ஆழ்கடல்கடந்த அவுஸ்திரேலியப் பயணம் (பகிர்வு)

refugeeboatமூன்று தசாப்தகாலமாக இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழ்மக்களின் தமிழீழ விடுதலைப் போராட்டம் கடந்த 2009-ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிங்களப்பேரினவாத அரசு உலக வல்லாதிக்கசக்திகளின் உதவியுடன் இரும்புக்கரம்கொண்டு அடக்கப்பட்டது. இதன் பிற்பாடு வடக்கு கிழக்குவாழ் தமிழ்மக்கள் சிங்களப்பேரினவாதசக்திகளாலும் அதன் கைக்கூலிகளாலும் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கும் சொல்லொணாத்துன்ப துயரங்களுக்கும் முகம்கொடுத்துவருகின்றனர்.

இதன்விளைவாகவே குறிப்பாக 2009-ம்ஆண்டிற்குப்பின்னரான காலப்பகுதிகளில் இலங்கையிலிருந்து பல ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் படகுகளில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு வந்திருந்தமை யாவரும் அறிந்த விடயம். அதிலும் குறிப்பாக 2011-ம் 2012-ம்ஆண்டுகளில் இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த படகுகள் தொடர்பான செய்திகளையும் அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்த படகு நடுக்கடலில் சிறிலங்காக்கடற்படையினரால்; கைதுசெய்யப்பட்ட விடயங்கள் தொடர்பான செய்திகளையும் அனேகமான ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டிருந்தன. எனக்கு அறிமுகமானவர்களும் கடல்ப்பயணத்தை மேற்கொண்டு வெற்றிகரமாக அவுஸ்திரேலியாவை சென்றடைந்திருந்தார்கள். இந்தச்சூழ்நிலையில் பல நெருக்கடிகளுக்கும் இடர்களுக்கும் நானும் முகம்கொடுத்துக்கொண்டிருந்ததால் வேற்றுநாடொன்றில் தஞ்சம்கோரவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கும் ஏற்பட்டது.

ஆகவே 2012-ம்ஆண்டு ஓகஸ்ட்மாதத்தில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் முயற்சியில் நானும் கடும்பிரயத்தனம் எடுத்தேன். இதற்கென பெருந்தொகையான பணத்தை பெரும்சிரமத்தின் மத்தியில் ஒழுங்குசெய்து அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை அனுப்புகின்ற முகவரை தேடிப்பிடித்து இதற்கான தீவிரமுயற்சிகளில் இறங்கினேன். இதன்நிமிர்த்தமாக 2012-ம்ஆண்டு ஓகஸ்ட்மாதம் 22-ம்நாளன்று அதிகாலை 4.00மணியளவில் ஆனையிறவு-இயக்கச்சிசந்தியில் குறிப்பிட்ட அவுஸ்திரேலியப்பயண ஏற்பாட்டு முகவருடன் இணைந்துகொண்டேன். அதிலிருந்து தொடர்ந்தது எனது அவுஸ்திரேலியப்பயணம். கயஸ்வாகனம் ஒன்றில் என்னை ஏற்றிக்கொண்டார்கள். அந்த வாகனத்தில் ஏற்கனவே ஏறிக்கொண்ட ஏழு அல்லது எட்டுப்பேர் இருந்தார்கள். வாகனம் ஏ-9வீதியால் பயணித்து. பரந்தன்சந்தியால் திரும்பி முல்லைத்தீவுவீதியில் பயணித்தது. புதுக்குடியிருப்பில் தேசியத்தலைவரின் வீடு பார்வையிட்டு கடற்புலித்தளபதி சூசையின் வீடு பார்த்து பின்னர் முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு முள்ளியவளை என அன்றைய பகற்பொழுது சுற்றுலாப்பயணமாக அமைந்தது.

