கிராமம் தன்னை சிறப்பாக உருவாக்கிய குடும்பம் தனது நண்பர்கள் தான் பணியாற்றிய நாடுகள் தொண்டாற்றிய நிறுவனங்கள் இவைபற்றிக்கூறினார். நீர்த்திரை என்பது அவரது வாழ்க்கையின் ஒரு சிறுபகுதியை வெளிப்படுத்தியிருக்கின்றது என்றும் அவற்றில் உள்ள கவிதைகளில் அவரது மன உணர்வுகளே நிரம்பியுள்ளது என்றும் தனது கவிதைகள் நல்லதோர் வடிகாலாக இருந்து தன்னை சமநிலைப்படுத்தியது என்பதையும் எடுத்துக் கூறியிருந்தார்.

சமூகத்தில் தன்னை அறிமுகப்படுத்துவதற்கும் தனது மொழியார்வத்தையும் சிந்தனை விரிவாக்கத்தையும் வெளிப்படுத்துவதற்கும் துணையாக நின்ற அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் தனது நண்பர்களுக்கும் நேயர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்திருந்தார்.

தனது தந்தையின் எழுத்துக்கள் ஒன்றும் பதியப்படவில்லை என்ற வருத்தத்தை தெரிவித்து தனது நூல்களின் ஊடாக தந்தையின் பெயரையும் புகழையும் நிலைநிறுத்துவதற்கு தான் தொடர்ந்தும் முயற்சிப்பேன் என்பதையும் இந்த நூல் விற்பனைகளில் வரும் பணம் தந்தை ஆசிரியராகவும் அதிபராகவும் சேவையாற்றிய பாடசாலையும் தனது பாடசாலையுமான விக்னேஸ்வராக் கல்லூரியில் படிக்கும் நலிவுற்ற மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஆசி கந்தராஜா அவர்களின் நன்றியுரையைத் தொடர்ந்து சுவையான சிற்றுண்டிகள் வழங்கப்பட்டன

பின்பு மின் ஊடகங்கள் ஆட்சி செய்யும் தற்காலத்தில் அச்சு நூல்கள் அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற பட்டி மன்றத்தில் அவசியம் என்ற அணியில் சோனா பிறின்ஸ் மற்றும் கௌதம் கௌசிக்கும் அவசியம் இல்லை என்ற அணியில் சௌந்தரி கணேசன் மற்றும் நிக்சன் சர்மாவும் பங்கேற்றி சிறப்பாக வாதித்தனர். திரு மாத்தளை சோமு அவர்கள் பட்டிமன்றத்திற்கு தலைமை ஏற்று தற்காலத்திலும் அச்சு நூல்கள் அவசியம் என்ற வாதத்தின் சார்பில் தீர்ப்பைக் கூறினார்.

இரவு 9 மணியளவில் நூல் வெளியீட்டு விழா இனிதாக நிறைவேறியது.