மறைந்து போகும் நம் அடையாளங்கள்!

eelamurasu-vethaஒவ்வொரு இனமும் தமக்கே உரித்தான தனித்துவமானஅடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. கலை,கலாச்சாரம்,பண்பாடு இவை யாவற்றிற்கும் மேலாக மொழி என்பது ஓர் இனத்தின் முக்கிய அடையாளமாகும். ஒவ்வொரு இனங்களும் தமதுஅடையாளங்களை நிலைநிறுத்துவதிலும் இவை அழிந்துபோகாமல் பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற வேளை தமிழர்களாகியநாம் எவ்வளவுதூரம் எமதுஅடையாளங்களுக்கு முதன்மையளிக்கின்றோம் ?

அதை அழியாது காக்க எவ்வளவு முயல்கின்றோம் என்றால் அது வருத்தத்திற்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. தமிழனுக்கே உரித்தான நாடு ஒன்று இதுவரை இல்லை எனினும் உலகில் தமிழரில்லாத நாடுகள் இல்லை எனும் அளவிற்கு பரந்து வாழ்கின்ற இனமாக தமிழினம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கின்றது.

‘தமிழுக்கு நிகர் தமிழே’ எனும் அளவிற்கு இனிமையானது எம் தாய்மொழி.தமிழ் புலவர்களால் புகழ்ந்துபாடப்பட்டு இப் பூவுலகில் வாழ்ந்து வராலாற்றால் வானுயர்ந்து மகிமைபெற்று நிற்பது எம் தாய் மொழி. ‘தழிழுக்கு அமுதென்று பேர் அந்த தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்’ என்றுபாடினார் கவிஞர் பாரதியார்;;.

ஆனால் எம் தாய்மொழியை விட்டு பிறமொழிகளை அமுதாக உண்டு உயிராக எண்ணிவாழும் எத்தனையோ தமிழர்களை எண்ணி வேதனை கொள்வதை தவிர வேறு வழியில்லை. வெளிநாடுகளில் வாழும் எம் பிள்ளைகள் தம் தாய்மொழியே தெரியாது இருப்பதும் தாய்மொழியை கேலிசெய்வதும்,தாய்மொழியில் பேசுவதைதரம் குறைவாகப் பார்ப்பதும் மிகவும் வருத்தமளிக்கின்ற விடயமாகவே இருக்கின்றது.

இன்றைய இளையதலை முறையினர் தமிழ் மொழியை மறந்து தமிழ் கலாச்சாங்களை மறந்து மேலைத்தேய வாழ்க்கைக்குள் முழ்கிப்போய் வாழ்கின்றனர். வாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு வாழ்வது அவசியமானதே அதற்காக எமது அடையாளங்களை மதிக்காது மற்றைய இனத்தின் அடையாளங்களை தமக்குடையதாக்கி பெருமை கொள்வது ஏற்றுக்கொள்ளத் தக்கசெயலல்ல.

இது வெளிநாடுகளில் மட்டுமல்ல நம் நாட்டிலும் எத்தனையோபேர் இந்த அறியாமை இருளுக்குள் மூழ்கிக் கொண்டுதான் வருகின்றார்கள். ஒருதமிழனைப் பார்த்து நீங்கள் தழிழா? என்று கேட்கின்ற துர்ப்பாக்கிய நிலைஉருவாகியுள்ளது. அதனைவிட தமிழன் என்று தம்மை அடையாளப்படுத்திக் கூற பலர் வெட்கித்து நிற்பதனை என்னவென்று சொல்வது.

ஆங்கிலம் தெரியாத ஆங்கிலேயர்களில்லை. சீனம் தெரியாத சீனர்கள் இல்லை, பிரெஞ்சு தெரியாத பிரென்சியர்களில்லை. ஆனால் தமிழ் தெரியாத தமிழர்கள் இன்று எத்தனைபேர்? ஒவ்வொரு இனமும் தமது அடையாளங்களை கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறது. ஆனால் எம்மவர் பலர் இழிவு என எண்ணுகின்றனர்.

