அவுஸ்ரேலியா செய்தி நிறுவனம் மீதான அவதூறு வழக்கு!

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தொடர்ந்த வழக்கில் வெற்றி பெற்றார்.

அவுஸ்ரேலியா செய்தி நிறுவனமான பேர் பேக்ஸ் கடந்த 2015-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டது. பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையில் கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு உலக கோப்பையின் போது வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு உதவியாக இருந்த பெண்ணிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தது.

இதற்கு கெய்ல் மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் அந்த நிறுவனத்தை தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் உள்ள பல பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டன. இதனால் மிகவும் கோபமடைந்த கெய்ல் பேர் பேக்ஸ் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கிறிஸ் கெய்லிற்கு எதிராக ருசேல் என்ற அவுஸ்ரேலியா பெண் சாட்சி கூறினார். ஆனால் அவர் தகுந்த ஆதாரங்கள் வழங்காததால் இந்த வழக்கு கிறிஸ் கெய்லிற்கு சாதகமாக முடிவடைந்தது.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல், ‘நான் எந்த தவறும் செய்ய வில்லை. வழக்கில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது’ என சிட்னியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.