பறிக்கப்படுமா தமிழரின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்?

இலங்கையின் தேர்தல் முறைமையை மாற்றியமைக்கும் விவகாரம் இப்போது முக்கியமான கட்டத்தை அடைந்திருக்கிறது.

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமை பல்வேறு சிக்கல்களைக் கொண்டதாக இருப்பதால், கலப்பு பிரதிநிதித்துவ முறைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இலங்கையில் ஆரம்பத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வந்த தொகுதிவாரி தேர்தல் முறைமையை தனது வசதி கருதி, 1978ஆம் ஆண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, முற்றாகவே இல்லாமல் செய்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன.

அப்போது பாராளுமன்றத்தில் பெற்றிருந்த அசுர பலத்தைக் கொண்டு, எதிர்க்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் தலையெடுக்க விடக் கூடாது என்பதற்காகவே, இந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையைக் கொண்டு வந்திருந்தார் ஜே.ஆர்.

ஜே.ஆரின் அந்த வியூகத்தை உடைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாயிற்று.

1977இல் பறிகொடுத்த ஆட்சியை 1994ஆம் ஆண்டில் தான் மீளவும் சுதந்திரக் கட்சி தலைமையிலான கூட்டணியால் பிடிக்க முடிந்தது.

அதற்குப் பின்னர், சுதந்திரக் கட்சியிடம் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் ஊடாக மீளவும் ஆட்சியைப் பிடிக்க, ஐ.தே.க இன்னமும் கூட போராடிக் கொண்டு தான் இருக்கிறது.

இடையில் 2001ஆம் ஆண்டு தேர்தலில் ஐ.தே.க ஆட்சியைப் பிடித்த போதிலும், அதனை முழுமையாகத் தக்கவைத்துக் கொள்வதற்கு, ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா குமாரதுங்க அனுமதிக்கவில்லை.

அதன் பிறகு இன்று வரை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் ஊடாக, பெரும்பான்மை பலத்தைப் பெறமுடியாத நிலையில் தான் ஐ.தே.க இருக்கிறது.

ஆக, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை என்பது, ஏதேனும் ஒரு கட்சியை நீண்டகாலம் ஆட்சியில் அமர்த்துவதற்குத் துணைபோகும் ஒன்றாகவே மாறியிருக்கிறது.

இதனை இரண்டு பிரதான கட்சிகளும் புரிந்து கொண்டிருக்கின்றன.

அதைவிட, விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையின் கீழ், தேர்தலில் போட்டியிடும் போது, கட்சிகளுக்குள்ளேயே விருப்பு வாக்குகளுக்காக மோதிக் கொள்ளும் நிலையும் காணப்படுகிறது.

இது கட்சித் தலைமைகளுக்குப் பெரியதொரு தலைவலியாக மாறியிருக்கிறது.

இதுதவிர, இந்த தேர்தல் முறையின் ஊடாகத் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பொறுப்புக்கூறும் கடப்பாடும் அருகிப் போனது.

மாவட்ட ரீதியாக இடம்பெறும் தெரிவினால், குறிப்பிட்ட தொகுதியின் பிரதிநிதி யார்? என்ற சர்ச்சை நீடிப்பதுடன், ஒவ்வொருவரும் அதனைத் தட்டிக்கழிக்கும் போக்கும் அவதானிக்கப்பட்டது.

இது இந்த தேர்தலின் முக்கியமானதொரு குறைபாடாக ஆரம்பத்தில் இருந்தே சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.

இந்தநிலையில் தான், இப்போது அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள, 19ஆவது திருத்தத்துடன், சேர்த்தே தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுப்பெற்றுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க வேண்டுமானால், தேர்தல் முறைமை மாற்றமும் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அடம்பிடிக்கத் தொடங்கியுள்ளதால், இப்போது இரண்டையும் சேர்த்தே, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த தேர்தல் முறை மாற்றம் என்பது சிறுபான்மையினங்களை அச்சுறுத்தக் கூடிய ஒன்றாக மாறியிருக்கிறது.