மற்றைய இனத்துப் பிள்ளைகள் தம் இனத்தைச் சார்ந்தவர்களோடு தமது தாய் மொழியிலேதான் பேசுகின்றனர். எம்மவர் மட்டும் தம் தாய் மொழி பேச வெட்கப்படுவது ஏன்? உண்மை என்ன வென்றால் ஆங்கிலம் பேசுவதால் நாம் ஆங்கிலேயானாய் மாறிவிட முடியாது என்பதனைஅறியாமலுமில்லை. மொழிகள் எத்தனை வேண்டுமானாலும் கற்கலாம். அது மிகவும் வரவேற்கத்தக்கதே. அதற்காக தாய் மொழி தெரியாது பிறமொழிகளை கற்பதுவருந்தத் தக்கதே.

உதாரணமாக சுவிஸ் நாட்டு அரசு அங்குவாழும் ஒவ்வொரு பிள்ளைகளும் தத்தம் தாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பதனை பெரிதும் வலியுறுத்துகிறது. இதன் மூலம் அந்நாடு தாய் மொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது. எந்தவொரு குழந்தையும் பலமொழிகளை கற்கின்றவல்லமையினை கொண்டிருக்கின்றா்.

எனவே பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளோடு தாய் மொழியில் பேசுவதால் இவர்கள் அதனை தம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க முடியும்.தாய் மொழியின் அவசியத்தினை அதன் பெருமையினை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு கற்றுத்தருதல் மிகவும் அவசியமானதாகும். ஒழுக்கம் நிறைந்த நமது கலாச்சாரம் பண்பாடு இவற்றைவிட்டுஅரைகுறை ஆடைகளோடு ஆங்கிலம் பேசிக்கொண்டு களியாட்டம் ஆடுதல் அவசியமானதா?

உலக பொதுமொழி அறிவு என்பது அத்தியாவசியமானதென்பதை யாராலும் மறுக்க முடியாது. தேவை கருதி பிறமொழிகளை கற்றுத் தேர்ச்சிபெறுதல் கட்டாயமானதே. அதில் காட்டும் அக்கறையினை அதற்களிக்கும் முக்கியத்துவத்தை ஏன் தம் தாய் மொழிக்கும் ஏனைய தம் அடையாளங்களுக்கும் கொடுக்க விளையவில்லை என்பதுதான் கருத்திலெடுக்க வேண்டிய விடயம்.

எமது அடையாளங்களை காக்கவேண்டியதும் அதனை வளர்க்க வேண்டியதும் ஒவ்வொரு தமிழனுடைய கடமையாகும். மேலைத்தேய கலாச்சாரங்களுக்கு எடுபட்டு தாய் மொழியை பேசவெட்கித்து அறியாமை என்ற இருளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் எம் மக்களை எண்ணி வெட்கித்து நிற்பதா? வேதனைப் படுவதா? அதிலிருந்து அவர்களை மீட்பது எவ்வாறு?

எமது இனிய தாய் மொழியாகிய தமிழ் மொழியை தமிழராகிய ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும். இவ் உலக தோற்றத் தோடு தோன்றிய இப் பெருமொழியை இன்றும் என்றும் வளர்க்க அனைவருமே முன் வரவேண்டும். இதன் முக்கிய கடமை, ஒவ்வொரு தமிழ்ப் பெற்றோர்களுக்குமே. எத்தகைய சூழலுக்குள் வாழ்ந்தாலும் எம் தாய் மொழியை,நமக்கே உரித்தான கலை,பண்பாடு,கலாச்சாரங்களை கண் போலகாத்து இதனை வளர்க்கவும் வேண்டும்.

எப்பொழுது நம் இன அடையாளங்ளை நாமே விட்டுக் கொடுக்கின்றோமோ அன்று நம் அடையாளத்தையும் விட்டுக்கொடுக்கின்றோம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்; எப்பொழுது எம் இனத் தனித்துவத்தை இழக்கத் தயாராகிறோமோஅன்றே நம் தனிப்பட்ட தனித்துவத்தையும் இழக்கின்றோம் என்பதை யாரும் எளிதில் மறந்து விடவோஅன்றி மறுத்து விடவோ முடியாது.

விஜயமகள்

படம் – https://kovaikkavi.wordpress.com

Leave a Reply