பொழுதுசாயும்நேரத்தில் நாம் பயணித்த கயஸ்வாகனம் வந்தவழியே மீண்டும் திரும்பி பரந்தன்-முல்லைத்தீவுவீதிவழியால் பயணித்து பரந்தன் சந்தியால் இடதுபுறம் திரும்பி ஏ-9வீதியில் கிளிநொச்சியையும்தாண்டி பயணித்துக்கொண்டிருந்தது. வாகனச்சாரதியையும் எமக்குப்பொறுப்பாகவந்த அவுஸ்திரேலியப்பயணத்தின் ஏற்பாட்டாளரையும் தவிர மற்றைய எவருக்கும் வாகனம் எந்த இடத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றது என்ற விடயம் தெரிந்திருக்கவாய்ப்பில்லை. இவ்வாறு சென்றுகொண்டிருந்த வாகனம் முறிகண்டிப்பிள்ளையார் கோவில்வரையும் சென்நு அங்கு ஏற்கனவே தரித்துநின்ற வாகனங்களுக்கு மத்தியில் எமது வாகனமும் தரித்துநின்றது. எங்களுக்குப்பொறுப்பாகவந்த குறித்த முகவர் “எவரையும் வாகனத்திலிருந்து இறங்கவேண்டாம். தான் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வந்துவிடுவேன்” என்று எச்சரித்துவிட்டு புறப்படமுற்படுகையில் நான் அவரிடம் எஙகள் சார்பாக யாராவது ஒருவர் முறிகண்டிப்பிள்ளையாரை வணங்கிவிட்டு வருவதற்கு அனுமதி தருமாறு வேண்டினேன். சிறிது தயக்கத்தின்பின்னர் ஒவ்வொருவராக இறங்கிச்சென்று கோவில் கும்பிட்டுவிட்டு வருமாறு கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார். நாங்கள் ஒருவர் இருவராக வாகனத்திலிருந்து இறங்கிச்சென்று முறிகண்டிப்பிள்ளையாரை கற்பூரம் கொழுத்தி வணங்கிவிட்டுவந்து வாகனத்தில் ஏறியிருந்தோம். அனைவரதும் வேண்டுதல்களும் ஒன்றாகத்தான் இருந்திருக்கவேண்டும். அதாவது ஆபத்துக்கள்நிறைந்த அவுஸ்திரேலியப்பயணம் நல்லபடியாக அமையவேண்டும் என்பதைத்தவிர பிள்ளையாரிடம் வேறு வேண்டுதல்கள் எதுவும் அப்போதைக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை.

இரவு 10.00மணிக்குப்பிற்பாடுதான் எமது பயணஏற்பாட்டுமுகவர் கூளர் வாகனத்துடன் எம்மிடம் வந்தார். ஆனால் அந்த வாகனத்தில் எந்தவிதமான குளிரூட்டி வசதிகளும் இருக்கவில்லை. கூளர்வாகனத்துடன் வந்த அவுஸ்திரேலியப்பயண ஏற்பாட்டாளரான சுலக்சன் எம்மையெல்லோரையும் உடமைபாக்குகளையும் எடுத்துக்கொண்டு உடனடியாக கூளர்வாகனத்தில் ஏறுமாறு பணித்தார். அவசரஅவசரமாக எமது உடமைபாக்குகளையும் எடுத்துக்கொண்டு கூளர்வாகனத்தில் ஏறிக்கொண்டோம். வாகனத்திற்குள் எம்மைப்போன்று அவுஸ்திரேலியாவிற்கெனப்புறப்பட்டவர்கள் இன்னும்சிலர் இருப்பதை அவதானித்தோம். நாம் நின்ற முறிகண்டிப்பிள்ளையார் ஆலயச்சூழல் வடபகுதியின் மையத்தில் அமைந்திருப்பதாலும் பொதுவாக வாகனங்கள் தரித்துநின்று செல்லும் இடமென்பதாலும் எங்களது செயற்பாடுகளை எவரும் கவனத்திற்கொண்டதாகவோ அன்றி சந்தேகத்திற்கிடமாக நோக்கியதாகவோ தெரியவில்லை. கூளர்வாகனத்தில் அனைவரும் ஏறியவுடன் வாகனப்பின்கதவுகள் மூடப்பட்டதும் வாகனம் புறப்பட்டது. மூடியவாகனத்திற்குள் காற்றோட்டம் இல்லாமல் பெரும்அவஸ்தைப்பட்டு அடைந்துகிடந்தோம்.