இது சிறுபான்மையினரின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவங்களைக் குறைத்து விடக் கூடும் என்ற அச்சம் தமிழர்களிடமும் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, மலையகம், மற்றும் வடக்கு, கிழக்கில் வாழும், தமிழர்களும் சரி, இலங்கையில் பரவலாக செறிந்து வாழும் முஸ்லிம்களும் சரி, இந்த தேர்தல் முறை மாற்றத்தினால் பாதிக்கப்படக் கூடிய நிலையே அதிகளவில் காணப்படுகிறது.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையினால், பெரும்பான்மைச் சமூகத்தினருடன் இணைந்து வாழும் சிறுபான்மையினருக்கும் கணிசமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் வாய்ப்பு கிட்டியிருந்தது.

ஆனால், மீண்டும் தொகுதிவாரிப் பிரதிநிதித்துவ முறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது பெரும்பான்மைச் சமூகத்தினருடன் இணைந்து வாழும், சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையை ஏற்படுத்தக் கூடும்.

இதே பிரச்சினை இப்போது மட்டுமல்ல, ஆரம்ப காலங்களிலேயும் இருந்தது.

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், 1947ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சோல்பரி அரசியல் யாப்பில், இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இரட்டை உறுப்பினர் அல்லது பல உறுப்பினர் தொகுதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

parliament-600x368அதன்படி, அப்போது, தொகுதி வாரியாக 95 உறுப்பினர்களும், நியமன உறுப்பினர்களாக 6 பேரும் தெரிவாகினர்.

1947ஆம் ஆண்டு நடந்த முதலாவது பாராளுமன்றத் தேர்தலில், கொழும்பு மத்தி தேர்தல் தொகுதி மூன்று உறுப்பினர்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டது. மூவின உறுப்பினர்களும் தெரிவாகும் வகையில் அது உருவாக்கப்பட்டது. அது தவிர, கடுகண்ணாவை, பதுளை, பலாங்கொட, அம்பலாங்கொட, பலப்பிட்டிய ஆகிய தொகுதிகள், இரட்டை உறுப்பினர் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன.

இதன் மூலம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டு தேர்தல் முறையில் மற்றொரு மாற்றம் மேற்கொள்ளப்பட்ட போது, தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டதுடன், மொத்த தேர்தல் தொகுதிகளின் எண்ணிக்கையும் 151 ஆக அதிகரிக்கப்பட்டது.

இதன்போது, பேருவளை, மட்டக்களப்பு, பொத்துவில், ஹரிஸ்பத்துவ ஆகிய தொகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகுதிகளாகவும், கொழும்பு மத்தி மற்றும் நுவரெலிய -மஸ்கெலிய ஆகியன மூன்று உறுப்பினர் தொகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டன.

எனினும் 1977ஆம் ஆண்டு, தேர்தலின் போது, தொகுதிகளின் எண்ணிக்கை 160 ஆக அதிகரிக்கப்பட்டது.

அப்போது, இரட்டை உறுப்பினர் தொகுதியாக இருந்த மூதூர் ஒற்றை உறுப்பினர் தொகுதியாக்கப்பட்டது. எனினும் ஏனைய இரு உறுப்பினர் மற்றும், பல உறுப்பினர் தேர்தல் தொகுதி முறை தொடர்ந்து நடைமுறையிலேயே இருந்தது.

1978ஆம் ஆண்டு குடியரசு அரசியல் யாப்புடன் சேர்த்தே, உருவாக்கப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் போது, தொகுதி வாரி தேர்தல் முறை முற்றாகவே இல்லாமல் செய்யப்பட்டது. இப்போது மீண்டும், தொகுதி வாரி மற்றும் விகிதாசார முறை இணைந்த கலப்பு தேர்தல் முறைமை ஒன்று குறித்து பேசப்படுகிறது.

தற்போது, இரண்டு யோசனைகள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவற்றில் ஏதேனும் ஒன்று நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இதன்படி, 125 ஆசனங்கள் நேரடியாக தொகுதிவாரியான முறையிலும், 75 ஆசனங்கள், மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும், 25 ஆசனங்கள், தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவது முதல் யோசனை.

