தமிழக தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் திட்டி வாசல்!

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் தற்கொலைகளைப் பிரதிபலிக்கும் படமாக திட்டி வாசல் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமூகத்துக்கு எதிரான கோபமே தற்கொலை என்பது அண்மையில் நடந்து வரும் தற்கொலைகள். தொடர் தீக்குளிப்புகள் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. ஆனால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்ன செய்வது,?

சராசரி மனிதர்கள் நீதியை தேடி காவல்துறை வருகின்றனர். அங்கு அவர்களுக்குண்டான நீதியும் குறைந்தபட்ச மரியாதையும் கிடைப்பதில்லை.

பிறகு வேறு வழியின்றி கலெக்டர் அலுவலகம் சென்று மனு தருகின்றனர். எந்தவித நடவடிக்கையுமில்லை என்பதால் மக்களும்  பலமுறை மனு தந்து கொண்டே இருக்கின்றனர்.

தமது பிரச்சனைக்கு தீர்வு எட்டவில்லை என வருந்துகின்றனர். சிலர் விரக்தியடைகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் நீதி கிடைக்காத சாமானிய மக்கள் வாழ்வை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் விரக்தியின் உச்சத்திற்கு சென்று விடுகின்றனர். வேறு வழியின்றியும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து இறக்கின்றனர்.

அரசும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளும் அதி தீவிரமாக செயல்படுவதுபோல பாவ்லா காட்டி அச்சம்பவத்தை மூடி மறைத்துவிடுகின்றனர்.

கண்ணெதிரில் சிறுவர்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பல கோணங்களில் புகைப்படமும் வீடியோவும் எடுத்து தனது திறமையை நிரூபித்துக்கொள்கிறது மனிதநேயமில்லா ஒரு கூட்டம்.

இப்படிப்பட்ட சாமானிய மக்களின் பிரச்சனைக்காக கலெக்டர் அலுவலகம் முன்பு ஒரு பெண் இறந்துவிடுகிறாள். இறந்த பெண் யார்?. அவளின் பிரச்சனைகள் என்ன? அதன் தீர்வு என்ன? என்பதே ‘திட்டிவாசல் ‘படத்தின் மையக்கதை. சமூக யதார்த்தமும் மக்கள் வாழ்க்கையும் பிரதிபலிக்கும் இக்கதை பிடித்துப் போய் நாசர் முக்கிய வேடமேற்று நடித்துள்ளார்.

வருகின்ற நவம்பர் 3ம் தேதி இந்த திட்டி வாசல்வெளியாகிறது. K3 சினி கிரயேஷன்ஸ் வழங்க சீனிவாசப்பா தயாரித்துள்ளார். பிரதாப் முரளி என்ற புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். அண்மையில் தமிழகத்தில் நடந்த தற்கொலைகள் பிரதிபலிக்கும் படமாக ‘திட்டி வாசல் ‘உருவாகியிருக்கிறது.