ஆனையிறவில் அமைந்திருக்கின்ற இராணுவத்தினரின் காவலரணில் வாகனங்களும் உந்துருளிகளும் பதிவுசெய்துவிட்டுத்தான் செல்வது நடைமுறையாகவிருக்கின்றது. ஆனையிறவு காவலரணில் இராணுவத்தினர் எங்கே செல்கின்றீர்கள் என்று கேட்டால் மடுமாதா தேவாலயத்திற்குச்சென்றுவிட்டு வருகிறோம் தாளையடி தேவாலயத்தில் தங்கப்போகிறோம் என்று சொல்லுமாறு எமக்கு கூளர்வாகனத்தில் பொறுப்பாகவந்த இன்னொரு முகவர் கூறினார். காற்றோட்டம் இல்லாததால் வியர்வையால் குளித்து பல அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து கடற்கரை கிட்டாதா என்ற ஏக்கத்துடன் பயணித்துக்கொண்டிருந்தோம். ஆனையிறவு இராணுவக்காவலரணை அடைந்ததும் வாகனச்சாரதி மட்டும் இறங்கிப்போய் பதிவு செய்துவிட்டு வந்தார். அவர் என்ன கூறிப்பதிவுசெய்தார் என்று எங்களுக்குத்தெரியாது. குறித்த காவலரண் அண்மித்ததும் நாங்கள் எல்லோரும் அமைதியாகவிருந்தோம். வாகனத்தில் வேறு ஆட்கள் இருப்பதாகக்காட்டிக்கொள்ளவில்லை.

மீன்கள் கருவாடுகள் மற்றும் இதரபொருட்கள் ஏற்றுவதற்குப்பயன்படுத்தப்படும் வாகனத்தில் அதுவும் கதவுகள் மூடியநிலையில் ஆடகள் இருப்பார்கள் என்பதை எவரும் நினைத்துக்கூடப்பார்த்திருக்கமாட்டார்கள். சாதாரணமாகவே பதிவைமுடித்துவிட்டுவந்த சாரதி வாகனத்தை மீண்டும் ஓட்டத்தொடங்கினார். இப்போது நாம் படகேறப்போகின்ற இடம் வடமராட்சிக்கிழக்குப்பிரதேசம் என்பதை ஊகித்துக்கொண்டோம். வடமராட்சிக்கிழக்குப்பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதென்றால் பொதுவாகவே இரண்டு பாதைகள் உள்ளன. ஓன்று இயக்கச்சிசந்தியால் செல்லலாம்.மற்றது புதுக்காட்டுச்சந்தியால் செல்லலாம். ஆனால் வாகனத்தின் கதவுகள் மூடியிருந்ததால் எந்தப்பாதையால் சென்றது என்பது எனக்குத்தெரியாது.

குறிப்பிட்டநேரத்தின்பின்னர் “இறங்கவேண்டிய இடம் அண்மிக்கின்றது. எல்லோரும் உங்களது உடமைபாக்குகளை கைகளிலெடுங்கள். வாகனத்திலிருந்து இறங்கும்போது பாதணிகளை வாகனத்திற்குள்ளேயே கழட்டிவிடுங்கள்.” என எமக்குப்பொறுப்பாகவந்த முகவர் அறிவுறுத்தினார். சிறிதுநேரத்தின்பின்னர் வாகனம் ஓரிடத்தில் தரித்துநின்றதும் எல்லோரையும் பாக்குகளையும் எடுத்துக்கொண்டு இறங்கி முன்னுக்கு ஒருவர் பாதைகாட்டிச்சென்றுகொண்டிருக்க அவரைப்பின்தொடர்ந்து அனைவரும் சென்று கடற்கரையில் சிறிய மீன்பிடிப்படகுகள் தயார்நிலையில் நிற்கின்றது அதில் ஏறுமாறு பணிக்கப்பட்டது. நாம் வாகனத்திலிருந்து இறங்கிய இடம் தாளையடிக்கும் செம்பியன்பற்றுக்கும் இடைப்பட்ட வெளிப்பகுதியாகும். இதை நெல்லியான்வெட்டை என்று சொல்வார்கள்.