150 ஆசனங்கள் தொகுதி வாரியாகவும், 75 அல்லது 65 ஆசனங்கள் மாவட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையிலும், 15 அல்லது 25 ஆசனங்கள் தேசியப் பட்டியல் மூலமும் தெரிவு செய்யப்படுவது இரண்டாவது யோசனை. இந்த இரண்டு யோசனைகளில் எது நடைமுறைப்படுத்தப்பட்டாலும், தேர்தல் தொகுதி மீள் நிர்ணயம் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயம். தற்போதைய நிலையில் இலங்கையில் 160 தேர்தல் தொகுதிகள் உள்ளன.

தொகுதி வாரியாக பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் நடைமுறை இல்லா விட்டாலும், இன்னமும் இந்த தொகுதிகள் பாராளுமன்ற, ஜனாதிபதி தேர்தல்களின் போது, வாக்களிப்பு மற்றும் வாக்கு எண்ணிக்கைக்காக பயன்படுத்தப்படுகின்றன.

புதிய தேர்தல் முறைமையில், 125 உறுப்பினர்களோ அல்லது 150 உறுப்பினர்களோ தான், நேரடியாக தொகுதி வாரியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். எஞ்சியோர் கட்சிகள் பெறும் வாக்குகளின் அடிப்படையில் விகிதாசார ரீதியாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இந்தநிலையில், தொகுதி மறுசீரமைப்பு மீண்டும் மேற்கொள்ளப்படும் போது, தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் பாதிப்புகளைச் சந்திக்கும் நிலை ஏற்படும். குறிப்பாக, வடக்கு மாகாணத்தில், போருக்குப் பின்னர், வாக்காளர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்து விட்டது. போரில் உயிரிழந்தவர்கள் மற்றும் போரினால் இடம்பெயர்ந்தவர்களால், வடக்கு மாகாணத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை பாதியாகி விட்டது,

இதன் காரணமாக, புதிய தேர்தல் தொகுதி எல்லை நிர்ணயத்தின் போது வடக்கு மாகாணத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக் கூடிய நிலை உள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இருந்த இரட்டை உறுப்பினர், பல உறுப்பினர் தேர்தல் தொகுதி முறைமை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படாது போனால், சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவம் மேலும் பலவீனப்படுத்தப்படும் ஆபத்தும் உள்ளது.

தற்போதைய நிலையில் தேர்தல் தொகுதி மறுசீரமைப்பின் போது, 50 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்கள் உள்ள தொகுதிகளை ஒன்றிணைப்பதற்கும், 1 இலட்சத்துக்கும் அதிகமாக உள்ள தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கும் ஒரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை, 1000 சதுர கி.மீற்றருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட தொகுதிகளைப் பிரிப்பது குறித்தும் யோசிக்கப்படுகிறது.

இந்தமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்போது யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகள் மறைந்து போய் விடும்.ஊர்காவற்றுறை, வட்டுக்கோட்டை, மானிப்பாய், உடுப்பிட்டி, பருத்தித்துறை, சாவகச்சேரி, நல்லூர் ,யாழ்ப்பாணம் ஆகிய 8 தொகுதிகள் 50 ஆயிரத்துக்கும் குறைவான வாக்காளர்களைக் கொண்டுள்ளதால், ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படக் கூடும்.

இதனால், தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகள், 6 அல்லது ஐந்தாக குறைவடையும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் தான், இடம்பெயர்ந்தவர்கள் மீளவும் குடியேற்றப்படும் வரையில், 10 ஆண்டுகளுக்கு வடக்கில் தேர்தல் தொகுதி மறுசீரமைப்பை பிற்போட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. ஆனால், இந்தக் கோரிக்கை எடுபடுமா என்று தெரியவில்லை.

ஏனென்றால், தமிழரின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளிலேயே கவனம் செலுத்தும் தரப்புகளே பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டுள்ள நிலையில், வடக்கில் தமிழரின் பிரதிநிதித்துவ உரிமையைக் காப்பாற்றும் ஒரு நடவடிக்கைக்கு அவர்கள் ஆதரவளிப்பார்களா என்பது சந்தேகம் தான்.

வீரகேசரி – 19 – 04 – 2015

Leave a Reply