நாம் வாகனத்திலிருந்து இறங்கி எமக்குப்பாதை காட்டியவரின் பின்னால் வேகமாகச்சென்றோம். இந்தநேரத்தில் எல்லோரும் பயத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டார்கள். ஏனெனில் அனைத்து இடங்களிலும் இராணுவமினிமுகாம்களும் இராணுவக்காவலரண்களும் உள்ளநேரத்தில் ரோந்துசெல்கின்ற இராணுவத்தினரின் கண்களில் அகப்பட்டால் பயணம் தடைப்படுவதோடு வேறுபல பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்கநேரிடும். காற்றோட்டமில்லாது நீண்டநேரம் வாகனத்திற்குள் அடைபட்டு வந்ததினால் வாகனத்தால் இறங்கி கனதியான எனது உடமைபாக்கையும் சுமந்துகொண்டு நடந்தபோது தலை சுற்றியது. ஒருவாறு சமாளித்துக்கொண்டு உடம்பில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நிலாவெளிச்சத்தில் வேகமாக நடந்துசென்று கடற்கரையில் தண்ணிக்கரையில் நான்கு அல்லது ஐந்து புளுஸ்ரார் வகையிலான சிறியமீன்பிடிப்படகுகள் தயார்நிலையில் நின்றிருந்தன. அவற்றில் ஒரு படகில் முதலாவதாக நான் ஏறிக்கொண்டேன். மற்றையபடகுகளிலும் ஆட்கள் ஏறியதும் படகுகள் புறப்பட்டன.

குறிப்பிட்டதூரத்தில் அவுஸ்திரேலியா செல்வதற்கான பெரியபடகு தயார்நிலையில் எமக்காக காத்துநின்றது. அந்தப்பெரியபடகில் நாங்கள் அனைவரும் ஏறிக்கொண்டதும் எம்மை ஏற்றிவந்த சிறிய புளுஸ்ரார்படகுகள் கரை நோக்கி விரைந்தன. நாங்கள் படகில் ஏறியதும் ஆட்களை எண்ணினார்கள். இருபத்தாறுபேர்வரையில் இருந்தோம். சம்பிரதாயமுறைப்படி தேங்காய் உடைத்ததும் படகு புறப்பட்டது. கடற்படையினரின் கண்களில் படாதிருக்க அனைவரையும் படுக்கும்படி கூறினார்கள். நாங்கள் அனைவரும் படுத்திருந்தோம். சமிந்த என்ற சிங்களப்படகோட்டி படகை செலுத்திக்கொண்டிருந்தார். அன்றைய இராப்பொழுது மீன்பிடிப்படகைப்போலவே ஏனய மீன்பிடிப்படகுகளுக்கிடையில் எமது படகும் பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தது. தண்ணீர் மற்றும் சமையல்ப்பொருட்களும் படகில் ஏற்றப்பட்டிருந்தது. சமையல்எரிவாயு நிரப்பப்பட்ட சிலிண்டர்களும் ஏற்றப்பட்டிருந்தன. இதனால் ஒருநாளைக்கு ஒருவேளை உணவு மற்றும் தேனீர் என்பன ஓரளவிற்கு திருப்தியாகக்கிடைத்தன. தூரத்தே கடற்படையினரின் படகுகளை அவதானித்தால் படகோட்டியும் இன்னும் மூன்றுபேரும் இயந்திரத்தளத்தில் நிற்க மற்றய அனைவரும் படகின் கீழ்த்தளத்தில் இறங்கிவிடுவோம். பின்னர் சந்தேகத்திற்கிடமான படகுகள் கண்களிலிருந்து மறைய மேல்தட்டில் ஏறிவிடுவோம். பெரியகடலலலைகளில் படகு தாவியெழுகின்றபோது கடல்த்தண்ணீர் எங்கள் எல்லோரையும் மூடிவார்க்கும். இவ்வாறு மூன்று நாட்களாக எமது அலைகடல்ப்பயணம் தொடர்ந்தது.

மூன்றாம்நாள் மாலைப்பொழுதில் படகோட்டி சமிந்தவிற்கு உதவிப்படகோட்டியாக வந்தவன் (தமிழ்ப்பொதுமகன்) ஒருகுண்டைத்தூக்கிப்போட்டான். அது என்னவென்றால் “படகின் இயந்திரம் வேகம் எடுக்குதில்லை. உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரும் போதாது. இந்த இயந்திரத்தோடு அவுஸ்திரேலியாவிற்கு செல்வது சாத்தியமில்லை. ஆதலால் படகை மட்டக்களப்பு-வாழைச்சேனை கரைக்கு விடுவோம்.” ஏன்றான். ஆனால் படகு கரையவிடவேண்டும் என்ற முடிவுக்கு உண்மையான காரணம் இதுவல்ல. அத்துடன் படகு கரைக்குவிடுவதற்கு வாழைச்சேனையை தேர்வுசெய்ததற்கான காரணம் எமது அவுஸ்திரேலியப்பயண ஏற்பாட்டுமுகவர்களில் ஒருவர் அங்கு இருக்கிறார். குறித்த எமது படகில் பயணம்செய்த இருபத்தாறுபேர்களில் சிலரைத்தவிர மற்றயவர்கள் முழுமனதோடு இந்தப்பயணத்தை மேற்கொள்ளவில்லை.

அத்துடன் இந்த நீண்டதூரக்கடல்ப்பயணம் தொடர்பாக அவர்களுக்கு போதியவிளக்கம் கொடுக்கப்படவில்லை. அப்போது நிலவிய கடலலைகளின் வேகமும் காற்றின் வேகமும் கடலில் பரிச்சயமானவர்களுக்கு சாதாரணமானதே. ஆனால் நான் உட்பட இன்னும் அறுவரைத்தவிர மற்றைய அனைவரும் அப்போது நிலவிய காற்று கடலலலைகளின் வேகத்திற்குப்பயந்து விட்டார்கள். இதுதான் படகு கரைக்கு திருப்புவதற்கு உண்மையான காரணமாகும். படகு கரைக்குத்திருப்பவேண்டும் என்ற முடிவை நானும் மற்றைய ஆறுபேரும் கடுமையாக எதிர்த்தோம். ஆனால் படகில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் எப்படியாவது வீடடிற்குச்செல்லவேண்டும் ஆதலால் படகு கரைக்குவிடவேண்டும் என்று அடம்பிடித்ததால் எங்களால் ஒன்றும்செய்யமுடியாமல்ப்போக இரண்டுநாட்களாக வாழைச்சேனை கரையைநோக்கி படகு ஓடியது.

ஐந்தாம்நாள் மாலைவேளையில் வாழைச்சேனைக்கடற்பரப்பிற்குள் எமது படகு பிரவேசித்தது. அன்றையதினம் இரவு படகோட்டி சமிந்தவும் இன்னும் ஐவரும் படகில் நிற்க மற்றய அனைவரும் நானும் இந்தப்பயண ஏற்பாட்டுமுகவர்களில் மற்றொருவரான சூட்டிஐயாவின் உதவியுடன் இரண்டு சிறியபடகுகளில் கரையை அடைந்தோம். மறுநாள் அதிகாலையிலேயே என்னைத்தவிர மற்றைய அனைவரும் தத்தமது வீடுகளுக்குச்சென்றுவிட்டார்கள். நான் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியுடன் நின்றதால் நான் பிரதான முகவரான சுலக்சனுடன் தொடர்புகொண்டு அவரின் ஏற்பாட்டில் அன்றைய பகல் முழுவதும் சூட்டிஐயாவின் வாடியிலேயே தங்கினேன். அன்றைய இரவு புலனாய்வாளர்களின் கவனம் கடற்கரையோரத்தில் இருந்ததால் சுலக்சன் என்னைக்கூட்டிச்சென்று வாளைச்சேனையில் அமைந்திருந்த முஸ்லீம் லொட்சில் தங்கவிட்டிருந்தார். மறுநாள் இரவு கடலில் தரித்துநின்ற குறித்த படகு அவுஸ்திரேலியாவுக்குப் புறப்படுவதாகவும் அதில் பயணம் செய்யும் குழுவில் என்னையும் இணைத்துவிடுவதாகவும் பிரதானமுகவர் சுலக்சன் வாக்குறுதியளித்தார்.

ஆனால் அவுஸ்திரேலியப்பயணத்திற்கு படகு ஏறுவதற்காக மேலும் ஒருமாதகாலத்திற்கு பிரதானமுகவரான சுலக்சனுடன் இழுபடப்போகின்றேன் என்பதை அப்போதைக்கு நான் அறிந்திருக்கவில்லை.

Leave a Reply